தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமைந்ததும் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரின் பதிலுரையில் முதலமைச்சர் பேசும் போது தேர்தல் கால வாக்குறுதிகளை வாக்குகளை ஈர்ப்பதற்கான காந்தம் என கருதாமல், நாட்டின் மேம்பாட்டுக்கு, நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு உறுதியாக செய்தே தீர வேண்டிய செயல்கள் என்றே கருதுகிறேன். சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்பதை கலைஞரிடத்திலே ஆரம்பக் கல்வியாக கற்றவர்கள் நாங்கள் என்று பெருமையாக கூறினார்.
தேர்தல் பிரச்சாரங்களில் அன்றைய எதிர்கட்சித் தலைவரும், இன்றைய முதலமைச்சருமான ஸ்டாலின் பல வாக்குறுதிகளை பல்வேறு இடங்களில் தமிழக மக்களிடத்திலே ஆட்சி அமைந்ததும் உடனடியாக செய்ய இருப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். தமிழகத்தை சீரழித்த கடந்தகால ஆட்சியில் ஊழல் செய்தவர்களையும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் நடைபெற்ற மர்மத்தை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தி, கைது செய்து சிறையில் அடைப்பது தான் எனது முதல் பணியாக இருக்கும் என்றார். ஆனால் அந்தப் பணிகள் இன்னும் தொடங்கபடவில்லையே என்ற எதிர்பார்ப்பு ஏராளமான பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மர்மமரணத்திற்கு யார் காரணம். அதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து நாட்டுக்கு அடையாளம் காட்டி அவர்களை சிறையில் தள்ளுவது தான் எனது முதல் வேலை. அந்த முதல் வேலையை இந்த ஸ்டாலின் தான் செய்யப் போகிறேன். அதில் யாரும் சந்தேகப்பட தேவையிலை என்று வாக்குறுதி அளித்தார். அதே போல் பொள்ளாச்சியில் 200 இளம் பெண்கள் கற்பழிப்பு ஏழு ஆண்டுகளாக நடைபெற்றது. அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் யார் எனக் கண்டறிந்து பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என நிரூபிப்போம் என்று கூறியிருந்தார்.
ஆவின் நிறுவனத்திற்கு சுமார் 300 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்திய இராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பால் முகவர்கள் புகார் அளித்திருந்தனர். மதுரை மாவட்ட பால் விற்பனை நாணைய சங்கத்தில் 8 கோடி முறைகேடு, பால் குளிர்பதன கிடங்கில் 67 லட்சம் மோசடி புகார் கண்டுப்பிடிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. பால்வளத்துறையில் விதிமுறைகளை மீறி நேரடி நியமனங்கள் போன்ற பல்வேறு குற்றங்களைச் செய்த ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படுவார் என்றார்.
கமிஷன் கலக்ஷன், கரப்ஷன், ஆட்சி நடத்திய பழனிசாமி அரசாங்கத்தில் தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலையில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள், கொடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை, சாத்தான் குளத்தில் தந்தை, மகன் லாக்கப்பில் கொலை செய்யப்பட்டது, காவல்துறையின் சிறப்பு டிஜிபி ராஜேஸ் மீது பாலியல் புகார் கொடுத்த பெண் எஸ்பி கொடுத்த புகார், நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர்களை தனது உறவினர்களுக்கு வழங்கி 6 ஆயிரம் கோடி ஊழல் செய்து பதவியை தவறுதலாக பயன்படுத்திய பழனிசாமி மீது உள்ள பல்வேறு புகார்கள் திமுக ஆட்சி அமைந்ததும் விசாரணை செய்து கைது செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, குட்கா புகழ் விஜயபாஸ்கர் உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் 89 கோடி ரூபாய் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்திருப்பதாக ஆவணங்கள் சிக்கியது. தமிழ்நாட்டின் முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்ததில் இருந்து என்ன சிகிச்சை வழங்கப்பட்டது என முறையான அறிவிப்புகளை வெளியிடாதது என பல்வேறு புகார்களை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதிகளை கூறியிருந்தார்.
உள்ளாட்சித் துறையை ஊழல் ஆட்சித்துறையாக மாற்றிய வேலுமணி தெரு விளக்குகளை மாற்றி எல்.இ.டி. பல்ப் மாற்றுவதாக கூறி 450 ரூபாய் மதிப்புள்ள பல்ப் 3737 ரூபாய்க்கு வாங்கியதாக கணக்கு காட்டியிருந்தார். மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்த வேலுமணி செய்த ஊழல்களையெல்லாம் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிரூபித்து தண்டனை வாங்கித் தருவதே முதல் வேலை என்று கூறியிருந்தார்.
முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியலை ஆளுநரிடம் இன்றைய முதல்வர் ஸ்டாலின் கொடுத்திருந்தார். தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக அரசு அந்த ஊழல் பட்டியலில் உள்ள அமைச்சர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடத்திலே ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்களை கைது செய்து முறைகேடாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்து வீழ்ச்சி அடைந்த தமிழகத்தை எழுச்சி பெற வைக்க வேண்டும். இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே அனைத்து வகையிலும் பின்தங்கிய தமிழகத்தின் பெருமையை மீட்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
– சூரியன்