பழனியில் தரமற்ற சாலை, கழிவுநீர் கால்வாய் பணிகள் ! மக்களை எச்சரித்த கவுன்சிலர் !
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் தரமில்லாத தார்சாலை, கழிவுநீர் கால்வாய் பணிகளை சுட்டிக்காட்டிய பொதுமக்களிடம், தரக்குறைவான வார்த்தைகளைப் பேசி விரட்டியடித்த வார்டு கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொந்தளித்து வருகின்றனர்.
பழனி நகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு சத்தியா நகர் பகுதியில் சமீபத்தில் தார் சாலை அமைக்கும் பணி நடந்துள்ளது. இந்த சாலை அவசர அவசரமாக தரமற்ற நிலையில் போடப்பட்டுள்ளது. அப்பகுதியினர் சாலையை கைகளால் பெயர்த்து எடுத்து காண்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் கழிவுநீரை வெளியேற்ற அமைக்கப்பட்ட கால்வாய் பணிகளும் தரமற்ற நிலையில் நடைபெற்றுள்ளதால், தெருக்களிலும், சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கொசுக்கள் உருவாகி குழந்தைகளும், வயதான முதியவர்களும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் மேற்கூறிய பணிகளை தரமற்ற முறையில் செய்து முடித்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வார்டு கவுன்சிலர் சரவணனிடம் அப்பகுதியினர் கேட்டபோது, அதெல்லாம் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என மிரட்டி அனுப்பி வைத்ததாக கூறுகின்றனர்.
மேலும் அரசு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தரமற்ற முறையில் சாலை, கழிவுநீர் கால்வாய் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சாதிக் பாட்சா