திருவண்ணாமலை கலெக்டருக்கு எதிராக கொதிக்கும் அரசு ஊழியர்கள் !
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் சுணக்கம் காட்டுவதாகவும், பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு ஆணைகளை வழங்காமல் அலைக்கழிப்பதாகவும் கலெக்டர் கந்தசாமிக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்களின் ‘வாட்ஸ்அப்’ குழுவுக்கு, கடந்த 18-ம் தேதி ஆடியோ ஒன்றை கலெக்டர் அனுப்பினார். அந்த ஆடியோவில், “ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முறையாகச் செயல்படுத்துவது இல்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கிறது. இன்றைக்கு நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அது சம்பந்தமான புகார்கள் வந்திருக்கு. திங்கட்கிழமை உங்களுக்கு உச்சக்கட்டம். ஒண்ணு நான் இந்த மாவட்டத்தில் இருக்கிறேனா, இல்ல நீங்கள் பணியில் இருக்கிறீர்களா? என்பதை நீங்களே முடிவு பண்ணிக்கணும்.
திங்கட்கிழமைக்குள் அனைவருக்கும் வீடு ஒதுக்கவில்லையென்றால் அன்னைக்கு எத்தனை பேரை வேண்டுமானாலும் சஸ்பெண்டு செய்ய நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் தவறு செய்வதைப் பார்த்துக்கொள்ள, நான் இங்கு உட்காரவில்லை. தப்பு செய்பவர்களுக்கு, காவல் காப்பவன் நான் இல்லை’’ என்று பேசியிருந்தார். இந்த ஆடியோ மக்களிடையே வைரலாகப் பரவியது.
கலெக்டரின் இந்த செயல்பாட்டைக் கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், முழுவதும் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், வரும் 25-ம் தேதி அன்று சென்னையில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிட உள்ளதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூறுகையில், “றிவிசீகி- திட்டத்தின் பட்டியல் 2011-ம் ஆண்டு தயார் செய்யப்பட்டதாகும். இத்திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் இலக்கு 24,723 ஆகும். அதில், 18,445 முடிக்கப்பட்டது. இதில் 6,277 வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கியும் நிலுவையில் உள்ளது. இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில், சில பயனாளிகள் பசுமை வீடு திட்டம், இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டம் போன்றவற்றில் வீடுகளைக் கட்டிமுடித்துள்ளனர்.
றிவிசீகி திட்டப் பட்டியலில் உள்ள சிலர் இறந்துவிட்டதாலும் அந்த வீடு அப்படியே பெண்டிங்கில் உள்ளது. அதேபோன்று சிலர் வீடுமனைப் பட்டா இல்லாமலேயே இருக்கின்றனர். இதுபோன்று பல பிரச்னைகள் இந்தத் திட்டத்தில் உள்ளது. இவற்றைச் சரிசெய்துதான் வீடுகளை வழங்கி வருகிறோம். இதைப் புரிந்துகொள்ளாமல் கலெக்டர் கோபப்படுகிறார். அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது. ஒருசில அதிகாரிங்க செய்ற தப்புக்கு ஒட்டுமொத்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளையும் குறைசொல்வது எந்தவகையில் நியாயம்? என்ன இருந்தாலும் கலெக்டர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது. அதனால்தான் மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிட உள்ளோம்‘’ என்றனர்.
இதுகுறித்து கலெக்டர் கந்தசாமியிடம் பேசினோம். “என்னுடைய கடமையை நான் சரியாகத்தான் செய்துகொண்டு இருக்கிறேன். பிரதம மந்திரி வீடு திட்டத்தில் பணியை சரியாகச் செய்து முடிக்கவில்லை என்று மக்களிடமிருந்து புகார் வருகிறது. அதனால்தான் நடவடிக்கை எடுக்கிறேன்.
தற்போது 2 நாளில் மட்டும் 2,000 பயனாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மனித உரிமைகள் ஆணையத்துக்குச் சென்றால், ஆணையத்துக்குப் பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.
- நமது நிருபர்