விதிகளை மீறி சரள்மண் அள்ளும் அனுமதி… : ரத்து செய்யப்படுமா..?
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கீழ புளியங்குளம் குளத்தில் விதிமுறைகளை மீறி சரள்மண் அள்ளுவதால் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறி ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள் குளத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் கீழ புளியங்குளம் குளத்தில் நேரில் பார்வையிட்டு விவசாயிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தியுள்ளார்.
புகாரின் அடிப்படையில் இந்த குளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம். விதிமுறைப்படி மணல் அள்ளப்பட்டு உள்ளதா? என அளவீடு செய்யப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் அம்பாசமுத்திரம் தொழில் வழி சாலை பணிகளுக்காக சரள்மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அளவீடு பணி முடிந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே கீழபுளியங்குளம் குளத்தின் மதகுகளை உடைத்து தண்ணீரை வெளியேற்றி சரள்மண் எடுப்பதால் விதிகளை மீறி சரள்மண் அள்ளும் அனுமதியை ரத்து செய்யக் வேண்டும் என அப்பகுதில் கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் அலுவலக துணை இயக்குனர், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு அப்பகுதி விவசாயிகள் சார்பில் புகார் அளித்துள்ளனர்.
திருச்செந்தூரில் இருந்து அம்பாசமுத்திரம் வரை தொழில் வழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீமூலக்கரை ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கீழபுளியங்குளம் குளத்தில் உள்ள சரள் மண்களை சட்டவிதிமுறைகளை மீறி தூர்வாருதல் என்ற பெயரில் குளத்தின் தண்ணீர் பிடிப்பு பகுதிக்கு வெளியே சரள் மண்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு பல்வேறு கனரக வாகனங்களில் அளவுக்கு அதிகமாக மணல் எடுத்துச் செல்லப்படுகிறது. குறிப்பாக, இந்த குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கூடுதலாக தண்ணீர் சேமிக்கும் வகையில் இரண்டு அடிக்கு மிகாமல் சரள்மண் எடுத்துச் செல்வதற்கு அனுமதி பெற்றுக் கொண்டு 3 அடி முதல் 7அடிவரை சட்ட விதிமுறைகளை மீறி சரள் மண் எடுக்கப் படுவதால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி நீர்ப்பிடிப்பு பகுதியில் அனுமதி பெற்றுள்ளது போல் சரள்மண் அள்ளாமல் குளத்தின் கரையோரத்தில் அதிக ஆழத்தில் அள்ளுவதால் மழைகாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும், கீழபுளியங்குளம் குளத்தின் அருகில் பழங்கால ஆதிமனிதர்கள் வாழ்ந்த எச்சங்கள், மண்பாண்டங்கள் மற்றும் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் மத்திய தொல்லியல் துறை மூலம் அகழ்வாராய்ச்சியும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், கீழபுளியங்குளம் குளத்தில் தொல்லியல் களம் அருகே குவாரி உள்ளிட்டவைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ள நிலையில் திருச்செந்தூர் அம்பாசமுத்திரம் நெடுஞ்சாலைப்பணிக்காக சரள் மண் அள்ளி வருகின்றனர். மேலும், கீழபுளியங்குளத்தில் பொது மக்கள் குளிப்பதற்கும் கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்கும் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினர் இந்த குளத்தை பயன்படுத்தி வருகின்றனர். குளத்திலிருந்து சரள்மன் அள்ளுவதற்காக குளத்தில் உள்ள மடைகளை உடைத்து தண்ணீரை வீணாக வெளியேற்றி வருகிறார்கள்.
இந்த குளத்தை தூர்வாருவதாக கூறி கடைமடையிலிருந்து முறையாக சரள் மண்ணை எடுக்காமல் ஆங்காங்கே பள்ளம் தோண்டி எடுப்பதால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதனால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தள்ளனர்.
– பன்னீர்செல்வம்