250 கோடி மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிக லாபம் ஈட்டித்தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தனியார் நிதி நிறுவனம் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. முதலீட்டுக்கு மேல் வருமானம் தருவதாக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி பல லட்சம் ஏழை மக்களின் பணம் சுமார் 250 கோடியை தனியார் நிதி நிறுவனம் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் ஒன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கிளை நிறுவனங்களை துவங்கியுள்ளது. குறிப்பாக இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அலுவலகங்களை துவங்கியுள்ளது. ஏழாயிரம் ரூபாயை (7,000) செலுத்தினால் முப்பது மாதங்களுக்கு மாதம் 700 ரூபாய் வீதம் சுமார் 21,000 வழங்குவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பி பலரும் லட்சக்கணக்கில் செலுத்தியுள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பணம் செலுத்தியவர்களுக்கும் மாதாமாதம் தரக்கூடிய 700 ரூபாய் தொகையை அவர்களது வங்கிக்கணக்கில் அந்த நிறுவனம் அனுப்பியுள்ளது. இதனிடையே ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் செலுத்துபவர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்ற கவர்ச்சியான அறிவிப்பை நிதி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மேலும் பல சலுகைகளை கூறி பொதுமக்களின் ஆசையை தூண்டியுள்ளனர் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள். இதனை கேட்ட வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். குறிப்பிட்ட தொகை சேர்ந்த பிறகு அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மாதந்தோறும் அனுப்பும் பணத்தை நிறுத்தி விட்டனர். நிதிநிறுவனம் கூறியபடி காரும் தரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோதும் அவர்களுக்கு முறையான பதிலை கூறாமல் அலைக்கழித்துள்ளனர்.
இந்த நிதி நிறுவனத்தில் அதிகமாக முதலீடு செய்த இராமநாதபுரம் மாவட்ட வாடிக்கையாளர்கள் கோவையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு சென்று பார்த்துள்ளனர். ஆனால் அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் போனை அணைத்து விட்டு நிதி நிறுவனத்தை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணமோசடிப் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த நிறுவனத்தினர் தமிழகம் முழுவதும் சுமார் 250 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிதிநிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகவும், சுமார் 25 கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். கூலி வேலை செய்யும் ஏழை எளியோர் மற்றும் பெண்கள் இந்த நிதிநிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நிதி நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகவே உள்ளது. காவல்துறையினர் பணமோசடி குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். போலி வாக்குறுதிகளை கொடுக்கும் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவாகள் வலியுறுத்தியுள்ளனர்.
– ராஜா