மணல் கொள்ளையை போலீஸார் கண்டுகொள்வதில்லை என்று பல இடங்களில் புகார்கள் உள்ள நிலையில், ‘மணல் கொள்ளையைத் தடுத்ததால் எங்களை டிரான்ஸ்ஃபர் செய்கிறார்கள்’ என்று அலறுகிறார்கள் வேலூர் மாவட்ட போலீஸார். இதற்கெல்லாம் காரணம் அமைச்சர் கே.சி.வீரமணியின் உதவியாளர் ஷியாம்குமார்தான் என்று கூறுகிறார்கள் பாதிக்கப்பட்ட காவல்துறையினர்.
அரக்கோணம் கிழக்கு தர்மராஜா கோயில் தெருவைச் சேர்ந்தவர், ஷியாம்குமார். அ.தி.மு.க-வில் வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருக்கும் இவர், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் உதவியாளர்களில் ஒருவர். இவர்மீதுதான், காவல்துறை வட்டாரத்தில் இப்படியொரு புகார் வாசிக்கப்படுகிறது. நம்மிடம் பேசிய போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், “அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டை வட்டாரங்களில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு ஷியாம்குமாரின் ஆட்கள் பக்கபலமாக இருந்துவருகிறார்கள். மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள்மீது எங்களால் நடவடிக்கை எடுக்கமுடியாத அளவுக்கு இவரது தலையீடு இருக்கிறது. எந்த போலீஸாராவது தனது பேச்சைக் கேட்கவில்லை யென்றால், தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்களை டிரான்ஸ்ஃபர் செய்துவிடுகிறார். சில உயர் அதிகாரிகளின் அந்தரங்க விவகாரங்கள் இவருக்குத் தெரியும் என்பதால், அவர்கள் இவர் சொல்கிறபடி நடந்துகொள்கின்றனர்” என்று குமுறினார்.
அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் நம்மிடம், “ஷியாம்குமார், ஆரம்பத்தில் முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய்க்கு நெருக்கமாக இருந்தார். ஒருகட்டத்தில் தனக்கு நெருக்கடி வந்ததால் ஷியாம்குமாரை விஜய் கழற்றிவிட்டார். அதன் பிறகு, அமைச்சர் கே.சி.வீரமணியுடன் ஷியாம்குமார் ஒட்டிக்கொண்டார். அரக்கோணத்தில் ஷியாம்குமார் கட்டியுள்ள வீட்டுக்கான புதுமனைப் புகுவிழா கடந்த டிசம்பர் 12-ம் தேதி நடைபெற்றது. அதில் அமைச்சர் வீரமணி, எம்.எல்.ஏ-க்கள், ஆளும் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அதையெல்லாம் பார்த்துவிட்டு, ‘ஷியாம்குமார் இவ்வளவுப் பெரிய பவர் சென்டரா…’ என்று எங்கள் கட்சிக்காரர்களே ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்” என்றார்.
“அரக்கோணம் போக்குவரத்து போலீஸார், கடந்த டிசம்பர் 30-ம் தேதி நள்ளிரவு மணல் கடத்தல் லாரிகளைப் பறிமுதல் செய்தனர். உடனே மணல் கடத்தல் நபர்கள், ஷியாம்குமாருக்கு போன் செய்தனர். மறுநாளே லாரி மணலுடன் மீட்கப்பட்டுள்ளது. சில நாள்களில் , மணல் கடத்தலைத் தடுத்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸார் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார்கள்” என்றார் போலீஸ் அதிகாரி ஒருவர்.
இதுபோன்ற விவகாரங்களால் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகள் சிலரைச் சந்தித்தோம். ‘‘ஷியாம்குமார் காவல் துறையினரை மிரட்டுவதற்குப் பின்னால் அரசியல் சக்தி இருக்கிறது. அமைச்சர் வீரமணி உள்ளிட்ட பெரும் அரசியல் பிரமுகர்கள் பலரும் ஷியாம்குமாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள்’’ என்று வருந்தினர்.
குற்றச்சாட்டுகள் குறித்து ஷியாம்குமார் கூறும்போது ‘‘நான், சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவன். அமைச்சர் வீரமணியுடன் ஏழு வருடங்களாக இருக்கிறேன். அதனால், கட்சிக்காரர்கள் எனக்கு போன் செய்வார்கள். நான் போலீஸ் அதிகாரிகளிடம் பணிவுடன் பேசி, கட்சிக்காரர்களுக்குச் சிபாரிசு செய்வேன். அவர்களால் முடிந்ததை எனக்குக் கொடுப்பார்கள். நான் இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவதிலிருந்தே என்னை எவ்வளவு நல்லவன் என்று நீங்கள் புரிந்துகொள்ளலாம். பணக்காரர்களைவிட, டீ ஆற்றுகிற சாதாரண மனிதர்கள்தான் எனக்கு நெருங்கிய நண்பர்கள். யார் மனதையும் நான் கஷ்டப்படுத்தியதில்லை. நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. கடந்த மாதம் லாரியை விடுவிப்பதற்காக நான் தலையிட்டது உண்மைதான். ஆனால், அந்த லாரியில் மணல் கடத்தவில்லை. முரம்பு மண் கடத்தினர். அபராதம் விதிப்பதற்குப் பதிலாக, லாரி உரிமையாளரைக் கைது செய்யப்பார்த்தனர். அவரின் மனைவி என்னிடம் வந்து கதறி அழுதார். நான் போலீஸாரிடம் சட்டரீதியாகப் பேசி, கைது நடவடிக்கையைத் தடுத்தேன். அவ்வளவுதான்’’ என்றார்.
இதுதொடர்பாக அமைச்சர் வீரமணியிடம் கேட்டதற்கு, ‘‘முதல்வர் கன்ட்ரோலில் உள்ள காவல் துறைப் பணியில் வேறு யாரும் குறுக்கிட முடியாது. மணல் கடத்தல் விவகாரத்தில் சிக்கும் வாகனங்களை விடுவிக்க ஷியாம்குமார், என் பெயரைப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் புகார், இதுவரை என் கவனத்துக்கு வரவில்லை. இதுகுறித்து ஆதாரத்துடன் புகார் தந்தால், ஷியாம்குமார் மட்டுமல்ல… யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார் உறுதியாக.