இயற்கையை காக்கும் ‘நாடொப்பன செய்’ இளைஞர் குழு
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் “நாடொப்பன செய்” என்ற இளைஞர் குழுவினர் 4 ஏரிகளில் ஆயிரக்கணக்கான பனைவிதைகளை விதைத்திருப்பதுடன், ஏராளமான மரங்களை பராமரித்து வருகின்றனர்.
நாடு ஒப்புக்கொள்ளும் நல்ல செயல்களை செய் என்பதைக் குறிக்கும் வகையில் அவ்வையார் அருளிய ஆத்திச்சூடியில் வரும் வரிதான் “நாடொப்பன செய்”. அதன்படி கடந்த 2017ஆம் ஆண்டு திருக்கோவிலூரைச் சேர்ந்த இளைஞர்கள் 18 பேர் “நாடொப்பன செய்” என்ற பெயரில் குழுவாக இணைந்து மரக்கன்றுகள் நடும் பணியில் இறங்கினர்.
எங்கெல்லாம் மரக்கன்றுகள் நட்டு பரமாரிக்க சாத்தியக் கூறுகள் இருந்ததோ, அங்கெல்லாம் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு அவற்றை பரமாரித்தும் வரத்தொடங்கினர். இவர்களது தன்னலமற்ற செயல் திருக்கோவிலூர் சுற்றுவட்டாரத்தில் பலரது கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியது.
அதே பெயரில் வாட்சப் குழுவை உருவாக்கியபின் படிப்படியாக தன்னார்வலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கதது. பின்னர் இந்த இளைஞர் குழு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு காலை 6 மணிக்கு திருக்கோவிலூர் நகரில் உள்ள 18 வார்டுகளிலும் தங்களது குழுவில் உள்ள நபர்களை ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு நபரை மேற்பார்வையாளராக வைத்து மரக் கன்றுகளை நட்டு பாதுகாத்து வந்துள்ளனர்.
மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இந்த குழு நட்டுவைத்த மரக்கன்றுகள் செழித்து வளரத் தொடங்கியுள்ளன. சித்தேரி, பெரிய ஏரி, அரும்பாக்கம் ஏரி, காட்டுப்பையூர் ஏரி ஆகிய நான்கு ஏரிகளில் 8 ஆயிரம் பனை விதைகளை விதைத்துள்ளதாக நாடொப்பனசெய் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இளைஞர்களின் இந்த சேவைப்பயணத்தில் திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விடுமுறை தினங்களில் பயனுள்ள பொழுதுபோக்காக நாடொப்பன செய் குழுவினருடன் இணைந்து பல்வேறு சமூகப் பணிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவில் வளாகம், நீதிமன்ற வளாகம், பள்ளி வளாகம், பூங்காக்கள் என பல்வேறு முக்கிய இடங்களில் இக்குழுவினரின் அபரிவிதமான உழைப்பு கண்கூடாகத் தெரிகிறது. இதுமட்டுமின்றி “வன்கரை” என்ற பெயரில் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களின் கல்விக்கும் தங்களால் இயன்ற உதவிகளை இந்தக் குழு செய்து வருகிறது.
அழகான தென்பெண்ணையாறு, அதன் நடுவே கபிலர் குன்று, திரும்பும் திசையெங்கும் கோவில்கள் என திருக்கோவிலூர் எழில் சூழ்ந்த நகரம். கால ஓட்டத்தில் தனது பொலிவை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் திருக்கோவிலூரின் ஆன்மாவை மீட்டெடுக்கும் பணியில் “நாடொப்பன செய்” குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.