தடுமாற்றத்தில் ஆர்.கே.செல்வமணி அணி : சந்தோஷத்தில் கே.பாக்கியராஜ் அணி
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் 2022&2024 ஆம் ஆண்டிற்கான தேர்தல் கடந்த 25 ஆம் தேதி சென்னையில் உள்ள இசையமைப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற இருந்தது. இந்த தேர்தலில் இயக்குனர் பாக்கியராஜ் தலைமையில் ஒரு அணியும் ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டது. ஆர்.கே.செல்வமணி துணைத் தலைவர் பதவிக்கும் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சங்கத்தை நிர்வகிக்கும் பல்வேறு பதவிகளில் இருந்த ஆர்.கே.செல்வமணியின் மனு நிராகரிக்கப்பட்ட செய்தி மிகவும் சுவாரஸ்யமான விஷயமாக எதிர் அணியினர் பேசினர்.
நடிகர் பாக்கியராஜ் அணியில் துணைத்தலைவர் பதவிக்கு இயக்குனர் எழில், இயக்குனர் மாதேஷ் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். செல்வமணி அணியில் கே.எஸ்.ரவிக்குமா, ரவிமரியா, ஆர்.கே.செல்வமணி ஆகிய மூன்று பேர் போட்டியிட்டனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை முன்மொழிதல், வழிமொழிதல் விதிகளை நன்கு அறிந்த செல்வமணி வேண்டுமென்றே கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா இருவர் மனுவையும் முன்மொழிந்து கையொப்பமிட்டுள்ளார். இவர் துணைத்தலைவருக்கு போட்டியிடுவதால் ஒருவருக்கு மட்டும்தான் முன்மொழிதல் கையொப்பமிட வேண்டும். விதியை மீறி செயல்பட்டதால் செல்வமணி அணியில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கேஎஸ்.ரவிக்குமார், ரவிமரியா, செல்வமணி ஆகிய மூன்று பேரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டு பாக்கியராஜ் அணியில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
சங்கத்தின் சட்டதிட்டங்களை நன்கு அறிந்த செல்வமணி வேண்டுமென்றேதான் அதாவது தோளில் கையைப் போட்டு நம்பியவர்களை கழுத்தறுப்பது தான் அவரது பாணி. கடந்த தேர்தலில் ரவிமரியா செல்வமணிக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட்டு அவரது பலத்தைக் காட்டினார். அப்போதே ரவிமரியாவை ஓரம் கட்ட நினைத்தார் செல்வமணி. தற்போது வாய்ப்பு கிடைத்ததும் அதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். இவர் தற்போது எழுத்தாளர்கள் சங்கத்தில் துணைத் தலைவராக இருந்து வருகிறார். அங்கு இதேபோல் இரண்டு பேருக்கு முன்மொழிந்தாரா? இல்லையே! அப்போ வேண்டுமென்றுதானே இப்போது கேஎஸ் ரவிக்குமார், ரவிமரியா மனுக்களை நிராகரிக்க செய்துள்ளார் செல்வமணி என்கிறார்கள்.
தேர்தல் தேதி அறிவித்த உடனேயே தேர்தல் நடைபெறும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கடிதம் கொடுத்து அனுமதி வாங்க வேண்டும். தற்போது கொரோனா நடைமுறை விதிகள் அமலில் உள்ளதால் சென்னை மாநகராட்சியிலும் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் இந்த இரண்டு இடங்களிலும் காலதாமதமாக அனுமதி கடிதம் கொடுத்திருக்கிறார்கள் செல்வமணி தலைமையிலான நிர்வாகிகள். ஏனென்றால் எப்போதும் செல்வமணியை எதிர்த்து வலுவான நபர்கள் போட்டியிட்டதில்லை. இப்போது பாக்கியராஜ், பார்த்திபன் போன்ற பெரிய இயக்குனர்கள் போட்டியிட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாற்றத்துடன் செயல்பட்டது செல்வமணி அணி என்கிறார்கள்.
கொரோனா காலத்தில் பொது இடங்களில் கூட்டம் கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை மீறி தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம் தேர்தலை நடத்துகிறது. இந்த தேர்தலுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழத்திரை பத்திரிகை ஆசிரியர் கார்த்திகேயன் சென்னை மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு அளித்த புகாரின் பேரில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தலுக்கு சென்னை மாநகராட்சியும் வடபழனி காவல்துறையினரும், அனுமதி மறுக்கப்படுவதாக கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் கடந்த 25ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதால் கவலையில் பாக்கியராஜ் அணியினரும், சந்தோசத்தில் செல்வமணி அணியினரும் இருப்பதாக உறுப்பினர்கள் பேசி வருகிறார்கள். பெரும்பாலான இயக்குனர்களின் ஆதரவு பாக்கியராஜூக்கும், இணை, துணை, உதவி இயக்குனர்களின் ஆதரவு செல்வமணிக்கு இருப்பதாகவும் தெரிகிறது. தற்போது செல்வமணி பெப்சியின் தலைவராக இருப்பதால் ஏதாவது ஒரு சங்கத்தில் நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் பெப்சி தலைவர் பதவியில் தொடர முடியும் என்ற நிர்பந்தம் செல்வமணிக்கு ஏற்பட்டுள்ளது.
ஆகையால் தற்போது பாக்கியராஜ் அணியினரும், செல்வமணி அணியினரும் தேர்தல் இல்லாமல் சுமூகமாக செல்லலாம் என பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். அதாவது செல்வமணி சார்பில் பேசும் விக்ரமன் செல்வமணியை துணைத் தலைவராக தேர்வு செய்யுங்கள். அவர் பெப்சியில் தலைவராகத் தொடரட்டும். பாக்கியராஜ் தலைவராக இருக்கட்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு பாக்கியராஜ் அணியினர் ஒத்துக்கொள்ளவில்லையாம். இந்த தேர்தலில் பாக்கியராஜூக்கு, இயக்குனர் பாரதிராஜாவும், ஆர்.கே.செல்வமணிக்கு இயக்குனர் விக்ரமனும் வேலை பார்த்ததால் போட்டி கடுமையானதாக மாறியது போல் காட்சியளித்தாலும் செல்வமணியின் பேச்சிலும், செயலிலும் தடுமாற்றம் தெரிந்ததாக நடுநிலையான உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.
தற்போது தமிழகத்திலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றிருக்கும் நிலையில் செல்வமணி பெப்சியில் தலைவராக தொடர்வதை யாரும் விரும்பவில்லை. இதையும் மீறி செல்வமணி பெப்சியின் தலைவராகத்தான் இருப்பேன் என அடம்பித்தால் தமிழ் சினிமாவிற்கும் சினிமாத் தொழிலாளர்களுக்கும் தான் பாதிப்பே தவிர செல்வமணிக்கு ஒரு பாதிப்பும் இல்லை. இதை உணர்ந்து, தான் சார்ந்திருக்கும் சினிமாவையும், சினிமாத் தொழிலாளர்களையும் காப்பாற்ற நினைத்தால் செல்வமணி தானாக ஒதுங்கி இருக்க வேண்டும் என்கிறார்கள் பெரும்பாலான சினிமாத் தொழிலாளர்கள்.
இதெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தனக்கு பதவிதான் முக்கியம். அதை எந்த வழியிலும் அடைந்தே தீருவேன் என்கிற தனது கொள்கையில் எந்தவித மாற்றமும் இன்றி தனது டிரேடு மார்க் சிரிப்புடன் செல்கிறார் ஆர்.கே.செல்வமணி.
– சூரியன்