தமிழகம்

முறைகேடாக விற்கப்பட்ட அரசுக்கு சொந்தமான இடம் மீட்கப்படுமா..?

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர், லேப் டெக்னீசியன் பணிகளுக்கு பணி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு சம்பந்தமாக ஏற்கனவே எழுதி இருந்தோம்.

சுகாதார ஆய்வாளர் பணிக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் கிளார்க் முதல் துணை இயக்குநர் வரை ஒவ்வொரு அதிகாரியின் கையொப்பம் இருக்க வேண்டும். ஆனால் அந்த பணி நியமன ஆணையில் துணை இயக்குநர் சீல் வைக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அந்த அலுவலகத்தின் நிர்வாக அதிகாரி ராம்குமாரின் கையொப்பம் இருக்கிறது. பரமக்குடி சுகாதாரத்துறை அலுவலகத்தில் துணை இயக்குனர் இருந்தும் நிர்வாக அதிகாரி எதற்காக கையொப்பமிட்டார் என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும்.

சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் அலுவலகம் இருக்கும் அரசுக்குச் சொந்தமான 3 செண்ட் இடத்தை தனி நபருக்கு வழங்கி இருக்கிறார்கள். இந்த இடத்தின் உரிமை மாநில ஆளுநர் பெயரில் இருக்கிறது. அரசுக்குச் சொந்தமான ஒரு இடத்தை மாநில அரசின் அனுமதி இல்லாமல் மாவட்ட நிர்வாகத்தில் உள்ளவர்கள் தற்போதைய சந்தை மதிப்பில் பாதி பணத்தை பெற்றுக் கொண்டு அதாவது (70 லட்சம்) லஞ்சமாக பெற்று தனி நபருக்கு வழங்கி இருப்பது அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரத்துறையின் இடத்தை தனி நபருக்கு வழங்க வேண்டுமானால் சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர் அரசின் அனுமதியுடன் தான் வழங்க வேண்டும். ஆனால் பரமக்குடியில் மேல் அதிகாரியிடம் அனுமதி இல்லாமல் 3 சென்ட் இடத்தை தனி நபருக்கு வழங்கி இருக்கிறீர்களே என்று சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தின் நிர்வாக அதிகாரி ராம்குமாரிடம் கேட்டபோது, நான் அமைச்சுப் பணிகளை மட்டும் மேற்பார்வை செய்யும் அதிகாரி. ஆகையால் இடத்தை வழங்க எனக்கு அதிகாரமில்லை. அப்போது துணை இயக்குநராக இருந்த குமரகுரு என்பவர் இருக்கும் போது தான் நகராட்சி ஆணையர் முன்னிலையில் இடம் வழங்கப்பட்டது. இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. எனக்கு அந்த அதிகாரமும் இல்லை. அப்போது துணை இயக்குநராக இருந்த குமரகுரு தற்போது சேலத்தில் பணி புரிகிறார். அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று முடித்துக் கொண்டார்.

சுகாதார ஆய்வாளர் பணி நியமன ஆணை குறித்து விசாரித்த போது சென்னையில் உள்ள Gentle Man தனியார் நிறுவனம் அனுப்பும் பணி நியமன ஆணையை சரிபார்த்து வழங்கினோம் என்றார். ஜென்டில்மேன் நிறுவனம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தமிழகம் முழுவதும் பணி நியமன ஆணை வழங்குவதாக தெரிகிறது. தற்போது கிராம சுகாதார செவிலியர்கள் பணிநியமனத்திற்கு கமுதி பகுதியில் தலா 1 லட்சம் வசூலிக்கப்படுவதாகவும் நமக்கு தகவல்கள் வந்துள்ளது.

பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தின் அருகில் உள்ள காலி இடத்தை சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகள் அனுமதி பெறாமல் தனி நபருக்கு விற்பனை செய்தது சம்பந்தமாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் குமரகுரு மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் இருவரும் விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சுகாதாரத்துறையில் பல்வேறு ஊழல் புகார்கள் பலரும் வாசித்துவரும் நிலையில் இந்தப் புகாரின் பெயரில் முறையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • சூரிகா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button