தமிழகம்

அதிகரிக்கும் சாதி ஆணவக் கொலைகள்…

தனிச்சட்டம் இயற்றுமா தமிழக அரசு?

தமிழகத்தில் அடுத்தடுத்து ஆணவக்கொலைகள் நடந்துவரும் நிலையில், நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களே ஒன்றுசேர்ந்து ஆணவக்கொலை செய்திருப்பது பல்வேறு தரப்பினரையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதுவரை பழைமைவாதிகளிடம் மட்டுமே இருப்பதாக நம்பப்படும் சாதிவெறி, இன்றைக்கு பள்ளி மாணவர்களிடமும் பரவியிருப்பது, தமிழகத்தில் ஆணவக்கொலை தொடர்பாக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நெல்லை மாவட்டம், வெள்ளங்குளி கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கி சங்கர். இவர், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் உதவியாளராகப் பணியாற்றிவந்தார். நவம்பர் 20-ம் தேதி காலையில் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற இசக்கி சங்கர், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், அந்தக் கொலையைச் செய்தவர்கள் பள்ளி மாணவர்கள் என்பதை அறிந்து அதிர்ந்துபோயினர்.


இசக்கி சங்கர் வசித்த அதே தெருவில், கல்லூரி மாணவி சத்தியபாமாவின் வீடும் உள்ளது. வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் தரப்பில் ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தாலும், பின்பு ஒப்புக்கொண்டார்களாம். இந்த நிலையில்தான், இசக்கி சங்கர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து மறுநாளே, சத்தியபாமாவும் தற்கொலை செய்துகொண்டார். சத்தியபாமாவின் தம்பி ஐயப்பனிடம் போலீஸார் விசாரித்தபோது, இசக்கி சங்கரைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக, காவல்துறையினரிடம் பேசினோம். ‘‘இசக்கி சங்கரும், சத்திபாமாவும் காதலித்துள்ளனர். ஆனால், இசக்கி சங்கர் கொலைக்குப் பின்பு விசாரித்தபோது, இதை இரு குடும்பத்தினருமே மறுத்தனர். சத்தியபாமாவும் இசக்கி சங்கரும் போனில் அடிக்கடி பேசியதற்கான ஆதாரத்தைக் காண்பித்த பிறகே, அதை ஒப்புக்கொண்டனர். ஆரம்பத்தில் இவர்களின் காதலுக்கு இரு குடும்பங்களிலும் எதிர்ப்பு இருந்துள்ளது. இரு குடும்பத்தினரையும் சமரசம் செய்துவைத்த சிலர், திருமணத்துக்கும் ஒப்புக்கொள்ள வைத்தனர். அதன்படி, வரும் ஏப்ரல் 10-ம் தேதி திருமணத்துக்கு தேதி குறிக்கப்பட்டது.
இசக்கி சங்கர், சத்தியபாமா இருவரின் வீடுகளும் ஒரே தெருவில் இருந்ததால், இருவரும் சகஜமாகச் சந்தித்துப் பேசியுள்ளனர். சத்தியபாமாவின் தம்பி ஐயப்பன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். ‘வேறு சாதியைச் சேர்ந்தவருடன் உன் அக்காவுக்குத் திருமணமாமே?’ என்று ஐயப்பனின் பள்ளி நண்பர்கள் சிலர் கேலி செய்துள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த ஐயப்பன், தன் அக்காவுடனும் அப்பாவுடனும் சண்டை போட்டுள்ளான். சின்னப் பையன் என்பதால், அதைக் குடும்பத்தினர் கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில், இசக்கி சங்கரைக் கொலை செய்ய முடிவுசெய்து, தன்னுடன் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளான் ஐயப்பன். நவம்பர் 20-ம் தேதி தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்குச் சென்ற இசக்கி சங்கரை, ஐயப்பனும் சில சிறுவர்களும் சேர்ந்து வெட்டிச் சாய்த்துள்ளனர். அவர்களில் ஐந்து பேர் பள்ளி மாணவர்கள். இரண்டு பேர் பள்ளிப் படிப்பைப் பாதியில் முடித்துவிட்டு, கட்டட வேலைக்குச் செல்பவர்கள். கொலை செய்துவிட்டு, ஆற்றில் குளித்தவர்கள், எதுவுமே நடக்காததுபோல பள்ளிக்குச் சென்றுவிட்டனர். மீதி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர். ஏழு சிறுவர்களும் கைதுசெய்யப்பட்டு, அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப் பட்டுள்ளனர்’’ என்றனர்.
இந்த ஆணவக்கொலை குறித்து ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் அமைப்பாளர் ரமேஷ் கூறுகையில், “சமீபகாலமாக, தமிழகத்தில் சாதிவெறி அதிகரித்துவருகிறது. ஒருசில அமைப்பினர் சாதிவெறியைத் தூண்டி வருகிறார்கள். அதன் விளைவுதான், பள்ளி மாணவர்களே ஆணவக்கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. இதைத் தடுப்பதற்கு, மக்கள் மீது உண்மையான அக்கறை வைத்துள்ள அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் பிரசாரம் செய்ய வேண்டும்” என்றார்.
ஆணவக்கொலைக்கு எதிராகப் போராடிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளரான கே.ஜி.பாஸ்கரன், ‘‘சத்தியபாமாவின் தற்கொலையிலும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அதுகுறித்தும் விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு, “தமிழகத்தில் ஆணவக்கொலைகள் அதிகரித்துவருகின்றன. தமிழக அரசோ, ‘தமிழகத்தில் ஆணவக்கொலைகளே நடக்கவில்லை என்கிறது. காதல் திருமணம் செய்துகொண்ட சாதி மறுப்பு தம்பதிகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கான தனிச் சட்டத்தை தமிழக அரசு உடனே கொண்டுவர வேண்டும்’’ என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button