தமிழகம்

நிறம் மாறும் திருப்பூர்… தடுமாறும் அதிகாரிகள்..!

திருப்பூர் மாவட்டம் சர்வதேச சந்தையில் பின்னலாடை துறையில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் நகரமாக திகழ்ந்து வருகிறது. மேலும் பின்னலாடை உற்பத்திக்கு முதுகெழும்பாக திகழ்வது சாய சலவை ஆலைகள்.

சாய ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலந்ததால் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டதோடு கால்நடைகள் மற்றும் விவசாயத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பூஜ்ய சதவிகித சுத்தகரிப்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்தாத சாய ஆலைகளை மூட உத்தரவிட்டது. இதனால் சுமார் 754 சாய ஆலைகள் மூடப்பட்டன.

இதனை அடுத்து பின்னலாடை கடும் நெருக்கடியை சந்தித்தது. பின்னிட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு தற்போது 18 பொது சுத்தகரிப்பு நிலையங்களுக்குட்பட்டு 147 சாய ஆலைலகளும் தனியார் சுத்தகரிப்புடன் 100 ஆலைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் தற்போது ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இயங்குவதை கண்காணிக்க திருப்பூரில் வடக்கு தெற்கு என இரண்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்கள் உள்ளன. ஆனால் தற்போது மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அலட்சியத்தால் பல பகுதிகளில் சாய கழிவு நீர் சாக்கடை கால்வாய் வழியாக நொய்யல் ஆற்றில் திறந்துவிடப்படுவதால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக சாய தொழிற்சாலைக் கழிவுநீரை சுத்திகரிக்கும் செலவை மிச்சப்படுத்தி அதிகமான லாபம் பெற ஈவு இரக்கமின்றி பழைய கிணறுகளிலும், ஆழ்துளைக் கிணறு மற்றும் புதிதாக ஆழ்துளைக் கிணறு உருவாக்கி அந்தக் கழிவு நீரை நேரடியாக விடப்படுவதால் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கொங்கு மண்டலத்தின் முக்கிய நதியான நொய்யலாறு கரை அருகில் உள்ள சாயப்பட்டறை தொழிற்சாலைகளின், சாயபட்டறைக் கழிவுநீர் நேரடியாக கலப்பதால் நொய்யல் ஆற்று நீர் முழுமையாக விஷமாகும் சூழல் உருவாகி உள்ளது.

தற்போது திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இடுவாய், இடுவம்பாளையம், அணைப்பாளையம், முதலிபாளையம், காசிபாளையம், மாணிக்காபுரம், எஸ்.பெரியபாளையம், மங்கலம், வோட்டுவபாளையம், ஆண்டிபாளையம், ஜம்முனை ஒடை, முருகம்பாளையம், சங்கிலி பாலம், வீரபாண்டி, வெங்கமேடு, அங்கேரிபாளையம், ஆத்துப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களின் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் மாசுபடும் சூழல் உருவாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல நல்ல சாய ஆலை உரிமையாளர்கள் நேர்மையாக நடந்தாலும், இதுபோன்ற சில சாய ஆலை உரிமையாளரின் சுயநலத்தால் செய்யப்படும் அற்ப காரியத்தால் அனைத்து சாய ஆலை உரிமையாளர்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது.

உதாரணமாக கடந்த மாதம் திருப்பூரில் இரவு பெய்த மழையை பயன்படுத்தி பல லட்சம் லிட்டர் சாயக் கழிவுநீரை ஆற்றில் கலந்து விட்டனர். மேலும் சாய ஆலைகள், ரோட்டரி டையிங்கள் , பிரிண்டிங் நிறுவனங்கள் பெயருக்கு சுத்திகரிப்பு பிளான்ட் இருப்பதாகக் கூறிக்கொண்டு அதனை செயல்படுத்தாமல், சாய கழிவுகளை செப்டிக் டேங்க் லாரிகள் மூலம் இரவு நேரங்களில் வருகிறார்கள் எனவும் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பலமுறை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலும் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்தோடு புகார் அளித்த போதும், விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் புகார் அளித்தும், கண்துடைப்பு நடவடிக்கையாக சிலமுறை பார்வையிட்டுச் செல்வார்கள் மற்றும் சில மாதிரிகள் எடுத்துச் சென்று சோதனை செய்வதோடு சரி இதுவரை எந்த எந்தவிதமான நிரந்தர நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என வேதனை தெரிவித்தனர்.

மேலும் தண்டனை கடுமையானால் தான் தவறுகள் தடுக்கப்படும் கண்துடைப்பு சோதனையால் தவறு செய்யும் சாயபட்டறைகள் மேல் எடுக்கப்படுவதில்லை. அப்படி எடுத்தாலும் சில வாரங்களில் தவறுகள் திருத்தப்பட்டதாகக் கூறி மீண்டும் முறைகேடு ஆலைகள் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. சில ஆண்டுகளாக சமூக அக்கறையுள்ள பல அமைப்புகள் சாயக்கழிவுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர். மேலும் காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை சுற்றுப் பகுதிகளில் கார்பன் உற்பத்தி செய்யும் கரி தொட்டி ஆலைகள் பல மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி இன்றி செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் ஒரு சில பெரிய நிறுவனங்கள் பல்லாயிரம் சதுர அடியில் மாசுகட்டுபாடு அதிகாரிகளிடம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி கடிதம் பெற்று நடப்பதாக கூறுகின்றனர். இதனால் சுற்றுப் பகுதியில் தண்ணீர் நிறம் மாறி வருகிறது. இதற்கு காரணம் முறைகேடுகளை கண்டித்துத் தடுக்க வேண்டிய திருப்பூர் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட நிறுவனம் மீது புகார் வந்தால் அந்த நிறுவனத்திற்கு கண்துடைப்பிற்காக ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாடு பறக்கும் படை, நிலத்தடி நீர் மற்றும் நொய்யல் ஆற்று நீர் ஆய்வு செய்ய வேண்டிய வாகனம் என எதுவும் திருப்பூரில் செயல்படுகிறதா? என சந்தேகம் எழுகிறது. முறைகேடுகள் பற்றி புகார் செய்த அப்பாவி மக்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை பார்த்து மனம் நொந்து செல்ல வேண்டியுள்ளனர். எனவே நிறம் மாறும் திருப்பூரை காப்பாற்ற அரசு தனி கவனம் செலுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

– நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button