ஆடு, மாடு மேய்க்கும் பெண்கள் பெயரில் 50 லட்சம் ஜிஎஸ்டி மோசடி ! அமலாக்கத்துறை விசாரணை செய்யாதது ஏன் ?.!
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பெத்திச்செட்டிபுரம் பகுதியில் அமைந்துள்ளது சாயப்பட்டறை வீதி. இப்பகுதி நொய்யல் நதிக்கரையில் அமைந்துள்ளதால் தற்போது நீர் நிலை புறம்போக்கில் இருந்த குடியிருப்புக்களை அகற்றிவிட்டு மாற்று இடம் தருவதாக அரசு உறுதி அளித்திருந்த நிலையில் நகர்புற மேம்பாட்டு வாழ்விட அடுக்குமாடி குடியிருப்புக்களை ஒதுக்கியிருந்தது. இந்நிலையில் இப்பகுதியில் குடியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு கனக்கம்பாளையம் பகுதிக்கு குடியேறினர். இதனிடையே இப்பகுதியினர் வீட்டிற்காக கடன் வேண்டி விண்ணப்பித்திருந்த நிலையில் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆனால் வயது மூப்பு காரணமாக நிராகரிக்கப்பட்டிருக்கலாம் என பெண்கள் நினைத்திருந்த வேளையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வேண்டி அப்பகுதி பெண்கள் விண்ணப்பித்திருந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள், சமூக ஆர்வலர் இப்ராஹிம் மூலமாக வட்டாட்சியரை அணுகி கேட்டதற்கு ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பீட்டில் தொழில் செய்யும் ஜி எஸ் டி நிறுவனம் நடத்தி வருவதால் நல உதவிகள் கிடைக்காது என தெரிவித்தனர். ஆடு, மாடு மேய்ப்பது, வீடு வீடாக சென்று பத்து பாத்திரம் தேய்ப்பது மற்றும் கூலி வேலைக்கு சென்று அன்றாடம் பிழைப்பு நடத்தி வரும் பெண்கள் பெயரில் 50 லட்சத்தில் நிறுவனமா? என மலைத்துப்போயியுள்ளனர். பின்னர் தங்களுக்கே தெரியாமல் ஜி எஸ் டி துவங்கி மோசடி செய்திருபதை உணர்ந்தவர்கள் யோசித்து பார்த்தபோது பல்லடத்தை சேர்ந்த சிவக்குமார் தங்களிடம் அரசு உதவி திட்டங்களை பெற்றுத்தருவதாக கூறி ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களைப் பெற்று, புதிய வங்கி கணக்குக்களை துவங்கியது தெரிய வந்தது.
இந்நிலையில் ஆடு மாடு மேய்க்கும் பெண்மணியின் வங்கி கணக்கில் ரூ . 5 கோடி வர்த்தகம் நடைபெற்றிருப்பதாகவும், லட்சக்கணக்கில் வங்கியில் பணப்பரிவர்த்தணை நடந்திருப்பதாகவும் பல பெண்களுக்கு குறுஞ்செய்தி வந்தது. பின்னர் இது குறித்து சிவக்குமாரிடம் கேட்டதற்கு பதில் சொல்லமுடியாமல் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். தற்போது புகார் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வணிக வரித்துறையினர் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து துணை ஆணையர் ஷோபா தலைமையில் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே சாயப்பட்டறை வீதியில் பெரும்பாலான வீடுகள் இடித்து அகற்றப்பட்டதால் அங்கு மீதமிருந்த ஆடு மாடு வைத்து மேய்ப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எழுதப்படிக்க தெரியாததால் தாங்களே எழுதி படித்துக்காட்டி கைரேகை வாங்கியுள்ளனர். ஆனால் வனிகவரித்துறை அதிகாரிகள் ஏதோ வந்து விசாரணை மேற்கொண்டதை பதிவு செய்தது போல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டதுதான் ஜி.எஸ்.டி . இது போன்ற மோசடியாக ஏழை பெண்களை குறி வைத்து நடந்திருப்பது வேதனை அளிப்பதாகவும், திருப்பூர் போன்ற பின்னலாடை நகரத்தில் லட்சம் கோடி உற்பத்தி இலக்கை நோக்கி தொழிலாளர்கள் உழைத்துக்கொண்டிருக்கும் வேளையில் அமலாக்கத்துறை நேரடியாக இதை பண மோசடி வழக்காக பதிவு செய்து விசாரித்தால் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் திருப்பூரில் நடந்த ஜி எஸ் டி மோசடி சம்பவம் போல் வேலூர் மாவட்டத்திலும் நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சித்தூர் டோல்கேட், குடியாத்தம், காதர்பேட்டை ஆகிய பகுதிகளில் 200 க்கும் மேற்பட்டவர்கள் பீடி தொழில், ஹோட்டல் வேலை, தினக்கூலி வேலை செய்து அன்றாட பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மகளிர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்திருந்த நிலையில் 20 திற்கும் மேற்பட்ட பெண்களின் விணணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் வட்டாட்சியரிடம் விசாரித்ததில் 50 லடசம் மதிப்பிலான ஜி எஸ் டி நிறுவனம் பெயரில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தங்களை நல வாரியத்தில் சேர்ப்பதாக கூறி கும்பல் ஒன்று ஆவணங்களை பெற்றுக்கொண்டு மோசடியாக தங்களுக்கே தெரியாமல் ஏமாற்றியிருப்பது தெரிந்ததும் உறைந்துள்ளனர். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான ஜி எஸ் டி ஆய்வறிக்கையில் மோசடியாக ஜி எஸ் டி பதிவு செய்து 10 ஆயிரம் கோடி வரை மோசடி நடந்திருப்பதாகவும், மோசடியில் தில்லி முதலிடமும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும், மகாராஷ்ட்ரா மூன்றாவது இடத்திலும், குஜராத் நான்காவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே 11 லட்சத்திற்கும் அதிகமான ஜி எஸ் டி கணக்குக்களை கொண்ட வணிகர்களின் நம்பிக்கைக்கு உத்திரவாதம் அளிக்கும் விதமாகவும், அப்பாவி பெண்களின் அறியாமையை பயன்படுத்தி மோசடி செய்து வரும் நபர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து திருப்பூர் போன்ற தொழில்நகரங்களின் பாதுகாப்பை மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.