அரசியல்தமிழகம்

சத்துணவு திட்டம் அதிமுக அரசின் மெகா ஊழல்! அம்பலமான ஆவணங்கள்…

தமிழக அரசுக்கு மதிய உணவுத் திட்டத்தில் முட்டை, சத்துமாவு, பருப்பு உள்ளிட்டவற்றை சப்ளை செய்த திருச்செங்கோடு கிறிஸ்டி நிறுவனத்தில் கடந்த ஜுலை மாதம் நடத்திய ரெய்டில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், அவர்களின் உறவினர்களுக்கு அந்த நிறுவனம் ரூ.2,400 கோடி லஞ்சம் கொடுத்துள்ளதாக வருமான வரித்துறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் முட்டை விநியோகம் செய்து வருகிறது.
இதுபோல், சத்துமாவு, பருப்பு உள்ளிட்டவையும் ஒப்பந்த அடிப்படையில் விநியோகிக்கிறது. இவை தவிர, பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிப்பிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது வரி ஏய்ப்பு, முட்டை விநியோகத்தில் முறைகேடு செய்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த ஜூலை 5-ம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோட்டில் உள்ள நிறுவனத்துக்கு சொந்தமான குடோன்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.
இதுபோல், திருச்செங்கோடு வட்டூரில் உள்ள நிறுவன உரிமையாளர் வீடு, நிறுவன ஆடிட்டர்கள் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. 70-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில், ரூ.17 கோடி வரை பணம், 10 கிலோ தங்க நகைகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான சொத்து ஆவணங்கள், சந்தேகத்துக்குரிய பினாமிகளின் பெயர்களில் சொத்துக்கள், ஆவணங்கள், பென்டிரைவ்கள், உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை கைப்பற்றிச் சென்றதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் வருமானவரித்துறை கைப்பற்றிச் சென்ற ஆவணங்களில் பென் டிரைவ், ஆணவங்களில் ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், முக்கிய பதவியில் உள்ள அரசியல்வாதிகள், மூத்த உயர் அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கிறிஸ்டி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் 2 ஆயிரத்து 300 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
வருமானவரித்துறையின் மிக உயர்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் கூறுகையில், “ தமிழக அரசின் சமூகநலத்துறையின் கீழ் வரும் சத்துணவுத் திட்டத்துக்கு பாமாயில், பருப்பு உள்ளிட்டவற்றை சப்ளை செய்துள்ளதில் நடந்த ஊழல் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் கிறிஸ்டி நிறுவனத்தில் சோதனை நடத்தினோம்.
அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் கடந்த சில ஆண்டுகளில் அந்த நிறுவனம் மூத்த அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், அவர்களின் உறவினர்களுக்கு ரூ.2,400 கோடி லஞ்சம் கொடுத்துள்ளதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன.
அந்த அதிகாரிகளுக்குச் சம்மன் கொடுக்கும் பணியை வருமானவரித்துறை தொடங்கிவிட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. மேலும், சந்தேகத்துக்கு உரிய வகையில் பணம் செலுத்தியதற்கான ரசீதுகள், ஆவணங்கள், ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்வது குறித்த திட்டங்கள் போன்றவையும் அந்த ஆவணங்களில் உள்ளன.


பல ஆண்டுகளாக அரசியல்வாதிகள் பலருக்கும், துறையில் உள்ள பல்வேறு உயர் அதிகாரிகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் கிறிஸ்டி நிறுவனம் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து வந்துள்ளது. இவை பெரும்பாலும் அடையாள வார்த்தைகளில் இருக்கின்றன.
மேலும், முக்கிய அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் பெயரும் அந்தஆவணங்களில் இடம் பெற்றுள்ளது. பலகோடிக்கணக்கான ரூபாய்கள் ஆன்-லைன் மூலம் அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.2,400 கோடி இருக்கும்” என்று பெயர்வெளியிட விரும்பாத அந்த விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில், சந்தேகத்துக்கு உரிய அரசு உயரதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கிறிஸ்டி நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து வருமானவரித்துறை விசாரித்து வருகின்றனர். தங்களுக்கு டெண்டர் அளிப்பதற்காகவா அல்லது பில் தொகையை விரைவாக அளிப்பதற்காக என்ற கோணத்தில் விசாரணை நடப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த ஊழல் தொடர்பான தகவல்கள், விவரங்கள் குறித்து ஆளும் அதிமுக அரசுக்கும், மற்ற மத்திய விசாரணை முகமைகளுக்கும் வருமான வரித்துறை தெரிவித்து கடிதம் எழுத உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வருமானவரி தாக்கல் செய்வதில் கோடிக்கணக்கில் வருமானத்தை மறைத்து ரிட்டன்களை கிறிஸ்டி நிறுவனம் தாக்கல் செய்துள்ளது என்றும், நாமக்கல்லில் உள்ள தேசிய வங்கிகளில் பெற்ற வங்கிக்கடனுக்கும் அதற்கான ஆவணங்களுக்கும் முரண்பாடு இருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
வருமானவரித்துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மேலும் கிறிஸ்டி நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் 12-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் நடத்தியதாகச் சந்தேகப்படுகிறோம். இதன் மூலம் பணத்தை அந்தப் போலி நிறுவனங்களில் டெபாசிட் செய்திருக்கிறது. அந்த நிறுவனங்களின் வங்கிக்கணக்குகளை முடக்க இருக்கிறோம்.
வருமானவரித்துறையின் நடவடிக்கைக்குத் தடை கேட்டு, நிறுவனத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள் எனத் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button