ரயில்களில் தினசரி நூறு டன் “ரேஷன் அரிசி” கடத்தல் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
தமிழகத்தில் தொடரும் குற்றங்களை குறைப்பதற்காக காவல்துறையில் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது வாடிக்கையான ஒரு நிகழ்வுதான் என்றாலும், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள் சமீப காலங்களாக துடிப்புடன் செயல்பட்டு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்தல் தொழிலில் இருப்பவர்கள், அதிகாரிகளுக்கு பயந்து சில நாட்கள் தொழில் செய்யாமல் கூட இருந்து வந்தனர்.
ஆனால் தற்போது மீண்டும் ரேஷன் அரிசி கடத்தல், இரயில்கள் மூலம் முன்பு இருந்ததைவிட பலமடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக வடசென்னை பகுதிகளில் சென்ட்ரல் ரயில் நிலையம், பேசின் பிரிட்ஜ், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, திருவெற்றியூர், எண்ணூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சூலூர் பேட்டை மார்க்கமாக செல்லும் ரயில்களில், அதிகாலை முதல் இரவு வரை ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
அதுவும் பெண்கள் பயணிக்கும் ரயில் பெட்டிகளில், கொருக்குப்பேட்டை முதல் கத்தி வாக்கம் வரை மட்டுமே, சுமார் பத்து டன் ரேஷன் அரிசியை ஒரு கும்பல் கடத்தி வருகிறது. இதேபோல் தினசரி சுமார் நூறு டன் ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதுசம்பந்தமாக ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தகவல் கொடுத்தவர்களின் விபரங்களை ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுக்கு தெரியப்படுத்தி, அதிகாரிகள் சுயலாபம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.
ரயில்கள் மூலமாக தினசரி ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவது தெரிந்தும், சுயலாபத்துக்காக நடவடிக்கை எடுக்காமல் கடத்தல் கும்பலுக்கு துணைபோகும் காவல்துறை அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் ? அல்லது உயர் அதிகாரிகளுக்கும் ரேஷன் அரிசி கடத்தலில் சம்பந்தம் இருக்கிறதா ? என்கிற சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் கொருக்குப்பேட்டை, திருவெற்றியூர், கும்மிடிப்பூண்டி ஆகிய ரயில் நிலையங்களில் பணிபுரியும் ரயில்வே போலீஸார் மற்றும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், தினசரி நூறு டன் ரேஷன் அரிசி கடத்தலை தடுத்து நிறுத்தி, கடத்தலில் ஈடுபடும் கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்கப்படுமா ? காத்திருப்போம்….