கனிமவள கொள்ளை… : கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா..?
எந்தவிதமான உரிய முன் அனுமதியும் இல்லாமல் திருநெல்வேலி தென்காசி வழியாக கேரளாவுக்கு ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் மணல், ஜல்லி, கற்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதை புகைப்படத்தோடு புகார் தெரிவித்தாலும் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை.
தென்காசி – செங்கோட்டை வழியாக மட்டுமல்லாமல், கன்னியாகுமரி-களியக்காவிளை வழியாகவும் கேரளாவிற்கு இதுபோன்று கடத்தப்படுகின்றன. தேனி மாவட்டம் கம்பம் வழியாக இப்படி சட்டவிரோதமாக இயற்கை வளங்களைக் கடத்துவதும் நடந்து கொண்டே இருக்கிறது. கோவையிலிருந்து அட்டப்பாடி, பாலக்காட்டை நோக்கியும் தினமும் இப்படிக் கடத்தப்படுவது செய்திகளாக வருகின்றன.
தமிழக அரசு இதைக் கவனிப்பதும் இல்லை. தமிழக அரசின் ஆசியோடுதான் இது நடக்கிறதா என்பது ஒரு கேள்வி என அங்குள்ள மக்கள் கூறுகின்றார்கள், ‘‘ஒரு யூனிட்டுக்கு ரூ.300 மாமூல் அளித்தால் கடத்தப்படுகின்ற லாரிகள், எளிதாக நகரும்’’ எனவும் அப்படி என்றால் ஒரு லாரிக்கு குறைந்தபட்சம் நான்கு யூனிட்டுகள் என்று வைத்துக் கொண்டால் கூட ரூ.1200 மாமூல் கிடைக்கின்றது. இந்த பகற்கொள்ளை மூலம் லாபம் அடைபவர்கள் யார் என்று தெரியவில்லை.
இப்படி கடத்தப்படுகிற மணல், ஜல்லி, கற்களை கேரளாவில் பல மடங்கு விலை கொடுத்து வாங்குவதற்கும் தயாராக உள்ளார்கள். கேரளாவுக்கு தமிழகத்திலிருந்து நான்கு வழிகளின் வழியாக இப்படி இயற்கை வளங்கள், நமது நீர் ஆதார சிக்கலில் செல்லும்போது தனிப்பட்ட சிலரும், அதிகார வர்க்கமும் சம்பாதிக்கின்ற பணத்தைக் கணக்கெடுத்தால் அது நமக்கு வேதனையைத் தருகின்றது.
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில் பத்து கிராமத்தைச் சார்ந்த கிராம நிர்வாகி லூர்து பிரான்சிஸ் மணல் மாஃபியாவால் கொடூரமாக கொல்லப்பட்டார். மணல் போன்ற கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் தமிழகத்தில் கடந்த காலத்தில் கொல்லப்பட்டனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியா முழுவதும் 79 பேர் படுகொலை செய்யப்பட்டதாகத் தகவல்.
2012இலிருந்து 2021 வரை உலகம் முழுவதும் 1733 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட படுகொலைகள் தென்அமெரிக்க நாடுகள், மெக்ஸிகோ, கொலம்பியா, பிரேசிலில் அதிகம். இதற்கு உலக சமுதாயம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? மலை, வனம், ஆற்றுச் செல்வங்களை எப்படி எதிர்காலத்தில் பாதுகாக்கப் போகிறோம்? இந்த இயற்கையின் அருட்கொடைகள் இருந்தால்தான் காற்று, நீர் என்ற மனித சமுதாயத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு இயற்கை வளங்களைச் சுரண்டுவது, கார்பன் வெளியேற்றம், வெப்பநிலை கூடுதலாவது ஆகிய சவால்களில் இருந்து எப்படி மனித சமுதாயம் மீளப் போகிறது என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.
– கே.எஸ்.ராதாகிருஷ்ணன்