போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் :பொதுமக்கள் அவதி
சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கியதால், பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். பிற்பகல் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், உறுதி அளிக்கப்பட்டபடி ஜூன் மாத ஊதியம் மாலையில் வழங்கப்பட்டது.
சென்னையில் திங்கட்கிழமை காலை திடீரென மாநகரப் போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பணிமனைகளில் இருந்து பேருந்துகளை எடுக்கவில்லை. இதனால் பல்லாயிரக் கணக்கானோர் திட்டமிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.
தாம்பரம் தொடங்கி மாதவரம் வரை, பல்லாவரம், கிண்டி, வடபழனி, கோயம்பேடு, சென்ட்ரல், பிராட்வே, எழும்பூர், அடையாறு, வியாசர்பாடி, அயனாவரம், அம்பத்தூர், ஆவடி என எல்லா பகுதிகளிலும் மாநகரப் பேருந்துகளை நம்பி இருப்பவர்கள் தவித்துப் போயினர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகங்கள் செல்வோர் ஆட்டோ, ஷேர் ஆட்டோ என மாற்று போக்குவரத்து வசதிகளை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஷேர் ஆட்டோக்களில் வழக்கத்தைவிட கூடுதல் கட்டணம் கேட்பதாகவும் சில பகுதிகளில் புகார் எழுந்தது. பெருங் குழப்பமும் நிலவியது. அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களிடம் கேட்டபோது, ஜூன் மாத ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
வழக்கமாக மாத இறுதி நாளில் சம்பளம் வழங்கப்படும் நிலையில், ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள் என்பதால் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊதியம் முழுமையாக வழங்கப்படாது என்ற வதந்தியை நம்ப வேண்டாம் எனவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். பணிமனைகளில் அறிவிப்பு பலகைகளிலும் இது எழுதி வைக்கப்பட்டது. இருப்பினும் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து கழக ஊழியர்கள் மட்டுமே பணிக்குத் திரும்பினர்.
தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 35 பணிமனைகளிலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டு, சென்னையில் சராசரியாக சுமார் 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயங்கின.
இந்த நிலையில் சென்னை பல்லவன் இல்லத்தில், சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் கணேசன் தலைமையிலான அதிகாரிகளுடன், போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாலைக்குள் ஊதியம் முழுமையாக ஊழியர்களின் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும் என நிர்வாக தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்று பிற்பகல் 12.15 மணியளவில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்ததை தொடர்ந்து பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின.
அதிகாரிகள் உறுதி அளித்தபடி மாலை 5 மணியளவில் போக்குவரத்து கழக ஊழியர்களின் வங்கி கணக்கில் ஜூன் மாத ஊதியம் வரவு வைக்கப்பட்டடது.