தமிழகம்

பட்ஜெட் “யாரை ஏமாற்றும் செயல்” : கொதித்த பிடிஆர்

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து கருத்துச் சொல்லியிருக்கும் பலரும் இந்த பட்ஜெட் யாருக்கான பட்ஜெட் என்ற கேள்வியை எழுப்பியதோடு மட்டுமல்லாமல் இது பட்ஜெட்டே கிடையாது என்று முழுமையாக நிராகரித்துள்ளனர்.

இந்த பட்ஜெட்டில் ஒரு நாடு ஒரு பத்திரப்பதிவு என்கிற திட்டத்தை நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலினும், நிதியமைச்சர் பிடிஆர்தியாகராஜனும் அறிவித்திருக்கிறார்கள். ஏனென்றால் மாநில அரசுக்கு வருவாய் ஈட்டித்தருகின்ற முக்கியமான துறை வருவாய் மற்றும் பத்திரப்பதிவுத் துறைதான். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்திற்கும் பத்திரப்பதிவு என்பது மாறுபடும். அந்தந்த மாநிலத்தின் சூழலியல் சார்ந்து, அந்த மாநிலத்தின் மக்கள் வாழ்வியல் சார்ந்து, அந்த மாநிலத்தில் மக்கள் நலன் சார்ந்து செயல்படுத்தப்படும். அப்படி இருக்கும் சூழ்நிலையில் ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு என்று கொண்டு வரும்போது இது மாநிலத்தின் உரிமைகளைப் பறிப்பதாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார்கள்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டுறவு கூட்டாட்சியின் அடிப்படையில் மாநில மூலதனம் முதலீடுகளுக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு எனக்கூறி மாநிலங்களுக்கு நிதி போவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினாலும் இந்த நிதி ஒதுக்கீடு முக்கியமாக பிரதமரின் கதி சக்தி திட்டத்திற்கே பயன்படுத்தப்படும் என்பது மாநிலத்தின் பெயரைச் சொல்லி ஒன்றிய அரசே தனது திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் விதமான நிதி ஒதுக்கீடாகவே காட்சியளிப்பதாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

நிர்மலா சீதாராமனின் தில்லுமுல்லுகளை அம்பலப் படுத்தியிருக்கிறார் மு.க.ஸ்டாலின் என்று குறிப்பிட்டுள்ளார்கள் பொருளாதார நிபுணர்கள். ஏனென்றால் மாநிலத்திற்கு நாங்கள் நிதி அளிக்கிறோம் என்று நாடாளுமன்றத்தில் கூறிவிட்டு கஜானாவில் பணத்தை எடுத்து அதனை பிரதமர் கதி சக்தி திட்டத்தின் மூலமாகத்தான் மாநிலங்களுக்கு வழங்குவோம் என்று கூறுவது, மாநிலத்தின் பெயரைச் சொல்லி ஒன்றிய அரசு அந்த பணத்தை எடுத்துக் கொள்வதற்குத்தான் வழிவகுக்குமே தவிர அது மாநிலங்களுக்கு உண்மையாக வந்து சேருமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்கள்.

மேலும் இந்த பட்ஜெட்டில் மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிற கொரோனா பெருந்தொற்று தாக்கத்தால் ஏற்பட்ட வாழ்வாதார, பொருளாதார இழப்பிலிருந்து மக்களை மீட்கும் நலத்திட்டங்கள் எதுவும் இல்லை. மாறாக கார்பரேட்களுக்கு விதிக்கப்படும் வரி 12 சதவீதத்திலிருந்து 7% சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பதுதான் இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக மாறி இருக்கிறது. இதனால் தான் இந்த பட்ஜெட் மக்களுக்கானதா? கார்பரேட் முதலாளிகளுக்கானதா? என்கிற கேள்வியை பொருளாதார அறிஞர்கள் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தனிநபர் வருமானத்தில் எந்த மாற்றமும் இல்லை. மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் இல்லை. தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்த திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்கப்படவில்லை.

குறிப்பாக தமிழ்நாட்டிற்கு புதிய ரயில் திட்டங்கள் இல்லை. மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களுக்கு போதிய நிவாரண நிதி ஒதுக்கீடும் இல்லை. இந்த பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருப்பது தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் ஏமாற்றம் அளிக்கிறது. வார்த்தை அலங்காரத்துடன் வழக்கமாக ஒன்றிய பாஜக அரசு வெளியிடும் பட்ஜெட்டாகவே இருக்கிறது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பேரூராட்சி பகுதிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வரக்கூடிய நிலையில் அதற்கான நிதி ஒதுக்கீட்டினை 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு குறைத்திருக்கிறார்கள். அதாவது வேலை வாய்ப்புகளை பெருக்கப் போகிறேன் என்று ஒரு பக்கம் சவால் விடுவது, அதே நேரத்தில் மக்களுக்கு பெருமளவில் ஊரகப்பகுதிகளில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கக் கூடிய மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்திருப்பது யாரை ஏமாற்றும் செயல் என்று கேள்வி எழுப்பியுள்ளார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

மேலும் மானியங்களாக கொடுப்பதை இப்போது கடன்களாக மாற்றியிருக்கிறார்கள். ஒரு நாட்டில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டு இருக்கும் போது, ஜிடிபி தவறாக கணக்கிடும் போது நாட்டில் அந்தந்த சீசனில் வருமானம் வரியாக கணக்கீடு செய்யாத போது ஜிடிபி உயர்ந்து கொண்டேதான் இருக்கும். அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் இந்த அரசு உண்மையிலேயே பொருளாதார வளர்ச்சிக்கான அரசு தானா என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறார் பழனிவேல் தியாகராஜன்.

நகர்புறங்களில் பெரும்பாலான வேலைவாய்ப்புகளை எம்.எஸ்.எம்.ஈ (விஷிவிணி) மூலமாகத்தான் செயல்பட்டு வருகின்றன. அதற்கான நிதி ஒதுக்கீடு எதுவும் இல்லை. ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய போதிய நிதி ஒதுக்கீடுகள் வரவில்லை. மானியங்கள் எல்லாம் கடன்களாக மாறியிருக்கின்றன. ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இந்த ஆண்டோடு நிறைவு பெறுவதாக இருக்கிறது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசாங்கத்தின் நிதிச்சுமை இனிவரும் காலங்களில் அதிகரிக்கும். தமிழ்நாடு எம்எஸ்எம்ஈ செக்டாரை எப்படி கவனிக்கப் போகிறது என இந்த நிதிநிலை அறிக்கை கேள்விக்குறியாக மாற்றியிருக்கிறது.

மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்கும் விதமாக 200 தொலைக்காட்சி சேனல்களை உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். இதில் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்படும். கற்றலின் மிகப் பெரிய அனுபவமே மாணவர்கள் நேரில் பழகி ஆசிரியர்களோடு தொடர்பு கொண்டு அந்த சூழலை அனுபவித்து அந்த கற்றல் அனுபவம் தான் மாணவர்களை கற்றவர்களாக மாற்றுகிறது. வெறுமனே புத்தகத்தை வாசிப்பவர்கள் கற்றறிந்தோர் அல்ல.

இதை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கு மக்கள் தொடர்பை ஏற்படுத்தி அதன் மூலமாக கல்வியையும், அறிவையும் பகிர்ந்தளிக்கும் செயலில் தான் தமிழ்நாடு ஈடுபட்டிருக்கும் போது மீண்டும் மீண்டும் நான் சேனல்களை தொடங்கப் போகிறேன். அவர்கள் வீட்டிலிருந்தபடியே கல்வி கற்கட்டும் என்று சொல்வது மாணவர்களின் கல்வியை ஊக்குவிப்பதற்காக அல்ல. மாறாக ஒன்றிய அரசினுடைய கருத்துக்களை மாநிலத்தின் கல்வி மீது திணிப்பதற்காகத்தான் இது என்று கூறியிருக்கிறார் பழனிவேல் தியாகராஜன்.

சூரிகா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button