பனியன் நிறுவனத்தில் 47 பெண்களுக்கு கொரோனா..! திருப்பூரில் பரபரப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வில்லா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூரில் ஏற்கனவே ஏற்றுமதி நிறுவனங்கள் அத்தியாவசிய உற்பத்தி தொழில் நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது பின்னலாடை ஏற்றுமதி தொழில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி இல்லை என அரசு அறிவித்திருந்தது. இதனை அடுத்து திருப்பூர் மாவட்டத்தில் தளர்வில்லா ஊரடங்கில் ஏற்றுமதி நிறுவனங்கள் முழுவதும்.அடைக்கப்பட்டன.
இந்நிலையில் திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் விதிமுறைகளை மீறி பனியன் நிறுவனங்கள் இயங்குவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதனை அடுத்து மங்கலம் சாலையில் உள்ள பாரபாளையம் பகுதியில் அதிகாரிகள் தனியார் நிறுவனங்களில் ஆய்வு செய்த போது அனுமதியின்றி ஊரடங்கு காலத்தில் தடையை மீறி நிறுவனங்கள் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து தடையை மீறி இயங்கிய 5 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை அடுத்து அவினாசி அருகே உள்ள அணைப்புதூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் 140க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அங்குள்ள விடுதியில் தங்க வைத்து ஊரடங்கு தடையை மீறி செயல்பட்டுவந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து நிறுவனத்தில் அதிரடியாக வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த நிறுவனத்தில் போதிய விதி முறைகளை கடைபிடிக்காமல் தடையை மீறி செயல்பட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து அங்கிருந்த தொழிலாளர்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் 47 பெண் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களை கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்து பின்னர் நிறுவனத்திற்கு சீல் வைத்தனர். கொரானா தொற்று காலத்தில் தொழிலாளர்களின் உயிரோடு விளையாடும் இது போன்ற நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.