ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் நாகர்கோவிலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘ஒளிமயமான இந்தியாவைத் தர ராகுல் காந்தியை அழைக்கிறேன். இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான். மோடி வந்தால் புதிய திட்டங்கள் வரும், வேலைவாய்ப்புகள் வரும் என்று நம்பி கடந்தமுறை இளைஞர்கள் வாக்களித்தனர். ஆனால், அவர்களுக்கு கூறியபடி வேலை வாய்ப்புகள் அளிக்கவில்லை.
பிரதமராவதற்கு முன்னர், கருப்புப் பணத்தை ஒழிப்பதுதான் என்னுடைய முதல் லட்சியம் என்றார். இந்தியாவிலுள்ள அனைவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்வேன் என்று கூறினார். தந்தாரா? ஒரு 15 ரூபாயாவது டெபாசிட் செய்யப்பட்டுள்ளதா? கருப்புப் பணம் எந்த நாட்டிலுள்ளது, கருப்புப் பணம் எந்த வங்கியிலுள்ளது என்பதையாவது கண்டுபிடித்து விளக்கியுள்ளாரா? கருப்பு இருக்கிறது இருக்கிறது என்று பூச்சாண்டி காட்டினார்களே தவிர, கருப்புப் பணத்தைக் கண்டுபிடிக்கவில்லை.
கருப்புப் பணம் எங்கே என்று கேட்டதற்கு, நாட்டிலுள்ள நல்ல பணம் அனைத்தையும் ஒழித்தார். ஒரு திருடனைக் கண்டுபிடிக்கச் சொன்னால், ஊரிலுள்ள அனைவரையும் கைது செய்து சிறையிலடைத்து திருடனைக் கண்டுபிடிப்பதுதான் அவருடைய முயற்சி. ரஃபேல் ஒப்பந்தத்தில் 41 சதவிதம் அளவுக்கு விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்று இந்து ராம் கண்டுபிடித்து செய்தி வெளியிட்டார்.
அதனால், இந்து ராமுக்கு, மோடியால் மிரட்டல் வருகிறது. ஆனால், இந்து ராம் பயப்படவில்லை. இந்து ராமுக்கு தி.மு.க சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்து ராமுக்கு ஆதரவாக தி.மு.க மட்டுமல்ல, இந்த மேடையிலுள்ள அனைவரும் உடன் நிற்போம். இந்து, ராம் என்ற இரு வார்த்தைகளை வைத்துதான் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைத்தீர்கள். ஆனால், தற்போது இந்த இரண்டு வார்த்தைகளை நினைத்தே பயப்பட வேண்டிய சூழல் வந்துள்ளது.
ஒரு நல்ல அரசாக இருந்தால், ஆட்சிக்கு வந்த ஓரிரு வருடங்களில் அடிக்கல் நாட்ட வேண்டும். ஆட்சியின் இறுதியில் அந்தத் திட்டத்தை திறந்துவைக்க வேண்டும். ஆனால், மோடி ஆட்யின் இறுதியில் அடிக்கல் நாட்டுகிறார். கடந்த 30 நாள்களில் 155 திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டியுள்ளார் என்று என்.டி.டி.வி ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமராக இருந்து மோடி செய்த ஒரே வேளை அடிக்கல் நாட்டுவதுதான்.காமராஜரின் பெயரைத் தேர்தலுக்காக மோடி பயன்படுத்துகிறார். ஆனால், சென்னையிலுள்ள விமானநிலையத்துக்கு காமராஜர் பெயரை சூட்டச் செய்தது கருணாநிதி. காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கருணாநிதி. வடக்கே பட்டேல் பெயரைச் சொல்லி பா.ஜ.க வாக்கு சேகரிக்கிறது. தெற்கே காமராஜர் பெயரைச் சொல்லி பா.ஜ.க வாக்கு சேகரிக்கிறது’ என்று தெரிவித்தார்.