“தலைநகரில் ஒரு தேடல்’’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா “உற்றுயிர்த்துத் தேடலாகி’’
தலைநகர் சென்னையில் கடந்த 16.11.2019 ம் நாள் அண்ணாசலையில், ஒரு மாலைப்பொழுதினில், அழகிய பூங்காவாக திகழும் காஸ்மோ – பாலிடன்-கிளப் – துளிப் ஹாலில் அரங்கேறிய விழாத் தேடல் தான் “உற்றுயிர்த்துத் தேடலாகி”
ஆம், திருமதி. ஜெ.விஜயராணி மி.கி.ஷி., அவர்களின் சுவாசக் காற்றை உள்வாங்கி, இதயத்தை ஆக்கிரமித்து, உணர்வுகளின் சேமிப்புக் கிடங்கான மூளைப் பகுதியில் ஒழிந்து கொண்டு விழிகளின் வாசல் திறந்து மலர்ந்த பூக்கள் தான் “உற்றுயிர்த்துத் தேடலாகி” என்று சொன்னால், அது மிகையாது.
“நிறைகுடம் தழும்பாது” “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்“ இப்படி பல நூறு பழமொழிகளை அறிஞர் பெருமக்கள், ஒரே வரியில் உள் கருத்துக்களை ஊரறிய உணர்த்தியுள்ளார்கள் என்பதை நாம் அறியாமலில்லை. அதுபோல இந்த கவிதை தொகுப்பு நூலான ‘’உற்றுயிர்த்துத் தேடலாகி” என்பதும் கற்றோர்களின் மன அழுத்தத்தில் உருவான மானசீக புலம்பல் எனலாம்.
இன்னும் சொல்லப் போனால் சிப்பியின் கருவறைக்குள் பிறக்கும் முத்துக்களை உயிரை பணயம் வைத்து உள்மூச்சு வாங்கி, ஆழ்கடலில் மூழ்கி முத்துக்குளித்து சிப்பிகளை கரை சேர்த்து ஆயுதத்தால் சிப்பிகளை கூர் பிளந்து கிடைக்கும் முத்துக்களை, பிரித்தெடுத்து தங்க அணிகலன்களில் அழகாக கோர்த்து அழகு சேர்க்கும் உண்மை படைப்புதான் “உற்றுயிர்த்துத் தேடலாகி” என்று சொன்னால் மறுப்பதற்கில்லை.
இந்நூலை பொறுத்தமட்டில். திருமதி. ஜெ.விஜயராணி மி.கி.ஷி., அவர்கள் இரண்டு குழந்தை செல்வங்களை தான் பெற்றெடுத்திருந்தாலும் அவரை ஈன்றெடுத்த அன்னையின் பால் நினைவு கூர்ந்து அவர்தம் கனவுகளை நனவாக்க அவர் துணிந்து தொடர்ந்த வாழ்க்கை பயணங்களின் விளைவுதானோ ! என என்னைப் போன்றோரை சிந்திக்கவும் வைக்கிறார்.
கையளவு இதயத்துக்குள் கணக்கில் அடங்கா சுமைகளை தாங்கி, நெருப்பாற்றில் நீந்தி இன்னல்கள் பல கடந்து கரை சேர்ந்து இளைப்பாறும் வேளையில் பெற்ற முதல் குழந்தை தான் இந்த கவிதை தொகுப்பு நூல் “உற்றுயிர்த்துத் தேடலாகி” இக்குழந்தை மழலை பேசி தவழ இவ்விழாவில் தடம் அமைத்துள்ளார் என்று சொன்னால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
என் பேச்சும் தமிழே! என் மூச்சும் தமிழே! என அனுதினமும் துதிபாடும் தமிழ் கிறுக்கன். புதுமுக கவிஞர்களுக்கு கவிதை ஊருக்கு செல்ல வழிகாட்டும் வழிகாட்டி! தான் எழுதிய திரைப்பட பாடலுக்கு அரசு மகுடம் பெற்றவர். 1990 புது நெல்லு புது நாத்து கொண்டு 1998ல் சேதுவில் இருந்து இன்றுவரை ஆயிரம் பாடலை தொட நெருங்கும் கவியோன் கவிதை பயிற்சி கல்லூரிக்கு முதல்வர் இந்த காதல் மதி, இவரின் காதல் கவிதையை கேட்டால், வசந்த மாளிகையையும், தாஜ்மஹால் கதைகளும் தோற்றுப் போகுமளவிற்கு இலக்கிய வசனம் பேசும். முழுமதிதான் கவிஞர் அறிவுமதி. நூல் ஆசிரியரை வாழ்த்துடன் விழாவிற்கு தலைமையேற்க, அதற்கடுத்தாற்போல்….
என்றோ ஒருநாள் ஏதேச்சையாக திருமதி. ஜெ.விஜயராணி IASஅவர்கள் பணியில் இருக்கும் வேளையில் சந்தித்தது முதல் இன்றுவரை நட்பு வலைக்குள் வலம் வருபவர், கலைமாமணி இசையமைப்பாளர் பரத்வாஜ் “உற்றுயிர்த்துத் தேடலாகி” முதல் நூலைப் பெற்று வாழ்த்தவும், தொடர்ந்து….
“உற்றுயிர்த்துத் தேடலாகி’’
தமிழன்னையின் அருள் வேண்டி, இம்மண்ணில் தன்னை படைத்த தாயிற்கு அர்பணிப்பை அழகாக முத்தமிட்டு ஏற்புரையை தொடர்ந்தார் ஆசிரியர், ஆட்சியர் திருமதி. ஜெ.விஜயராணி மி.கி.ஷி., அவர்கள். எங்கே செல்லும் இந்தப்பாதை என ஆரம்பித்து, இன்றியமையாத காரணத்தால் விழாவிற்கு வர இயலாத மூத்த அதிகாரி இறையன்பையும் நினைவுபடுத்தி, தன் இதயத்தின் அருகில் இருக்கும் நட்பு வட்டங்களை மட்டும் விழாவை சிறப்பிக்க அழைத்த செய்தியையும் செவியிலிட்டு போகிற இடத்தில் என்னைவிட நல்ல அழகுள்ளவனாக ஒருவன் இருந்துவிட்டால் என்ற உபநயனத்துடன் தன்னுடன் ஒரு நாள் பொழுதை கழிக்க வந்த தாம் சார்ந்த துறையாளர்களை குறிப்பிடுகையில் பெரும்பாலும் சந்தோஷத்திலும் சில நேரம் வருந்தியும் என்ற தலைப்பை சுட்டிக்காட்டி விழா தலைமை குருநாதர் அறிவுமதிக்காக தான் பேச எடுத்துக் கொண்ட 34 நிமிடம் 15 நொடி வரை ஆங்கில வார்த்தை என் நாவில் எழக்கூடாது என தமிழன்னையை மன்றாடி கேட்டு, தட்டச்சு எழுத்துக்களையும் குட்டி முயல்களையும் மேடையில் நடமாட விட்டு புறமென்மை, அக வலிமை, கெஞ்சி கேட்கும் புல்வெளி காதல், தான் எழுதிய கவிதைகளுக்குள் பொறுக்கி வேடம் கொண்டு கவிதை பொறுக்கியாகி இதன் விளைவால் கிடைத்த “உற்றுயிர்த்துத் தேடலாகி” நூல் உருவம் பெற்ற விதம், Side, Sorry, சரியா Sir, Great Relationship இப்படி பேச்சில் ஊடுருவி வந்த வெள்ளைக்கார ஜாதி ஜனங்களை விரட்டியடிக்க முயன்று 80 சதவீதம் தமிழன்னையின் வரம் கிடைக்கப்பெற்று, தனக்கே உரிய பாணியில் உள்ளக்களிப்பில் தோகையை விரித்தாடும் மயில் போல தன்னைவாழ்த்த வந்த அன்பு நெஞ்சங்களை புன்னகை கொண்டுவரவேற்று தன் மனதில் பூத்த சொற்களால், இல்லை இல்லை கவி மணம் கமழும் தென்றலாய் வர்ணித்த விதம் விழாவிற்கு மேலும் ஒரு மைல் கல்லாக சான்று படைத்து வருகை புரிந்தவர்களும், மனம் நெகிழ்ந்து இவர் ஐந்து மொழிகளிலும் பல கற்று தேர்ந்தவர் மட்டுமில்லை எழிலகத்திலும் ராணி தான். எழிலகராணி திருமதி. ஜெ.விஜயராணி என போற்றி பிரியாவிடை பெற்றனர். மேலும் இவர் பல தேடல்களை படைத்து சிறப்புக்கள் பல பெற தமிழன்னையை வேண்டி வணங்குவோம்.
- ராஜசிம்மன், தேனி.