சர்வதேச கப்பல்களுக்கான வழித்தடம்: கேள்விக்குறியாகும் மீனவர்களின் வாழ்வாதாரம்
பசுமை வழிச்சாலை, பெட்ரோலியக் குழாய்களைப் பதிப்பது என விவசாயிகளின் பிரச்னைகளுக்கே இன்னும் தீர்வு காணப்படவில்லை. அதற்குள் சாகர்மாலா திட்டத்தின்கீழ் கடலில் கரையோர மீனவர்களின் கடல்பரப்பில், சர்வதேச கப்பல்களுக்கான வழித்தடத்தை அனுமதித்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதாக மத்திய அரசுமீது குற்றச்சாட்டை எழுப்புகிறார்கள் கன்னியாகுமரி மீனவர்கள்.
மத்திய அரசின் கப்பல் துறை அமைச்சகம், சாகர்மாலா தேசிய கண்ணோட்டம் திட்ட ஆவணத்தைக் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் கடற்கரைகளையும் உள்நாட்டு நீர்நிலைகளையும் சரக்குப் போக்குவரத்துக்காக மாற்றுவதாகும். இதன்படி, நாட்டின் 7,500 கி.மீட்டர் நீளமுள்ள கடற்கரை மற்றும் 14,500 கி.மீட்டர் நீளமுள்ள உள்நாட்டு நீர்வழிகள் சரக்குப் போக்குவரத்துக்காக மாற்றியமைக்கப்படும். இந்தத் திட்டத்தில்தான் சமீபத்தில் மத்திய அரசு, சர்வதேச கப்பல் வழித்தடங்களுக்கான பாதையை மாற்றி புதிய அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில், “கரையிலிருந்து 15 நாட்டிக்கல் மைல் தூரத்தில் தொடங்கி 25 நாட்டிக்கல் மைல் தொலைவுக்குள் நாட்டுப் படகுகள், கட்டுமரங்கள் செல்லும். அதேபோல 40 நாட்டிக்கல் தூரத்தில் கப்பல்கள் செல்லும். ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய வழித்தடத்தின்படி கப்பல்கள் 15 நாட்டிக்கல் மைல் தூரத்துக்குள்ளாகவே பயணிக்கலாம். இதனால் கப்பல்களுக்கு எரிபொருள், நேரம் மிச்சமாகும். கூடுதல் லாபம் கிடைக்கும். ஆனால், அதேசமயம் இது நாட்டுப்படகு, கட்டுமரங்கள் செல்லும் வழித்தடங்களை முற்றிலும் அழித்துவிடும். மீன்கள் இனப்பெருக்கத்தையும் குலைத்துவிடும். இந்தப் புதிய வழித்தடத்தின் வரைபடத்தில் கன்னியாகுமரி முதல் கொச்சிவரையும், கொச்சியில் இருந்து குஜராத்தின் கட்ச் வளைகுடாவரையும் இரண்டு வழித்தடங்களைப் புதிதாக அமைத்துள்ளனர். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘கொச்சி கப்பல் துறைமுகத்தில் இருந்து அதிகமான கப்பல்கள் இலங்கை நோக்கிச் செல்கின்றன. அவர்களுக்கு ஒருவழிப் பாதை கொடுத்தால் கப்பல்கள் மோத வாய்ப்பு இருக்கிறது’ எனக் கூறுகிறார்கள்.
இதன்படி, கன்னியாகுமரி முதல் கொச்சிவரையுள்ள கடல் பகுதி அதிக கப்பல் போக்குவரத்து நடக்கும் இடமாக இருக்கும். தற்போதைய நிலவரப்படி கன்னியாகுமரிக்கும் கொச்சிக்கும் இடையே 24 மணி நேரத்தில் சுமார் 1,500 கப்பல்கள் செல்வதாகச் சொல்கிறார்கள். எனவே, கன்னியாகுமரி முதல் கொச்சிவரை உள்ள கடல் வழித்தடத்தில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சி மாவட்டங்களில் நாட்டுப் படகுகளில் மீன் பிடிக்கும் சுமார் 25 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். இப்போதே ஆழ்கடலில் செல்லும் கப்பல்கள், மீன்பிடி விசைப்படகுகள்மீது மோதும் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இதுபோன்ற விபத்தில் 12 மீனவர்கள் இறந்தார்கள். எந்த ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவரும்போதும் அதனால் பயன்பெறுபவர்கள், பாதிக்கப்படுபவர்கள் என இருதரப்பின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும். ஆனால் மத்திய அரசு, பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்துக்காக மட்டுமே ஒருதலைபட்சமாக இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறது” என்றார், மிகத் தெளிவாக.
நெய்தல் மக்கள் இயக்க கன்னியாகுமரி மாவட்டச் செயலாளரான குறும்பனை பெர்லின், “கடற்கரையிலிருந்து 50 நாட்டிக்கல் மைலுக்குள்ளாகதான் மீன்கள் அதிகமாக உற்பத்தியாகின்றன. எனவேதான், உலகில் பல துறைமுகங்களில் 50 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் கப்பல் வழித்தடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 40 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் கப்பல் மோதிவிடும் என்று உயிருக்குப் பயந்தே ஏராளமான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலைக் கைவிட்டுவிட்டார்கள். இப்போது கரையோரமாக வந்தும் கப்பல்கள் மோதினால் அவர்கள் எங்கே போவார்கள்?” என்றார், வருத்தத்துடன்.
இதுகுறித்து நாகர்கோவில் மீன்வளத் துறை துணை இயக்குநர் லாமக் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, “மீனவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். அதை, கலெக்டர் மூலம் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்லவிருக்கிறோம்” என்றார்.