தமிழகம்

பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா..?

நூற்றாண்டுகளை கடந்த, பழமை மிக்க பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் ஆரம்ப காலத்தில் பல விரைவு ரயில்கள் நின்று சென்றுள்ளன. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சென்னை, திருச்சி, விழுப்புரம், திருவனந்தபுரம், கொழும்பு (இலங்கை) உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் பரங்கிப்பேட்டையில் நின்று சென்றுள்ளன. அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பிறகு பயணிகள் ரயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன.

விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில்கள், பெங்களுர் – காரைக்கால் செல்லும் பயணிகள் ரயில்கள் என மொத்தம் எட்டு ரயில்கள் பரங்கிப்பேட்டையில் நின்று செல்கின்றன. பரங்கிப்பேட்டை வழியாக செல்லும் 60க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களில் ஒன்றுகூட இங்கு நின்று செல்வதில்லை. பயணிகள் ரயில்கள் மூலமாக மட்டும் ஆண்டுக்கு பதினொரு இலட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை இந்த ரயில் நிலையம் ஈட்டுகிறது. விரைவு ரயில்கள் நின்று சென்றால் திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிக வருமானம் ஈட்டுகின்ற முன்னனி ரயில் நிலையமாக பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் மாறும் என்பதில் ஐயமில்லை.

ஆகவே, தற்போது பரங்கிப்பேட்டை வழியாக செல்லும் தினசரி விரைவு ரயில்களில் சென்னை, மதுரை, திருப்பதி விரைவு ரயில்கள் உள்ளிட்ட சில ரயில்களை பரங்கிப்பேட்டை நிறுத்தத்தில் நிறுத்த வழிவகை செய்ய இந்திய ரயில்வே அமைச்சகம் ஆவண செய்ய வேண்டும். அது ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.

146 ஆண்டுகள் பழமையான பாரம்பரியமிக்க பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் பல வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கிய ரயில் நிலையமாக இருந்தும், அரசால் கண்டுகொள்ளப்படாமல், முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. ஆங்கிலேயர் காலத்திலிருந்து மிகவும் புகழ்ப்பெற்ற இந்த ரயில் நிலையத்தை NSG-6 என்ற தரத்திலிருந்து தற்போது வெறும் நிறுத்தல் (Halt Station) நிலையமாக தரமிறக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

எதற்கும் பொதுமக்களின் கருத்துக்களையோ, கோட்ட ரயில் பயனாளிகள் ஆலோசனைக் குழு (DRUCC) உறுப்பினர்களின் கருத்துக்களையோ கேட்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. HG-2 வகைக்கு இணங்க பயணிகள் வசதிகளும் பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் வழங்கப்படவில்லை.


ஆண்டிற்கு 1 இலட்சம், 75000, 65000 பயணிகள் புறப்படும் ரயில் நிலையங்கள் Halt Stationகள் அதாவது பிநி தரத்திலும், ஆண்டிற்கு 1000, 400, 200 ஏன் 5 பயணிகள் மட்டுமே புறப்படும் ரயில் நிலையங்கள் NSG-6 தரத்திலும் பிரிக்கப்பட்டு ரயில்வே துறையால் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்திற்கு அநீதி இழைக்கப்பட்டள்ளது.

எனவே, அருகிலுள்ள பல ரயில் நிலையங்களை விட அதிக பயணிகள் எண்ணிக்கையும், அதிக வருவாயை அள்ளி வழங்கும் பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தை NSG தரத்தில் உயர்த்திட வேண்டும். அந்த தரத்திற்குரிய ரயில் நிலைய பயணிகளுக்கான வசதிகளை செய்து தர வேண்டும்.


இந்த ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடை மிகவும் தாழ்வாக உள்ளது. மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்த போது அமைக்கப்பட்ட நடைமேடை உயர்த்தப்படாமல் அப்படியே உள்ளதால், பயணிகள் ரயிலில் ஏறும்போதும், இறங்கும்போதும், படிகள் உயரமாக இருப்பதால், அடிக்கடி கீழே விழுகின்றனர். முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் ரயிலில் ஏற மிகுந்த சிரமப்படுகின்றனர். ஆகவே, நடைமேடை உயர்த்தப்பட வேண்டும்.

இந்தப் பகுதிகளில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அனல்மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் உள்ளன. இங்கு உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த காலங்களில் முன்பதிவு வசதி இருந்ததால், பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் பயனடைந்தனர். தற்போது முன்பதிவு வசதி இல்லாததால், விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல முன்பதிவு செய்ய முடியாமல் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பயண சீட்டு பதிவு செய்பவர்கள் சிதம்பரம் அல்லது கடலூர் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

எனவே, பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் ரத்து செய்யப்பட்ட முன்பதிவு மையத்தை மீண்டும் துவக்க வேண்டும். அத்துடன் சீசன் டிக்கெட் மீண்டும் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கலீல்பாகவி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button