பொங்கலின் பொழுது கால்நடைகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூச வேண்டாம்…
பொங்கல் பண்டிகையின் பொழுது சுற்றுச்சூழல் காக்க வேண்டுகிறோம். பழையன கழிதல் புதியன புகுதல் என்கிற பெயரில் துணிமணி, குப்பை போன்றவைகளோடு டயர், பிளாஸ்டிக் பேப்பர், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள் போன்றவற்றையும் போட்டு எரிக்க வேண்டாம். அப்படி எரிக்கும் பொழுது காற்றிலே நஞ்சு கலந்து மூச்சு விட முடியாத நிலை உருவாவதுடன் பூமியும் வெப்பமாகிறது. சைக்கிள், கார், பைக் டயர்களையும், டியூப்களையும் வேண்டாத பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு பிளாஸ்டிக் சாலை அமைக்கப் பயன்படுத்தலாம்.
அதேபோல மாட்டுப் பொங்கலின் பொழுது கால்நடைகளைக் குளிப்பாட்டி கொம்புகளுக்கு பெயின்டினால் வர்ணம் பூசி பொங்கல் வைத்து பழம் தேங்காயுடன் படையல் வைத்து கால்நடைகளுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து நைவேத்தியப் பொருட்களான பொங்கல் பழம் தேங்காய் ஊட்டி விடுவார்கள். அவைகளை பெயரளவிற்கு மட்டுமே கொஞ்சம் ஊட்டி விட வேண்டும். அளவிற்கதிகமாக ஊட்டி விடும் பொழுது செரிமானம் ஆகாமல் அசை போட முடியாது தவிக்கும். அதுமட்டுமல்ல செரிமானம் ஆகாத காரணத்தால் வயிற்றில் நச்சுத்தன்மை பரவி சில சமயங்களில் இறந்து விடவும் வாய்ப்பிருக்கிறது.
அதேபோல கால்நடைகளின் கொம்புகளை கூரிய ஆயுதம் கொண்டு சீவி விட்டு பெயின்ட்டுகளை பயன்படுத்தி அழகுக்காக வர்ணம் பூசுகின்றனர். பாரம்பரியமாக கொம்புகளுக்கு விளக்கெண்ணை பூசி வந்தார்கள். ஒரு சிலர் கொம்புகளின் ஒரு பக்கம் காவிக்கல் மண், மறு கொம்பிற்கு சுண்ணாம்பும் பூசி வந்தார்கள். நாகரீகம் என்கிற பெயரில் பார்க்க அழகாக தோன்றுகிற காரணத்தால் பெயின்டால் கொம்புகளுக்கு வர்ணம் பூசி வருகின்றனர். கொம்புகளுக்கு பெயின்ட் பூசி விடுகின்ற காரணத்தால் சூரிய சக்தியினை இழந்து விடுகிறது. சூரிய வெளிச்சம் கொம்புகளில் படும் பொழுது அதன் மூலம் சக்தியினைப் பெறுவதுடன் உடலுக்குக் கிடைக்க வேண்டிய விட்டமின் “டி” கிடைக்கப் பெறுகிறது. விட்டமின் “டி” தான் கால்நடைகள் சாப்பிடும் தவிடு, பருத்திக்கொட்டை, பசுந்தீவனம், உலர் தீவனத்தில் உள்ள கால்சியம் சத்துக்களை கால்சியம் பாஸ்பேட்டாக மாற்றி சக்தி தருகிறது. பெயின்ட் அடிக்கும் பொழுது விட்டமின் “டி” கிடைக்காமல் போகிறது.
எப்படி ஆன்டெனா ஒலி ஒளி அலைகளை உள்வாங்கி நமக்குப் படமாகவோ, பேச்சாகவோ மாற்றித் தருகிறதோ அதேபோல வலிமையுடைய கொம்புகள் ஆன்டெனா போல செயல்பட்டு சக்தியை உள்வாங்கி உடலுக்கு அளிக்கிறது. ஆகவே சுண்ணாம்பு, காவிக்கல் மட்டுமே பூச வேண்டும்.
கொம்புகளில் உள்ள வெடிப்புகள், மற்றும் கூரிய ஆயுதம் கொண்டு கொம்புகளை சீவும் பொழுது ஏற்படும் காயங்கள் மூலமாக, பெயின்ட் உள்ளே சென்று செப்டிக் ஆகி சீழ் பிடிக்கவும் ஏதுவாகிறது. சில சமயம் கொம்புகளையே அகற்ற வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். ஆகவே கொம்புகளுக்கு பெயின்ட் மூலம் வர்ணம் பூச வேண்டாமென ஜெயம் பிராணி நல அறக்கட்டளை கேட்டுக் கொள்கிறது.
–டாக்டர்.கே.வி.கோவிந்தராஜ் Ph.D
ஜெயம் பிராணி நல அறக்கட்டளை