14 வயது வரை குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு தேவையா? : கொந்தளிக்கும் கல்வியாளர்கள்
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்தக் கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மாணவர்களின் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக, தமது இந்த முடிவுக்கு அரசு நியாயம் கற்பிக்கலாம்.
ஆனால், ஏற்கனவே பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் என இருந்த பொதுத் தேர்வை, பிளஸ் 1 மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இது போதாதென்று தற்போது 5 மற்றும் 8 வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது அவசியமா?
14 வயது வரையிலான குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு தேவைதானா? அரசின் இந்த முடிவால் அந்த பிஞ்சுகளின் மனதில் ஏற்படபோகும் சமூக, உளவியல்ரீதியான நெருக்கடிகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டாமா?
ஏற்கனவே காசாக்கப்பட்டுவிட்ட கல்வியை இந்த பொதுத் தேர்வு அறிவிப்பு மேலும் வணிகமாக்கிவிடாதா? பள்ளி இடைநிற்றலை அரசின் இந்த அறிவிப்பு அதிகரித்துவிடாதா? என அடுக்கடுக்கான கேள்விகளை கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர்.
இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கேஜேந்திரபாபு கூறும்போது, “ ஒரு குழந்தை பிறந்தது முதலே தாய், தந்தையின் வாயிலாக அதன் கற்றல் வீட்டிலேயே ஆரம்பித்துவிடுகிறது. அதன் அடுத்தகட்டமாக பள்ளியில் குழந்தைகளுக்கு கற்றல் பயிற்சி தொடர்கிறது.
பள்ளிகளில் கற்பித்தல் முறை என்பது சரியாக படிக்க முடியாத, படிப்பு வராத குழந்தைகளிடம் உள்ள அதற்கான குறைகளை கண்டறிந்து அவற்றை களைந்து அவர்களையும் படிப்பில் வல்லவர்களாக மாற்றும் விதத்தில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 5 மற்றும் 8 – ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம், தேர்வு முறையில் மீண்டும் நாம் பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அதாவது ஒரு காலத்தில், ஒன்றாம் வகுப்பு , 5 வகுப்புகளில் கூட குழந்தைகளை ஃபெயில் என அறிவிக்கும் நடைமுறை இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முறை, இஎஸ்எஸ்எல்சி என்ற பெயரில் முன்பு இருந்தது தான். அதனால், எல்லா பிள்ளைகளும் தேர்ச்சி பெற்றுவிட்டார்களா?
இதனால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2-வில் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் போதும், அத்தேர்வுகளில் தோல்வியடைந்துவிட்டால், அதனால் இச்சமூகம் மற்றும் குடும்பத்தினரின் கேலி, கிண்டல் பேச்சுக்களால் ஒரு மாணவன் சந்திக்கும் உளவியல் ரீதியான நெருக்கடியை தற்போது 5, 8 -ஆம் வகுப்பு மாணவர்களும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் பள்ளி இடைநின்றல் விகிதம் மீண்டும் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கும், நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கும் தற்போது ஊர்கள் தோறும் கோச்சிங் சென்டர்கள் உள்ளனவோ, அதைப்போன்று இனி 5 மற்றும் 8 வகுப்புகளுக்கும் சிறப்பு கோச்சிங் சென்டர்கள் தொடங்கப்படும். இது கல்வியை மேலும் வணிகமயமாக்கிவிடும்.
எனவே, நம் குழந்தைகளை பொதுத் தேர்வு எனச் சொல்லி சொல்லி பயமுறுத்தாமல், முதலில் அனைத்து மாணவர்களும் சமமாக கல்வி கற்கும் சூழலை முதலில் நாம் உருவாக்க வேண்டும்.
இதற்கு ஆரம்பக் கல்வி நிலையில் மாணவர்களுக்கு அவசியம் தேவைப்படும் ஆடல், பாடல்கள் மூலம் கல்வி கற்கும் முறையை மேம்படுத்த வேண்டும்.
முக்கியமாக, அரசு, தனியார் பள்ளிகள் என்ற பாரபட்சமில்லாமல், அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு மைதானங்கள் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.. அதேபோன்று எல்லா பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுருங்க சொன்னால், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு தேவையில்லை என அழுத்தமாக கூறுகிறார் பிரின்ஸ் கேஜேந்திர பாபு.
& நமது நிருபர்