கொடைக்கானலுக்கு இ-பதிவு முறை நீக்கப்படுவது எப்போது?
கொடைக்கானல் செல்ல இ-பதிவு முறை தொடர்ந்து அமலில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வியாபாரமும் பாதிப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் இருந்த இ-பாஸ் நடைமுறை பின்னர் படிப்படியான தளர்வுகளால் விலக்கிக்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை விலக்கிக் கொள்ளப் பட்டாலும் சுற்றுலா இடங்களுக்கு மட்டும் இம் முறை அமலில் இருந்தது. அதை மாற்றி தமிழக அரசு இ-பதிவு (TN-e Registration) கொண்டு வந்தது.
இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் இ-பதிவு பெற்ற பின்னரே செல்ல வேண்டும் என்ற நிலை தற்போது வரை தொடர்கிறது. கொடைக்கானலுக்கு பொது போக்குவரத்தான பஸ்களில் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பதிவு தேவை இல்லை. ஆனால் இருசக்கர வாகனம், கார், வேன், தனியார் வாடகை பஸ் என தனியார் வாகனங்களில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இ-பதிவு செய்த பின்னரே கொடைக்கானலுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இதற்காக கொடைக்கானலின் நுழைவாயில் வத்தலக்குண்டு கொடைக்கானல் பிரதான சாலையான காமக்காபட்டியிலும், பழனி கொடைக்கானல் பிரதான சாலையில் உள்ள பழனி அடிவாரத்திலும் மற்றும் கொடைக்கானலில் உள்ள நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இ-பதிவை ஆய்வு செய்த பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆய்வுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.தவிர பதிவு செய்த சுற்றுலாப் பயணிகள் இரவு 10 மணிக்கு பின் அனுமதிக்கப்படுவதில்லை. அதேநேரம் விஐபிகள் விவிஐபிகள் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் எந்த தங்கு தடையும் இன்றி எந்த நேரத்திலும் கொடைக்கானலுக்கு சென்று வருவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் கொடைக்கானலில் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில் இ-&பதிவு நடைமுறையால் அவற்றை ரசித்து செல்ல ஏராளமான சுற்றுலா பயணிகள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்கும் எனவே தமிழக அரசு இ-பதிவு நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கொடைக்கானல் பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து கொடைக்கானல் வியாபாரிகள் கூறுகையில் கொரோனா ஊரடங்கால் கடந்த கோடை சீசனில் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. வியாபாரிகள் அனைவரும் நஷ்டத்தை சந்தித்தனர். பலரும் வேலை இழந்தனர். தற்போது தான் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீராகி வருகிறது எனினும் இந்த இ-பதிவு நடைமுறையால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக உள்ளது. எங்களின் வாழ்வாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஊட்டியில் இ-பதிவு முறையை ரத்து செய்துள்ளனர். அதேபோல் கொடைக்கானலுக்கும் இ-பதிவு முறையை ரத்து செய்து தமிழக அரசு கொடைக்கானலில் சுற்றுலாவை நம்பி வாழக்கூடிய பொது மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு தமிழக அரசு முன் வரவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
– முகமது அமரிப்