பெண் மருத்துவரை செருப்பால் தாக்கிய பெண்..! : சக மருத்துவர்கள் போராட்டம்
மதுரை அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி மருத்துவரை நோயாளியின் உறவினர் ஒருவர் காலணியால் தாக்கியதாகக் கூறி மருத்துவர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மாலதி என்ற பயிற்சி மருத்துவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது, பெண்ணின் உறவினரான மற்றொரு பெண் காலில் செருப்பு அணிந்தபடி பிரசவ வார்டுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை மருத்துவர் மாலதி கண்டிக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண்ணின் உறவினர் தனது காலில் இருந்த காலணியைக் கழற்றி, மருத்துவர் மாலதியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த மருத்துவர் மாலதி சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பணியிலிருந்த மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தாக்குதல் நடத்திய பெண் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டு 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் செவிலியரை, அரசு மருத்துவர் ஒருவர் தரக்குறைவாக பேசி வம்புக்கு இழுத்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றது.
பணி நேரத்தில் தன்னை எதிர்த்து பேசிய செவிலியரை சரமாரியாக திட்டித்தீர்த்த மருத்துவர் தமிழ்செல்வன், அடிக்க செல்வது போல அவரை விரட்டிச்சென்றும் வாக்குவாதம் செய்தார். அப்போது, ஆளை அழைத்து வந்து போட்டு பார்த்துக் கொள்ளலாம் என்ற ரீதியில் தரக்குறைவாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து செவிலியரின் கணவரை தொடர்பு கொண்டு விசாரித்த போது, செவிலியர் கூட்டமைப்பில் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தெரிவித்தார். அதே நேரத்தில் நோயாளி குறித்து முறையான பதிவு குறிப்பிடாததை சுட்டிக்காட்டிய மருத்துவரை அவமரியாதையாக பேசியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் தமிழ்செல்வன் செவிலியருடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகின்றது.
ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் பொறுப்பான பதவியில் உள்ள மருத்துவர் தமிழ்ச்செல்வன், பொது இடத்தில் செவிலியரை ஒரு பெண் என்றும் பாராமல் இப்படி தரம் குறைந்து பேசி இருக்கக் கூடாது என்பதே சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் ஆதங்கமாக உள்ளது.
& சரவணகுமார்