கட்டி 6 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராத சமுதாய நலக்கூடம், நீர்தேக்க தொட்டி, கழிப்பிடம்
கோவை மாவட்டம் சூலூர் வட்டத்திற்குட்பட்ட கருமத்தம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட ராயர்பாளையம் தண்ணீர் பந்தல் சாலையில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, கழிப்பிடம் போன்ற கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடாமல் சிதிலமடைந்து வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கருமத்தம்பட்டி பேரூராட்சி நிலையில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடாமல் அதிகாரிகள் காலம்தாழ்த்தி வருவது ஏன் என சந்தேகங்கள் எழுகிறது. சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் தரமில்லாமல் கட்டப்பட்ட சம்பவம் சமீபத்தில் அம்பலமானது. அதுபோல இந்த கட்டிடங்களும் கட்டப்பட்டிருக்குமோ அதனால் தான் கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
கருமத்தம்பட்டி பேரூராட்சி தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கருமத்தம்பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் கட்டப்படுள்ள சமுதாய நலக்கூடம் தற்போது கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாததால் மது, கஞ்சா போன்ற போதை ஆசாமிகளின் கூடாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இங்கு பல்வேறு சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதாக கருமத்தம்பட்டி பேரூராட்சி அதிகாரிகளிடம் பல்வேறு புகார்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள். கருமத்தம்பட்டி காவல்நிலைய ஆய்வாளரும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை கண்டிக்கவில்லை. கேட்பாரற்று கிடக்கும் சமூக நலக்கூடத்தின் கதவுகள் திருடு போய் உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு 9.5 லட்சம் செலவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பிடம் கட்டப்பட்டது. 6 ஆண்டுகளாகியும் இது இந்நாள் வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. அதேபோல் அத்திக்கடவு குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. அந்த நீர் தேக்க தொட்டியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.
பேரூராட்சியாக இருந்த கருமத்தம்பட்டி தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்போதாவது கடந்த கால ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சமூகநலக்கட்டிடம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்ட கழிப்பிடம் போன்ற கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
– சௌந்திரராஜன்