“வேணாண்டா இந்த வேலை…” : கதறும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் தாய் !
சென்னை மாநகரில் கொரோனா பாதித்த நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்காக, பல்வேறு அதிநவீன வசதிகளுடன் 3 சிறப்பு ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த ஆம்புலன்ஸ்களில் ஒன்றில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவர் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில், மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என அரசு உத்தரவு போட்டு முடக்கியுள்ளது.
இந்த நிலையில், மகன் பாண்டித்துரைக்கு தொற்று ஏற்பட்டு விடுமோ என அஞ்சிய அவரது தந்தை ”நான் பிச்சை எடுத்தாவது உன்னைக் காப்பாற்றுகிறேன். நீ வேலையை விட்டு வந்துவிடு” என கெஞ்சுவதும். அதற்கு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணி தாம் ஆசைப்பட்டு ஏற்றுக்கொண்ட பணி, அதனை விட்டு எப்படி வருவது என்று பாண்டித்துரை மறுப்பதுமான செல்போன் உரையாடல் ஆடியோ வெளியாகி இருக்கிறது.
பாண்டித்துரை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவே, அவரது தந்தையைத் தொடர்ந்து தாயும் அவரிடம் கண்ணீருடன் மன்றாடுகிறார். தனக்கு ஒன்றும் நேராது என்றும் தன்னைப் போல் எல்லா ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் எண்ணினால் இந்த மக்களின் நிலை என்னாவது என்றும் தாயிடமும் தர்க்கம் செய்கிறார் பாண்டித்துரை.
பொதுவாகவே ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அதில் வேலை செய்யும் மற்ற ஊழியர்கள் உள்ளிட்டோரின் பணி என்பது மகத்தான ஒன்றாகக் கருதப்படுகிறது. பாதிக்கப்பட்டவரை அவர் மருத்துவமனையை அடையும் நேரமான “கோல்டன் அவர்” எனப்படும் மிக இக்கட்டான நேரத்தில் கையாளும் அந்தப் பணியை ஆசைப்பட்டு ஏற்றுக்கொண்ட பாண்டித்துரையைப் போன்றவர்கள் ஏராளமானோர் இங்கு உள்ளனர்.
கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் அச்சத்தின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கும் இந்த நேரத்திலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அவர்கள் செய்யும் சேவை, போற்றப்பட வேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை.
இதனை செய்தி மூலம் அறிந்த மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பாண்டித்துரையை நம்பிக்கையின் நாயகன் என பராட்டியுள்ளார்.
இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், இவர் போன்ற தன்னலம் பாராது பாரத நாட்டிற்கு முன்னிற்கும் வீரர்கள்தான் தேசத்தின் பாதுகாவலர்கள் என்றும், பெற்றோரின் குரல் உலுக்கும் போதும், நாடு என்னவாகும் என்று கேட்கும் பாண்டித்துரையின் மனம் தான் கடவுள் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
- நமது நிருபர்