பழனிச்சாமியை மிரட்ட சசிகலாவை பயன்படுத்தும் பன்னீர்செல்வம்
அதிமுகவை வழிநடத்த சசிகலா தான் சரியான தலைவராக இருப்பார் என்கிற குரல் மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சில தினங்களுக்கு முன் பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நடைபெற்ற தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
அதிமுக தேனி மாவட்ட செயலாளர் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் பன்னீர் செல்வத்தின் மறைமுக ஆதரவு இல்லாமல் இந்த தீர்மானம் நிறைவேற வாய்ப்பு இல்லை. பன்னீர் செல்வத்தின் சகோதரர் சசிகலாதான் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்கிறார். ஆனால் பன்னீர்செல்வம் இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக இருக்கிறார்.
சசிகலா சிறை தண்டனை முடிந்து வந்ததிலிருந்து பன்னீர்செல்வம், எடப்பாடிக்கும், சசிகலாவிற்கும் நடுநிலையாக இருப்பது போல் தன்னை காட்டிக் கொண்டு வருகிறார். சசிகலாவை காரணம் காட்டி கடந்த காலங்களில் கட்சியிலும் ஆட்சியிலும் தனக்கு வேண்டியதை எடப்பாடியிடம் பெற்றுக் கொண்டார். ஏற்கனவே பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் சசிகலாவை கட்சியில் சேர்க்கக் கூடாது என்று தீர்மானம் போட்டார்கள். தற்போது சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என தேனியில் போட்ட தீர்மானம் பற்றி கேட்டபோது காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்கிறார் பன்னீர் செல்வம். ஆகவே பழனிச்சாமியை மிரட்டுவதற்காக காலங்காலமாக பன்னீர்செல்வம் பயன்படுத்தும் ஆயுதம்தான் சசிகலா.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பழனிச்சாமி, வேலுமணி இருக்கக்கூடிய வார்டுகளில் கூட அதிமுக வெற்றி பெற முடியவில்லை. ஜெயலலிதா காலத்தில் பல்வேறு தோல்விகளை சந்தித்திருந்தாலும் இதுபோன்ற தோல்விகள் ஏற்பட்டதில்லை. அதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் தலைமை சரியில்லை என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். அதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்கவேண்டும் என்கிற குரல் அடிக்கடி ஒலிப்பதே அதிமுகவிற்குள் இருக்கும் தலைமைக்குள் ஏதோ பிரச்சனை இருப்பது தெரிகிறது.
சசிகலாவிற்கு பன்னீர் செல்வமோ அவர் சார்ந்த முக்குலத்தோர் சமூகமோ எதிரிகள் கிடையாது. பழனிச்சாமி சார்ந்த சமுதாயத்தின் தலைவர்களும் எதிரிகள் கிடையாது. பழனிச்சாமி மட்டும் தான் சசிகலாவின் நேரடி எதிரி. தமிழக வரலாற்றில் இடம் பெறக்கூடிய ஒரு வாய்ப்பை பழனிச்சாமிக்கு சசிகலா வழங்கினார். சசிகலா பழனிச்சாமிக்கு கொடுத்த வாய்ப்புக்கு நிகர் வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட சசிகலாவுக்கு பழனிச்சாமி விசுவாசமாக இருக்கத் தவறிவிட்டார். ஆகையால் பழனிச்சாமி சசிகலாவின் நேரடி எதிரியாகிவிட்டார். இன்று அதிமுகவில் பன்னீர்செல்வம், பழனிச்சாமி இருவரைச் சுற்றி இருக்கும் தலைவர்கள் சாதியத் தலைவராகவே இருக்கிறார்கள். ஒரு காலத்தில் தேவர் கட்சியாக இருந்த அதிமுக இன்று கவுண்டர் கட்சியாகி விட்டது என்கிறார்கள். இது அதிமுகவிற்கு மிகப்பெரும் ஆபத்தான விஷயமாக கருதப்படுகிறது. ஒருவேளை சசிகலா அதிமுகவிற்குள் வந்தால் இந்த நிலை மாறலாம்.
பன்னீர்செல்வம் தற்போது பழனிச்சாமியை தவிர்த்து சசிகலாவோடு ஐக்கியமாகி விடலாம் என்கிற முடிவுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. பழனிச்சாமி இனிவரும் காலங்களில் ஜொலிப்பது கஷ்டம். சசிகலா அதிமுகவிற்கு தலைமை ஏற்றாலும் பாரதிய ஜனதாவை எதிர்த்து அரசியல் செய்வது கடினம். தமிழக மக்களைப் பொறுத்தவரை பாரதிய ஜனதாவிற்கு எதிரான மனநிலையில் தான் இருக்கிறார்கள். பாரதிய ஜனதா மாநில நலன்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் சசிகலா எதிர்த்து குரல் கொடுக்க முடியாத நிலைதான் ஏற்படும். அப்படி குரல் கொடுத்தால் சசிகலாவின் வழக்குகள் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்.
பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரை திமுகவுக்கு எதிரான அதிமுக வாக்குகளை பெறுவதற்காக அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக சிதைவதையே விரும்புவார்கள். அதிமுக சிதைந்தால் தமிழகத்திற்குள் மதவாத சக்திகள் தலைதூக்கும். ஆகையால் தமிழ்நாட்டின் நலன் கருதி அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் விரும்புவதாக தெரியவருகிறது.