ஊழலுக்கு தடையாக இருந்ததால் வனத்துறை தலைவர் மாற்றமா?
தமிழ்நாட்டின் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் ரவிகாந்த் உபாத்யாயா திடீரென அப்பதவியில் இருந்து முக்கியத்துவமற்ற பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். மிகவும் நேர்மையான அதிகாரியான உபாத்யாயா வனத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட 5 மாதங்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீயில் 22 பேர் உயிரிழந்ததால் வனத்துறைக்கு மிகப்பெரிய அளவில் அவப்பெயர் ஏற்பட்டது. அத்தகைய சூழலில் தான் வனத்துறைத் தலைவராக ரவிகாந்த் உபாத்யாயா நியமிக்கப்பட்டார். அவர் தலைவராக பதவியேற்ற பிறகு தான் வனத்துறை செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை ஏற்படுத்தப்பட்டது. முறைப்படுத்தப் படாமல் நடைபெற்று வந்த மலையேற்றப் பயிற்சியை ஒழுங்குபடுத்தும் வகையில் மலையேற்றப் பயிற்சிக் கொள்கையை உபாத்யாயா உருவாக்கினார். வனத்துறையில் நடைபெற்று வந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை அவர் கட்டுப்படுத்திய நிலையில் தான் உபாத்யாயா திடீரென மாற்றப்பட்டிருக்கிறார்.
வனத்துறைத் தலைவராக 5 மாதங்களுக்கு முன்பு தான் ரவிகாந்த் உபாத்யாயா நியமிக்கப்பட்டார். அவருக்கு இன்னும் 10 மாதங்கள் பதவிக்காலம் இருக்கும் நிலையில் அவர் திடீரென மாற்றப்பட்டது தவறு. காவல்துறை தலைமை இயக்குனர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் அமர்த்தப்படுபவர்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது அந்தப் பதவியில் நீடிப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒரு துறையின் தலைமைப் பதவியில் அமர்த்தப்படுபவர் குறைந்தது 2 ஆண்டுகள் அப்பதவியில் நீடித்தால் தான் முழுமையான சீர்திருத்தங்களைச் செய்ய முடியும் என்ற எண்ணத்தில் தான் உச்சநீதிமன்றம் அத்தகைய ஆணையை பிறப்பித்தது. வனத்துறை தலைவர் பதவிக்கு குறைந்தபட்ச பதவிக்காலம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும் கூட, தார்மீக அடிப்படையில் வனத்துறை தலைவர் பதவிக்கும் குறைந்தபட்ச பதவிக்கால நிபந்தனை பொருந்தும். அவ்வாறு இருக்கும் போது தேவையின்றி வனத்துறை தலைவர் ரவிகாந்த் உபாத்யாயா மாற்றப்பட்டது ஏற்கத்தக்கதல்ல.
தமிழ்நாடு முழுவதும் வனத்துறைக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதியை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன. வன ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரவிகாந்த் உபாத்யாயா வனத்துறை தலைவராக பொறுப்பேற்ற பிறகு வன ஆக்கிரமிப்பை முற்றிலுமாக தடுத்து நிறுத்தியதுடன், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களையும் மீட்க நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த தனியார் நிறுவனங்களும், செல்வாக்குள்ள தனிநபர்களும் தமிழக அரசுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாகவே உபாத்யாயா மாற்றப்பட்டதாக வனத்துறையினரே குற்றஞ்சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, வனத்துறையில் காலியாக உள்ள 40% பணியிடங்களை நிரப்பும் நோக்கத்துடன் 900 வனக்காவலர்கள் மற்றும் 158 வனச்சரகர்களை நியமிக்கும் பணிகளில் உபாத்யாயா ஈடுபட்டார். இதற்கான ஆள் தேர்வில் முறைகேடு செய்ய திட்டமிட்டிருந்த ஆட்சியாளர்கள் அதற்கு உபாத்யாயா தடையாக இருப்பார் என்பதால் தான் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
வனத்துறை செயலாளராக இருந்த நசிமுதீன் என்ற நேர்மையான அதிகாரி அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார். அடுத்த சில வாரங்களிலேயே வனத்துறை தலைவரும் மாற்றப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது, வனத்துறையில் மிகப்பெரிய அளவில் ஏதேனும் பெரிய அளவிலான ஊழல் அல்லது மோசடியை செய்ய ஆட்சியாளர்கள் திட்டமிட்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
தமிழகத்தில் வன வளத்தை பாதுகாக்க வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது. வனநிலக் கொள்ளை, ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக தீவிரமாக போராடும் குணம் கொண்ட ஒருவர் வனத்துறை தலைவராக இருந்தால் தான் வனவளத்தை அதிகரிக்க முடியும். ஆனால், அத்தகைய குணம் கொண்ட அதிகாரியை மாற்றியிருப்பதன் மூலம் வனவளத்தை பாதுகாப்பதில் தங்களுக்கு அக்கறையில்லை என்பதை அரசு வெளிப்படுத்தியுள்ளது. இது நல்லதல்ல. வனத்துறை தலைவர் இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்து, ரவிகாந்த் உபாத்யாயாவை மீண்டும் வனத்துறை தலைவராக நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்தனர்.