ரத்தத்தை உறைய வைத்த நவம்பர் 29 : 3 பேர் கொலை வழக்கில் போலீசுக்கு சவால் விடும் கொலையாளிகள்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல்சரகத்திற்குட்பட்ட சேமலைகவுண்டன் பாளையத்தில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி விவசாயி தெய்வசிகாமணி, மனைவி அலமாத்தாள் மற்றும் மகன் செந்தில்குமார் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலையாளிகளை பிடிக்க 14 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கொலை நடந்து 10 நாட்கள் கடந்த நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கொலை சம்பவம் நடந்த வீட்டிற்கு வருவதற்கு 5 வழிகள் உள்ளன. இது கொலையாளிகளுக்கு சாதகமாக்கிகொண்டதாக தெரிகிறது. மேலும் கண்காணிப்பு கேமரா போன்ற நவீன தொழில் நுட்பங்கள் சுற்றுவட்டார பகுதிகளில் இல்லாதது போலீசாரின் விசாரணைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த கொலை சம்பவத்தில் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்துள்ளதும், செந்தில்குமாரின் செல்போன் சிம்கார்டு உடைக்கப்பட்டு திருடப்பட்டிருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
கொலை சம்பவம் திட்டமிட்டு நிறைவேற்றி இருந்தால் எதை நோக்கி நடத்தப்பட்டது? பணம் நகைகளை குறி வைத்தா? செந்தில்குமார் வீட்டிற்கு வந்து தங்கி இருப்பதை நோட்டமிட்டு நடந்ததா? அல்லது தெரிந்த நபர்களிடம் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடந்ததா? கொள்ளையில் ஈடுபடுபவர்கள் 8 சவரன் நகைக்காக ஈடுபட்டிருந்தால் போலீசாருக்கே சவால் விடும் வகையில் ஒரு சிறிய தடையத்தை கூட விட்டு வைக்காத ஹை டெக் டெக்னாலாஜியை பயன்படுத்தியிருப்பது சந்தேகமே.
சமீப காலங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கொண்டு போலீசார் நடத்தும் விசாரணையை நன்கு அறிந்து தேர்ச்சி பெற்ற கும்பல் திட்டமிட்டே இந்த கொலையை நடத்திவிட்டு தப்பி இருக்கலாம்.
மேலும் அவினாசிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே ஆட்களை கடத்திச்சென்று சொத்துக்களை எழுதி வாங்கிய சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும் விவசாய நிலங்கள் சூழ்ந்த பசுமையான இது போன்ற கிராமப்பகுதிகளில் விவசாயத்தை பாதுகாக்கும் விவசாயி குடும்பம் தற்போது என்ன நடந்தது என்று தெரியாமல் தவிப்பில் உள்ளது.
அமைச்சர் முதல் அண்ணாமலை வரை தங்களது இரங்கலை தெரிவித்தாலும் போன உயிர் வரப்போவதில்லை. கிராமங்கள் தோறும் இளைஞர்களை ஒன்றிணைத்து இரவு ரோந்து, கண்காணிப்பு கேமரா போன்ற குறத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் குற்றங்களை குறைக்கமுடியும்.