குட்கா ஊழல்தான் இதுவரை சர்ச்சையாக இருந்தது. இப்போது குட்கா வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்றபத்திரிகையே சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத் துறை அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்ததாக மாதவ ராவ் வாக்குமூலம் கொடுத்தார்’ என்று வருமானவரித் துறை கூறுகிறது. ஆனால், மத்திய அரசின் இன்னொரு அமைப்பான சி.பி.ஐ தரப்பில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், சுகாதாரத் துறை அமைச்சரின் பெயரையே சேர்க்கவில்லை. இதன் மூலம், குட்கா வழக்கைத் தனது அரசியல் சுய லாபத்துக்காக பி.ஜே.பி பயன்படுத்துகிறது என்கிற புகார்களை உறுதிசெய்கிறதா சி.பி.ஐ?
குட்கா வழக்கில் வருமானவரித் துறை சார்பில் கடந்த ஜனவரி மாதம் தாக்கல்செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ‘2016, ஜூலை 8-ம் தேதி மாதவ ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா வீடுகளில் சோதனை நடத்தினோம். அக்கவுன்டன்ட்டாக இருந்த வி.ஏ.யோகேஸ்வரி என்பவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட கணக்கு வழக்கு நோட்டில், தடையை மீறி குட்காவை விற்பனை செய்வதற்காக 2014 நவம்பர் முதல் 2016 ஜூலைவரை பலருக்கும் பணம் கொடுத்த தகவல்கள் இருந்தன. இதுகுறித்து மாதவ ராவ் கொடுத்த வாக்குமூலத்தில் ‘பிவி’ என்றால் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் என்றும், ‘சிறி’ என்றால் சென்னை போலீஸ் கமிஷனர் என்றும் சொன்னார். 2016, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அதே ஆண்டு ஜூன் 15-ம் தேதிவரை சுகாதாரத் துறை அமைச்சருக்கு ரூ.56 லட்சம் கொடுக்கப்பட்டது என்றும் மாதவ ராவ் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து மாதவ ராவ் வாக்குமூலத்தையும், கைப்பற்றப்பட்ட கணக்கு நோட்டின் நகல்களையும் 2016, ஆகஸ்ட் 11-ம் தேதி தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தோம். இந்த ரகசியக் கடிதங்களைத் தலைமைச் செயலாளரிடம், வருமானவரித் துறை புலனாய்வுப் பிரிவு முதன்மை இயக்குநர் நேரில் சென்று கொடுத்தார். தமிழக சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி-க்கு நேரில் கடிதம் கொடுக்கப்பட்டது.
2017, நவம்பர் 17-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில், சசிகலா தங்கியிருந்த அறையில் வருமானவரித் துறை சோதனை நடந்தது. அங்கு, 2016 செப்டம்பர் 2-ம் தேதியிட்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு போலீஸ் டி.ஜி.பி எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்தக் கடிதத்தில், டி.ஜி.பி-க்கு நாங்கள் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி எழுதிய ரகசியக் கடிதத்தின் நகலும் இணைக்கப்பட்டிருந்தது. ரகசியக் கடிதத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டன’’ என்கிறது அந்தப் பிரமாணப் பத்திரம். இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட பின்னர், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்றன. மாதவ ராவ் உள்ளிட்ட ஆறுபேர் கைது செய்யப்பட்டனர்.
அடுத்த கைது பட்டியலில் அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி ராஜேந்திரன் ஆகியோர் பெயர்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. இடையே சி.பி.ஐ அமைப்பின் டெல்லி மேலிடத்தில் பல குளறுபடிகள் நடந்தன. அதன் பின்பே இப்படி ஒரு குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், “இதன் பின்னால் மத்திய அரசுக்கும் எடப்பாடி அரசுக்கும் நடந்த பேச்சுவார்த்தைகளே சி.பி.ஐ அமைப்பை இப்படிக் கைப்பாவை அமைப்பாக மாற்றியுள்ளது” என்று குற்றம் சாட்டுகிறார்கள் சமூகச்செயற்பாட்டாளர்கள்.
சி.பி.ஐ தரப்போ, “குற்றவியல் நடைமுறைச் சட்டம் 167(2)-ன் படி, 90 நாள்களுக்குள் ஒரு வழக்கில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் பெறலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. அதனால்தான், அவசரமாக முதல்கட்டக் குற்றபத்திரிகைத் தாக்கல் செய்திருக்கிறோம். அடுத்த குற்றபத்திரிகையில் முக்கிய நபர்களின் பெயர்கள் இடம்பெறும்” என்கிறது.
ஆனால், “சி.பி.ஐ சொல்வது நம்பும்படியாக இல்லை. வருமானவரிச் சோதனையில் கிடைத்த ஆதாரங்களே குற்றபத்திரிகையில் பெயர் சேர்க்கப் போதுமானவை. அதன் அடிப்படையில்தான், சி.பி.ஐ அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் கமிஷனர் வீடுகளில் எல்லாம் சோதனை செய்தார்கள்” என்கிறார் ஓய்வுபெற்ற சி.பி.ஐ அதிகாரி ரஹோத்தமன்.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், “குட்கா வழக்கில் இருந்து விடுவித்தால்தான், பி.ஜே.பி-யுடன் கூட்டணி என்று அ.தி.மு.க தரப்பில் நிபந்தனை வைக்கப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது. எனவேதான், வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரிகூட மாற்றப்பட்டிருக்கிறார்” என்கிறார்.
இந்த விவகாரத்தை அவ்வளவு சாதாரணமாக விட்டுவிடப்போவதில்லை என்கிறார் தி.மு.க-வின் எம்.எல்.ஏ-வான ஜெ.அன்பழகன். “மத்திய அரசின் தலையீடு காரணமாகத்தான் குற்றபத்திரிகையில் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் பெயர்கள் இல்லை. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்” என்றார்.