பல்லடம் எகிப்து நாட்டின் கட்டிட கலை… : அனுமதி அளித்தது நகராட்சியா? ஊராட்சியா? : நீடிக்கும் குழப்பம்.. மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை
பல்லடத்தில் கட்டிட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்து கடந்த இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் இது வரை எந்த ஒரு நடவடிக்கையோ அல்லது ஆய்வோ மேற்கொண்டதாக தெரியவில்லை.
மேலும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அனைவரின் கண்ணில் படும் படியாக 50 ஆயிரம் சதுரடியில் எகிப்து நாட்டின் கட்டிட கலையை நினைவூட்டும் விதமாக கட்டப்பட்டுள்ள தனியார் கட்டுமான பொருட்கள் விற்பனை நிறுவனம் விதிமுறைகளை மீறியுள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள முதலில் கட்டிடம் அமைந்துள்ள இடம் நகராட்சியா அல்லது ஊராட்சியா என்பது குறித்து குழப்பம் நீடிப்பதாக தெரிகிறது. மேலும் கட்டிட வரன்முறைபடுத்தப் பட்டிருக்கிறதா? என்பது குறித்து புதியதாக பொறுப்பேற்றிருக்கும் நகராட்சி ஆணையர் விநாயகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் ஆறுமத்தாம்பாளையத்தில் கொசுவர்த்தி நிறுவனம் பி.ஏ.பி. நீர்பாசன வாய்க்கால் பாயும் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டது குறித்தும் இது வரை வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
எனவே கட்டிட விதிமுறை மீறல் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.