அதிமுகவின் முன்னாள் அமைச்சரான ராஜகண்ணப்பன் திமுகவிற்கு நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் ஆதரவு அளித்துள்ளார்.
ராஜகண்ணப்பன் கடந்த 1991ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போது ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், முக்கிய துறை பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றினார். அதன்பின்னர் சில காரணங்களால் ‘மக்கள் தமிழ்தேசம்’ என்ற தனிக்கட்சியை தொடங்கி செயல்பட்டு வந்தார். அந்தக் காலத்தில் 2001ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இடம்பெற்று, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். பின்னர் 2006ஆம் ஆண்டு கட்சியை கலைத்துவிட்டு, திமுகவில் இணைந்தார். அதே ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு இளையான்குடி தொகுதியில் வெற்றியும் பெற்றார்.
இதன்பின்னர், 2009ஆம் ஆண்டு தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்தார். அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கையில் போட்டியிட்ட இவர், ப.சிதம்பரத்திடம் 3,354 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதன்பின்னர் 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்தார். ஜெயலலிதா மறைந்ததும் அதிமுக இரண்டாக உடைய, அந்தத் தருணத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்த அணியில் சேர்ந்தார்.
அதன்பின்னர், ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அணி இணைந்ததால், அதிமுகவில் தனது பொறுப்பை தொடர்ந்தார். இந்த நிலையில் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடும் மனநிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் விரும்பிய ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை தொகுதியை அதிமுக தனது கூட்டணி கட்சியான பாஜகவிற்கு ஒதுக்கிவிட்டது. இருப்பினும், அந்த இரண்டு தொகுதிகள் இல்லையென்றாலும், மதுரையில் போட்டியிடலாம் என ராஜகண்ணப்பன் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அங்கேயும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், திடீர் முடிவாக திமுகவிற்கு அவர் ஆதரவை தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் இரண்டிலுமே அவர் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். மேலும், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தொகுதிகளில் அவர் அதிமுகவிற்கு எதிராக பிரச்சார களத்தில் இறங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸீ