நின்ற கோலத்தில் அத்திவரதர்… : தரிசிக்க பட்டாக்கத்திகளுடன் வந்த 4 பேர் கைது!
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவத்தையொட்டி, ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 31 நாட்களாக 46 லட்சம் பேர் தரிசனம் செய்த நிலையில், 32-வது நாளன்று, நின்ற கோலத்தில் அத்திவரதர் காட்சியளித்தார்.
17 நாட்களுக்கு நின்ற கோலத்தில் காட்சி தர உள்ளதால், அதிக அளவிலான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாளில் 2 லட்சத்து 40,000 பேர் சாமி தரிசனம் செய்தனர்.
சயனக் கோலத்தில் அத்திவரதரை தரிசனம் செய்தவர்கள் மீண்டும் நின்ற கோலத்தில் தரிசிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் ஒரு நாளைக்கு 3 லட்சம் முதல் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என கூறப்படுகிறது.
இதையடுத்து வரதராஜ பெருமாள் கோவிலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவம், கழிவறை வசதி உள்ளிட்டவை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் 6 இடங்களில் 10 ஆயிரம் பக்தர்கள் நிற்கும் வகையில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்துக்குள் பக்தர்களுடைய எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் போது பக்தர்கள் இந்த கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டு பகுதி பகுதியாக பிரித்து அனுப்பப்படுவர். கூடாரங்களை சுற்றி கழிவறைகள், குடிநீர் வசதி, 24 மணி நேர அன்னதான வசதி செய்யப்பட்டுள்ளது. காவலர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திலிருந்து 7500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனிடையே அத்திவரதரை தரிசிக்க 7 வரிசைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் விரைவாக தரிசனம் செய்வதற்காக கூடுதலாக 3 வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 10 வரிசைள் மூலம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துவருகின்றனர். மேலும் 3 டி.ஐ.ஜி.க்கள் தலைமையில், 16 எஸ்.பி.க்கள், 50 டி.எஸ்.பி.க்கள் மற்றும் 7500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அத்திவரதர் உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய நிலையில், இதுவரை ஆன்லைன் மூலம் 10 லட்சம் ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அன்னதானத் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தொடங்கி வைத்தார். அன்னதானம் வழங்க 46 தன்னார்வ அமைப்பினர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பணீந்திர ரெட்டி தெரிவித்தார்.
இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க சந்தேகத்திற்கு இடமான வகையில் 4 பேர் வந்துள்ளனர். அவர்களை போலீசார் விசாரிக்கையில் அவர்களது கையில் பட்டாக்கத்திகள் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, ரவுடி வரிச்சூர் செல்வம் அத்திவரதரை விஐபி சலுகையுடன் தரிசனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.