சுடுகாட்டு பாதை பிரச்சனை : காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையிலேயே கொடூர தாக்குதல்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கீரனூர் கிராமத்தில் இறந்தவரின் உடலை பொதுப்பாதை வழியாக தலித் மக்கள் கொண்டு செல்வதற்கு அதே ஊரைச் சேர்ந்த மாற்று சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கோட்டாட்சியர் மற்றும் கலசப்பாக்கம் வட்டாட்சியர் முன்னிலையில் 2021 ஆகஸ்டில் தலித் அருந்ததியர்கள் இறக்க நேரிட்டால் உடலை சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் மாநில நெடுஞ்சாலை வழியாக எடுத்துச் செல்வது என ஏற்கனவே முடிவு எடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த அமுதா என்பவர் உடல்நலக்குறைவால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளார். அதற்கு மறுநாள் ஊரடங்கு என்பதால் அதற்கு அடுத்த நாள் உடலை அடக்கம் செய்யுமாறு காவல் துறை அறிவுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே சுடுகாட்டுப் பாதையை வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினர் பார்வையிடச் சென்றபோது திடீரென ஒரு கும்பல் தடுத்து நிறுத்தியுள்ளது. அப்போது வீரளூர் கிராமத்தினருடன் மேல்சோழங்குப்பம், குற்றம்பள்ளி ஆகிய கிராமத்தினரும் ஒன்று சேர்ந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட மாற்று சமூகத்தினர் கத்தி, வெட்டரிவாள், கடப்பாரை, கிரிக்கெட் மட்டை போன்ற ஆயுதங்களால் அருந்ததியர் குடியிருப்புகளில் நுழைந்து கண்ணில் பட்ட குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட அருந்ததியர் மக்கள் அனைவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். வீடு, கதவு, ஜன்னல், பீரோ, மிக்சி, கிரைண்டர், டிவி, இருசக்கர வாகனங்கள், டாடா ஏசி வேன், மின் இணைப்பு பெட்டி போன்றவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையிலேயே இந்த கொடூர தாக்குதல் நடைபெற்றுள்ளது.
மறுநாள் சனவரி 17 பிற்பகல் 3 மணி அளவில் அரசு மருத்துவமனையில் இருந்த அமுதாவின் சடலத்தை காவல்துறையின் பாதுகாப்புடன் எடுத்து வந்து வீட்டில் இறுதிச் சடங்குகள் செய்து நெடுஞ்சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்துள்ளனர். இந்த வன்கொடுமை தாக்குதலில் சேதமடைந்த வீடு இருசக்கர வாகனம் டாட்டா ஏசி வேன் உட்பட சேதமடைந்த பொருட்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். படுகாயமடைந்த சுமார் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், பாதுகாப்பும் வழங்க வேண்டும்.
தாக்குதல் நடத்தியவர்களில் 21 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர், அனைவரும் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட வேண்டும். இது போன்று இனி நிகழாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தலித் நில உரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனிமுருகேசன் வலியுறுத்தியுள்ளார்.
– நமது நிருபர்