தேர்தல் புறக்கணிப்பு
அம்பாசமுத்திரம் வேலாயுத நகர் அபிவிருத்தி சங்கம் சார்பாக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, “திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, அம்பாசமுத்திரம் நகராட்சி முன் 21வது வார்டு, வேலாயுத நகர் என்ற குடியிருப்பு பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் குடியிருந்து வருகிறது. மேற்கண்ட குடியிருப்பு பகுதிக்கு சற்று மேல்புறம் புலஎண்.112ல் சுமார் 5 ஏக்கர் நிலத்தில், ஒட்டுமொத்த நகராட்சி குப்பை கழிவுகளை கொட்டுவதற்காக கலவை உரக்கிடங்கு, அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூபாய் 2.86 கோடி ஒதுக்கப்பட்டு, கடந்த 2016ம் ஆண்டு 3வது மாதம் பணிகள் துவங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பகுதி பொதுமக்களின் போராட்டம் காரணமாக அப்போதைய அரசும், நகராட்சி நிர்வாகமும், வேலாயுதநகர் பகுதியில் மட்டுமே கொட்டப்பட்டு வந்த குப்பைக்கழிவுகளை, நகராட்சி பகுதியின் நான்கு இடங்களில் ஷெட் அமைத்து கொட்டி, பிரித்து சுத்திகரிக்கும் பணி நடக்க உள்ளதாகவும், இனி வேலாயுத நகர் பகுதியில் குப்பைக்கழிவு கொட்டப்படாது என்றும் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் Faecal Treatment Plant (FSTP) என்ற பெயரில் நகராட்சி பகுதியிலுள்ள அனைத்து மல கழிவுகளையும் நம் பகுதியில் உள்ள இடத்தில் கொட்டி, சுத்திகரிக்கும் நிலையம் அமைக்க இருப்பதாக கூறப்பட்டு பணிகளும் நடந்து வருகிறது.
இந்நிலையில் பகுதி மக்களின் ஆட்சேபனையையும் மீறி சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கத்தின் தனிப்பட்ட வாய்மொழி உத்தரவின்படி, நகராட்சி பணியாளர்கள் குப்பைக் கழிவுகளை தினசரி 10 வண்டிகளுக்கு மேல் குடியிருப்பு பகுதியில் ஆங்காங்கே கொட்டி வருகின்றனர். சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சிதம்பரராமலிங்கத்தை இடைக்கால பணி நீக்கம் செய்ய வேண்டும். குப்பையை கொட்டுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இவை அனைத்தும் உடனடியாக செய்யப்படாவிட்டால் வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலை மக்கள் புறக்கணிக்க நேரிடும். எனவே தமிழக முதல்வர் உடனடியாக இம்மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.