இந்திய மண்ணின் முதல் சுதந்திரப் போர் வீரன்… மாமன்னன் பூலித்தேவன்!
அந்நிய ஆதிக்க சக்திகள் தமிழக மண்ணில் ஒய்யாரமாய் உலாவந்த காலம், கப்பம் வசூல் செய்வதில் போட்டி போட்ட வசூல் ராஜாக்களின் வசந்தகாலம். அந்நாளில் திருநெல்வேலி சீமை இருவேறு பிரிவுகளாக கீழ்திசை மற்றும் மேல் திசை பாளையங்கள் என இருந்தது. கீழ்திசை பாளையத்திற்கு தலைமை வகித்தவர் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் பொல்லாப் பாண்டிய நாயக்கர் வீரபாண்டிய கட்டப்பொம்மனின் பாட்டனார். மேல்திசை பாளையத்திற்கு தலைமை வகித்தவர் பூலித்தேவர். இவரது உறைவிடம் நெல்கட்டு சேவல். இது சங்கர நாயனார் தாலுகாவில் உள்ளது. காந்தப்ப பூலித்தேவர் என்பதே இவரது இயற்பெயர், பாண்டிய மன்னர்கள் காலத்திலேயே குறுநில மன்னர் எனும் அந்தஸ்தைப் பெற்ற பூலியர் வம்சத்தைச் சார்ந்தவர். பூளியர் திரிந்து பூலியர் எனப்பட்டு பூலித்தேவர் ஆனார். சித்திரபுத்திரத் தேவர், சிவஞான நாச்சியார் தம்பதியருக்கு மகனாய் பிறந்தவர். வீரமாய் வளர்ந்தார். பருவ வயதில் கயல்கன்னி நாச்சியாரை மணந்தார்.
இயற்கை தன் நிறங்களை நிலங்களில் தூவிய இடம் நெல்கட்டுசெவல். இதன் இன்னொரு பெயர் அரிநாடு, மணி அரிசி. உன்னத் தருவான். ஆனால் ஒரு நெல்மணி கூட கப்பம் தரான் என கவிஞர்களால் பாடல் பெற்றவர்கள் மற்றும் நெருப்பாற்றை கடந்து வந்தவர்கள் என பெருமை பெற்றவர்கள் நெல்கட்டு செவல் ஊர் மக்கள், ஆறடி உயரம், வீரத்தில் அர்ச்சுனன், ஜோதி போல் ஜொலிக்கும் முகம், கார்மேக வர்ண தேகம், கவசம் போன்ற மார்பகம் என கும்மிப் பாடலொன்று பூலித்தேவரை வர்ணிக்கிறது.
சிவகிரி பாளையக்காரன் வரகுன பாண்டியனுடன் சண்டையிட்டு ஆண் இறைகளை மீட்டு தன் வீரத்தை தென்தமிழ்நாடு முழுவதும் அறியச் செய்தார். தேசியமும், தெய்வீகமும் தன் இருகண்கள் என போற்றியவர் பூலித்தேவர். நல்லாட்சி நடத்திய பூலித்தேவருக்கு திருச்சியிலிருந்து பொல்லாப்பு வந்தது. நேரில் வா என்ற ராபர்ட் கிளைவை படையுடன் சென்று வெற்றியுடன் திரும்பினார் என்கிறது பூலித்தேவன் சிந்து எனும் கதைப்பாடல். முதல் ஆங்கிலேய தளபதியை எதிர்த்த முதல் தமிழ்வீரர், பல பாளையக்காரர்களை ஒருங்கிணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிரான கூட்டணியை அமைத்தார்,
பூலித்தேவரின் ஆங்கிலேய எதிர்ப்பு ஒருநாள் பலநாள் போர் அல்ல. 1750 – 1767 வரை தொடர்ந்து 17 ஆண்டு காலப் போர். ஆங்கிலேயர்களுக்கு எதிரான பாளையக்காரர்கள் போர்களில் அதிக வருடங்கள் போரிட்டவர் பூலித்தேவரே. களப்போரில் தோல்வி கண்ட ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். நவாப் தன் சகோதரனை பூலித்தேவரிடம் சரணடையச் செய்தார். சரணடைந்தவரை சகோதரனாய் பாவித்தார் பூலித்தேவர். பல வியூகங்கள் மூலம் பூலித்தேவரை தனிமைப்படுத்தினர் ஆங்கிலேயர்.
போரில் தோல்வி கண்ட பூலித்தேவர் சுரங்கம் மூலம் தப்பித்தார். பதுங்கிய பூலித்தேவர் பாய்ந்த பாய்ச்சலில் நெல்கட்டும்செவல் மீண்டும் அவர் வசம் வந்தது. மீண்டும் போர், வெற்றி தோல்வியின்றி போர் நீண்டது. தொடர் மழை. பொருள் சேதம் என பூலித்தேவருக்கு பல இன்னல்கள் ஏற்பட்டது. குடும்பத்தை இழந்தார். தலைமறைவான வாழ்க்கையில் ஒரு நாள் கைதானார்.
பாளையங்கோட்டை செல்லும் வழியில், இறைவழிபாட்டிற்கு சங்கரன்கோவிலுக்கு பாதுகாப்புடன் அனுப்பப்பட்டார். கோவிலில் சிவனோடு ஐக்கியமானதாக நம்பப்பட்டு மக்களால் பூலி சிவஞானமானார் என நாட்டுப்புற பாடல்களில் குறிப்பிடப்பட்டு நாளும் உலாவருகிறார். உலக வரலாற்றில் பெரும் புரட்சிகளுக்கு முன்னே ஒரு புரட்சியை நடத்தியவர் பூலித்தேவர். இவர் தொடங்கிய போர் முழக்கம் பல்வேறு காலகட்டங்களிலும் பலரால் தொடர்ந்து இறுதியில் பெற்றதுதான் 1947 ஆம் ஆண்டு பெற்ற சுதந்திரம். பெற்ற சுதந்திரம் பேணிக்காப்போம்..
– சூரிகா