தமிழக அரசு திறமையான வக்கீல்களை வைத்து வெற்றி பெற வேண்டும் : கி.வீரமணி
தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து மீண்டும் வழக்குப் போடப்படுவதன் நோக்கம் என்ன என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டுக்கு உள்ள தனிச் சிறப்புகளில் முதன்மையானது, இது பெரியாரின் சமூகநீதி பூமி என்பதாகும். இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கே வழிகாட்டும் வகையில், 80 விழுக்காட்டுக்கு மேல் மக்கள்தொகையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களான குரலற்ற மக்களின் உரிமைக் குரலாக ஒலித்து, திராவிடர் இயக்கங்களின் தொடர் பிரச்சாரங்களாலும், போராட்டங்களாலும், ஆட்சிகளின் செயல் திறத்தாலும், தாழ்த்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கும், சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களில் மிகவும் அடியில் வைக்கப்பட்டு வதையும் அருந்ததியர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு தரும் சட்டங்களை, ஆணைகளை நிறைவேற்றி அம்மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் பயனடையச் செய்து சமூக மாற்றத்தினை ஏற்படுத்திடும் மாநிலமும் தமிழ்நாடுதான்.
இந்த இட ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 69 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது, அதிக எண்ணிக்கையே அல்ல; அவர்களது மொத்த மக்கள்தொகையைக் கணக்கிடும்போது இது குறைவுதான். 100-க்கு 3 பேர்களாகவும், தென்னிந்தியாவில் நால் வருண அமைப்பில் இடையில் உள்ள இரண்டு அமைப்புகளான சத்திரியர், வைசியர் என்ற பிரிவே இல்லை, சுமார் 10-&15 சதவிகிதம்தான் உண்டு.
திராவிடர் கழகம் போராடிப் பெற்ற அரிய பொக்கிஷமான இட ஒதுக்கீடு, அனைவருக்கும் கடந்த 70 ஆண்டுகளாக அதன் பலன் கிடைத்தே வருகிறது. 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்கும் 76 ஆம் அரசியல் சட்டத் திருத்தம், 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் அமைந்துள்ள சட்ட அங்கீகாரம் பெற்றது.
அதை செல்லுபடியற்றதாக்கிட பிராமணர்களான மற்ற முன்னேறிய சாதியினராகிய பிராமண அம்புகளும் உச்ச நீதிமன்றத்திற்கு சதா படையெடுப்பது, மூக்குடைபடுவது தொடர்கிறது. ஏற்கெனவே உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் கபாடியா தலைமையில் இந்த இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. என்றாலும், சில சட்டக் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி சமூகநீதிக்கு எதிரான மனப்பான்மை கொண்ட நீதித் தீர்ப்புகள் கிட்டாதா என்ற நப்பாசையில் பலமுறை தோற்றும் மீண்டும் இப்படி 69 சதவிகிதத்திற்கு எதிராக ஒரு காகிதப் புலிவேட்டையை தவறான சட்ட அணுகுமுறையுடன் சென்று இதனை ஒழிக்கத் தீவிர முயற்சிகளை இன்றும் தொடர்கின்றன.
69 சதவிகித இட ஒதுக்கீட்டின் மாதிரியை இன்று பாஜக ஆளும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களும், மகாராஷ்டிரமும், தெலங்கானாவும் கூட பின்பற்றி இட ஒதுக்கீட்டினை உயர்த்திட தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடுப் பாதுகாப்புச் சட்டத்தினை எடுத்துக்காட்டுகிறார்கள். இதுதான் உயர்சாதியினரான சமூகநீதிக்கு விரோதிகளான ஏகபோகமாக தாங்கள் அனுபவித்தவைகள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில், மீண்டும் மீண்டும் சட்ட விரோத முயற்சிகளில் இந்த சக்திகள் ஈடுபட்டு வருகின்றன.
அனைத்து சமூகநீதியாளர்களும் ஓர் அணியில் திரண்டு நின்று இம்முயற்சிகளைத் தோற்கடித்தாகவேண்டும். சட்டப்படி உச்ச நீதிமன்றம் இந்த 69 சதவிகித இட ஒதுக்கீட்டினை எதிர்க்கும் வழக்கை அனுமதித்திருக்கவே கூடாது. எடுத்த எடுப்பிலேயே தள்ளியிருக்கவேண்டும், ஏன்?
- சட்டத்தில் முன்தீர்ப்புத் தடை என்ற ஒரு அம்சம் உண்டு; போட்ட வழக்கினையே அது விசாரணையில் தள்ளுபடி செய்துவிட்ட பிறகு, மீண்டும் போட்டு நீதிமன்றங்களின் மதிப்புமிகு நேரத்தை வீணடிக்கக் கூடாது. சட்டப்படி அது தவறு; செல்லாத ஒன்றாகும்.
- 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் உள்ள சட்டம் இந்த சட்டம். இந்திய அரசியல் சட்டத்தின் 9 ஆவது அட்டவணையில் 257 ஏ – தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீடு சட்டம் 1993 ஆனது தமிழ்நாடு சட்டம் 45, 1994 என்ற பாதுகாப்புடன் 76 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்திற்கு நியாயமாக இதை விசாரிக்கவே உச்ச நீதிமன்றம் உள்பட எந்த நீதிமன்றமும் எடுத்துக் கொள்ளக்கூடாது.
அதையும்மீறி, எடுத்துக்கொண்ட சில வழக்குகளில் உச்சநீதிமன்றமே, முடிவு செய்துவிட்ட ஒரு விஷயத்தை மீண்டும் கிளப்புவதும் முடியாது, கூடாது என்று கூறிய நிலையில், திரும்பத் திரும்ப ஏன் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு? ஆதிக்கவாதிகளின் சட்ட அட்டகாசத்தை புரிந்துகொள்ளுங்கள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறபடி, தமிழக அரசு இதில் மிகவும் கவனத்துடன் தக்க மூத்த, சமூகநீதியில் நம்பிக்கையுள்ள, மூத்த தனி வழக்குரைஞர்களை வைத்து வாதாடி, 69 சதவிகித சட்டத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தினைத் தடுத்திட உடனடியாக அவசரமாக முன்வரவேண்டும். அலட்சியமாக இருக்கக் கூடாது. தேவைப்பட்டால் நாங்களும் இணைந்துகொள்ளத் தயார்.
நீட் தேர்வு மசோதாவை நிறைவேற்றியும், அதனைக் கோட்டை விட்டதுபோல் விட்டுவிடக் கூடாது என்று அவர் சுட்டியுள்ளது, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் தனது கடமையைச் செவ்வனவே செய்துள்ளார் என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.
தமிழ்நாட்டில் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான குழுவை உடனே தமிழக அரசு அமைத்து, ஆதாரப்பூர்வமாக புள்ளி விவரத்துடன் அதைத் தாக்கல் செய்து, நிரந்தரமாகவே இதுபோன்ற விஷமங்கள் தலைதூக்காத வண்ணம் கிள்ளி எறியலாம். இது கோடானுகோடி ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் உயிர்ப் பிரச்சினை. இதில் முன்னுரிமையும், முனைப்பும் தமிழக அரசால் காட்டப்படவேண்டும்.
மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, சமூகநீதியில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று அண்மைக்காலத்தில் மார்தட்டுகிறது; இது உண்மையானால், அவர்களும் உச்ச நீதிமன்றத்தில் தகுந்தபடி 69 சதவிகிதத்தைக் காப்பாற்றிட வாதாடிட முன்வரவேண்டும். அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவுகளிலும் இட ஒதுக்கீட்டுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கவே இல்லை என்பது முழுதாய்ந்த உண்மை. எனவே, உடனே நாம் இதனைத் தடுத்து நிறுத்திடவேண்டும்.” என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.