திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி நகராட்சிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் தேர்தல் என்பதால் ஒவ்வொரு கட்சியிலும் லோக்கல் செல்வாக்கு உள்ள நபர்கள் சீட்டு வாங்கும் மும்முரத்தில் இருக்கிறார்கள்.
இதற்கிடையே சில இடங்களில் கட்சியை மீறி ”தனி கவனிப்பு”, பழைய பாசம் இப்படி பல காரணங்களால் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு சீட் கிடைக்க கட்சியின் முக்கியஸ்தர்களே திரைமறைவு வேலைகள் செய்வது வழக்கம்.
பூந்தமல்லி நகராட்சியிலும் அப்படி ஒரு திரைமறைவு கூட்டணி குறித்த விவரம் தான் இப்போதைய ஹய்லைட் விவகாரமாகி உள்ளது.
பூந்தமல்லி நகராட்சி 3வது வார்டுக்கு போட்டியிட திமுகவில் பலர் முயற்சித்தாலும் அதில் இருவருக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறதாம். காரணம் ஒருவருக்கு அமைச்சரும், மாவட்ட செயலாளருமான நாசரின் ஆதரவும், இன்னொருவருக்கு தொகுதி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமியின் ஆதரவும் இருப்பதால் யாருக்கு சீட் கிடைக்கும் என்பதில் இமாலய குழப்பம் நீடிக்கிறது.
ஆனா.. அமைச்சரின் ஆதரவு பெற்ற ஸ்ரீதரன் தனது மகளை முன்னாள் அதிமுக அமைச்சர் பெஞ்சமின் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து சம்மந்தி ஆகியிருக்கிறார்.
ஏற்கனவே திருவள்ளூர் தொகுதி எம்பி தேர்தலில் ஸ்ரீதரின் மனைவி காயத்திரி திமுக வேட்பாளராக போட்டியிட்டு தோற்றுப்போனார். இதற்கு காரணம் தொகுதியில் கட்சியினருக்கு விசுவாசமாக இல்லாமல் எதிர்க்கட்சியான அதிமுகவுடன் ரகசிய கூட்டணி வைத்ததால் அந்த எம் பி தேர்தலில் திமுக போட்டியிட்ட இந்த ஒரு தொகுதியை தவிர அனைத்திலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தல் முடிந்த சில மாதங்களில் அதிமுக அமைச்சருக்கு சம்மந்தி ஆனார் காயத்திரி ஸ்ரீதரன்.
சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்பு அதிமுகவுக்கு தாவும் நிலையில் காய்த்திரியும், ஸ்ரீதரனும் இருந்ததாக செய்திகள் வந்தபோதும், தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக அமைந்ததால் அதிமுகவுக்கு தாவும் திட்டத்தை இவர்கள் கைவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனாலும், நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்த்லில் எப்படியும் கணவருக்கு சீட் வாங்கிக் கொடுக்க ஒருபக்கம் சம்மந்தியும், அதிமுக முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் மூலமாக திமுக அமைச்சர் நாசரிடம் பேசி முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது அங்கிருந்து வரும் தகவல்கள்.
அது சரி… அதிமுக முன்னாள் அமைச்சர் சொன்னால் திமுக அமைச்சர் கேட்பாரா என்ற சந்தேக கேள்வி எழும்பத்தான் செய்கிறது. அதே நேரம் ஏற்கனவே அந்த வார்டில் கவுன்சிலராக இருந்த அழகிரிக்கு தொகுதி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமியின் ஆதரவு இருப்பதால் இந்தமுறையும் இவருக்கே வாய்ப்பு என்று உறுதியாக சொல்லும் உ.பி.,க்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!
– நமது நிருபர்