காலனாய் மாறிய கார் டீலர்.. : இளைஞர் தற்கொலை விவகாரத்தில் ஆய்வாளருக்கு தொடர்பா?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பிரபல கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலராக பிரசன்னா கியா டீலர் ஷோரூம் உள்ளது. வெளிப்புறத்தில் கவர்ச்சியாக காட்சியளிக்கும் இந்த கார் டீலர் ஷோரூம் நிர்வாகத்தால் 21 வயது இளைஞரின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த முத்துக்கருப்பண், சரவணவள்ளி தம்பதியருக்கு சங்கீத் குமார்(21) என்கிற மகனும், சௌமியா(19) என்கிற மகளும் உள்ளனர். டிப்ளமோ படிப்பை முடித்த சங்கீத் குமார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அருள்புரம் அருகே உள்ள கியா கார் டீலரான பிரசன்னா கியா ஷோரூமில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி சனிக்கிழமை இரவு யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் ஷோரூமில் இருந்து புது காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சங்கீத்குமார் செனறுள்ளார். பின்னர் வீட்டிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது சிறு விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீத்குமார் காரை அதிகாலை ஷோரூமில் விட்டுவிட்டு தனது மேல் அதிகாரி விநோத்திற்கு விபத்து குறித்து தகவல் அளித்துள்ளார். இதனை கேட்ட விநோத் ஆறுதல் கூறியதோடு திங்கட்கிழமை வருமாறு கூறினார். அதன்பிறகு திங்கட்கிழமை வழக்கம்போல் ஷோரூமிற்கு சென்ற சங்கீத்குமாரை பொது மேலாளர் பிரேம் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். பின்னர் சம்பந்தமே இல்லாமல் வீரபாண்டி காவல் நிலையத்திற்கு சங்கீத்தை இழுத்துச்சென்று வழக்கு பதிவு செய்ய கோரியுள்ளனர். ஆனால் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் காவல்துறையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதனை அடுத்து ஷோரூமிற்கு சங்கீத்தை அழைத்துச்சென்ற நிர்வாகத்தினர் அடித்து உதைத்து அவமானப்படுத்தியுள்ளனர். பின்னர் பைக், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டதோடு விபத்துக்குள்ளான காருக்கு ரூபாய் 15,000 பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனை அடுத்து பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தபிறகும் மேலும் பணம் கேட்டு மிரட்டவே அதிர்ச்சி அடைந்த சங்கீத் குமார் இரவு வீட்டிற்கு சென்று தனது பெற்றோருக்கு போன் செய்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அழுதுகொண்டே கூறிவிட்டு தான் தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் கரைப்புதூர் வந்து பார்த்தபோது வீட்டினுள் தூக்கிட்டு பிணமாக தொங்கியபடி சங்கீத்குமாரின் உடலை கண்ட பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லடம் காவல்துறையினர் சங்கீத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் சங்கீத்குமார் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசார் வசம் சிக்கியது. அதில் தனது சாவுக்கு காரணம் நிறுவனத்தை சேர்ந்த கதிர், பொது மேலாளர் பிரேம், வினோத், உதவி மேலாளர் ஹரி, பத்பநாபன் மற்றும் கலை ஆகிய ஆறு பேர் தான் காரணம் என குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்து தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் பிரசன்னா கார் நிறுவனத்தை சேர்ந்த மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான மேலும் மூவரை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனிடையே சங்கீத்குமார் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக எழுதப்பட்ட கடிதத்தில் மேலாளருடன் திருப்பூரை சேர்ந்த இன்ஸ்பெக்டரும் தன்னை தாக்கி அவமானப்படுத்தியதாக குறிபிடப்படுள்ளது. யார் அந்த இன்ஸ்பெக்டர் என்பது விடைதெரியாத மர்மமாகவே உள்ளது. மேலும் டீலரிடம் தகவல் கொடுக்காமல் காரை எடுத்துச்சென்றதற்க்காக காலனாக மாறி ஈவு இரக்கமின்றி 21 வயதே ஆன இளைஞரின் உயிர் போக காரணமாக இருந்த ஆறு பேருக்கும் அதிக பட்ச தண்டனை வழங்கினால் மட்டுமே இளைஞரின் ஆன்மா சாந்தி அடையும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.
வேதனை இழந்தவனுக்குத்தான் தெரியும். தங்களது வயதான காலத்தில் தனது மூத்த மகன் நல்ல்வேலையில் சேர்ந்து கை நிறைய சம்பாதித்து காப்பாற்றுவான் என்கிற கனவுகளோடு இருந்த சங்கீத்குமாரின் பெற்றோருக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை.
– நமது நிருபர்.