வங்கி கணக்கிலிருந்து பறிபோன பணம்.. : ‘சிம் ஸ்வாப்’ மோசடி ..!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல கண் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், “தங்களது மருத்துவமனையின் வங்கிக் கணக்கோடு இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணின் சேவை துண்டிக்கப்பட்டு அதே எண்ணில் புதிய சிம்கார்டை பெற்று தங்களது மருத்துவமனை வங்கி கணக்கில் இருந்து ரூ.24 லட்சம் திருடப்பட்டுள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மருத்துவமனை நிர்வாகம் வங்கி பரிவர்த்தனைக்காக 5 சிம்கார்டுகளை வாங்கி இருப்பதும், அந்த சிம்கார்டுகள் தொலைந்துவிட்டால் உடனடியாக பயன்படுத்தி கொள்ள 5 டம்மி சிம்கார்டுகளும் வழங்கி இருப்பது தெரியவந்தது. குறிப்பாக ஒரிஜினல் சிம்கார்டுகள் காணாமல் போகும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனத்திற்கு மருத்துவமனை அதிகாரப்பூர்வ இமெயிலை பயன்படுத்தி அதன் மூலம் மெயில் அனுப்பி டம்மி சிம்கார்டுகளை ஆக்டிவேட் செய்து கொள்ளூம் வகையில் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் அவ்வாறு பயன்படுத்தி வந்த ஒரு செல்போன் எண்ணை மருத்துவமனை ஊழியர்களுக்கு சம்பளம் போடும் வங்கிக் கணக்கோடு இணைத்து வைத்திருந்துள்ளனர், அந்த வங்கி கணக்கில் இருந்து தான் சுமார் 25 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
மேலும் நடத்திய விசாரணையில் மருத்துவமனை பெயரில் போலியான அடையாள அட்டைகளை சமர்ப்பித்து இ-சிம் கார்டினை பெற்று உத்தரப்பிரதேசத்தில் ஆக்டிவேட் செய்தது சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்தனர். மோசடி செய்யப்பட்ட ரூபாய் 24 லட்சம் மேற்கு வங்காளத்தில் உள்ள 16 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் வினோத் குமார் தலைமையிலான தனிப்படை மோசடி கும்பலை பிடிக்க மேற்கு வங்காளத்திற்கு சென்றனர்.
அப்போது 16 வங்கி கணக்கில் இருந்து பணம் எங்கெல்லாம் எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்த போது கொல்கத்தாவில் ஒரு ஏடிஎம்மில் மோசடி கும்பலைச் சேர்ந்த 2 பேர் பணத்தை எடுத்து செல்லும் சிசிடிவி காட்சியை கைப்பற்றினர். இதையடுத்து சைபர் கிரைம் ஆய்வாளர் வினோத் குமார் தலைமையிலான போலீசார் கொல்கத்தா போலீசார் உதவியோடு கொல்கத்தாவில் உள்ள Behala என்ற ஊர் முழுவதும் தேடினர். தெரு தெருவாக சிசிடிவியில் பதிவான 2 பேரின் படத்தை வைத்து பொதுமக்களிடம் காட்டி எங்கு இருக்கிறார்கள் என்பதனை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் 16 வங்கி கணக்குகளில் உள்ள முகவரியை எடுத்தும் தேடினர். ஆனால் அவை போலி முகவரிகள் என்பதும் தெரிந்தது.
சிசிடிவி காட்சியை வைத்து தேடும் போது மோசடி கும்பலைச் சேர்ந்த பீகாரைச் சேர்ந்த ராகேஷ் குமார் சிங் என்பவர் குறித்து தகவல் தெரிந்து அவர் தங்கி இருந்த வீட்டிற்கு சைபர் கிரைம் போலீசார் சென்றனர். அப்போது 105 சிம் கார்டுகளை எடுத்து வைத்து கொண்டிருக்கும் போது சைபர் கிரைம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். கைதான ராகேஷ் குமார் சிங்கிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். கூட்டாளிகள் எங்கே என கேள்விகளை கேட்டு கொண்டிருந்த போது அப்போது ஒருவர் அதே வீட்டிற்கு அதிகாரி போல வந்துள்ளார். போலீசார் அவரையும் பிடித்த போது அவர் தான் மோசடி கும்பலைச் சேர்ந்த ரோகோன் என்பது தெரிந்தது. கைதான ராகேஷ் குமார் சிங்கும், ரோகோனும் தான் சிசிடிவி இருப்பதை சைபர் கிரைம் போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து மற்ற கூட்டாளிகளான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சயந்தன் முகர்ஜி, ராகுல் ராய் ஆகியோரை பங்காளதேஷ் எல்லைப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கைதான 4 பேரையும் சைபர் கிரைம் போலீசார் டிரான்சிட் வாரண்டு பெற்று சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் பணம் மாற்றப்பட்ட அனைத்து வங்கிக் கணக்குகளும் போலி முகவரிகள் மற்றும் போலி ஆதார் கார்டு பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வங்கி கணக்குகள் என தெரியவந்ததால் குற்றவாளிகளை பிடிப்பதில் சவாலாக இருந்ததாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்த நான்கு பேருக்கும் தலைவனாக செயல்பட்ட நபர் சதீஷ். உத்தரப் பிரதேசத்தில் இருந்து செயல்படுவது தெரிய வந்தது. “Sim Swap” எனப்படும் முறையை பயன்படுத்தி பணத்தைக் கொள்ளையடிப்பது தெரியவந்துள்ளது
சிம்கார்டு உடைந்து இருந்தாலும், பழைய சிம் காடாக மாறினாலும் நெட்வொர்க் பிரச்சனை ஏற்பட்டாலும், அருகிலுள்ள சம்மந்தப்பட்ட சிம்கார்டு நிறுவனத்தில் டம்மி சிம் கார்டு மூலம் பழைய செல்போன் எண்ணை மக்கள் திரும்ப பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில் நூற்றுக்கணக்கான சிம் கார்டுகளை வாங்கும் நிறுவனம், மற்றும் நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள் போன்ற முக்கியமான நபர்களுக்கு சிம்கார்டு உடைந்தாலோ அல்லது பழையதானாலோ டம்மி சிம்கார்டு அருகிலுள்ள ஷோரூமில் பெற்றுக் கொண்டு, அதை அதிகாரப்பூர்வ இமெயில் மூலமாக சம்மந்தப்பட்ட சிம் கார்டு நெட்வொர்க் நிறுவனத்திற்கு மெயில் அனுப்பி ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும். இது குறிப்பிட்ட சில முக்கிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே நெட்வொர்க் நிறுவனங்கள் மெயில் மூலமாக இ-சிம் ஆக்டிவேசனை இந்த வசதியை வழங்கி வருகிறது.
இதை தெரிந்து வைத்துக் கொண்டிருந்த மோசடி கும்பல் வங்கியில் இருந்தோ, தொடர்புடைய நெட்வொர்க் நிறுவனத்திலிருந்தோ தகவல்களைப் பெற்று மோசடி செய்வதை சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த அடிப்படையில் இந்த கண் மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ இ-மெயிலை ஹேக் செய்து கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அதன் பிறகு மருத்துவமனை தனது வங்கிக் கணக்கை இணைத்திருக்கும் சிம்கார்டு தொலைந்து விட்டதாக கூறி, டம்மி சிம் கார்டு ஒன்றை வாங்கிக்கொண்டு, அதனை ஆக்டிவேட் செய்வதற்கு ஹேக் செய்த இ-மெயில் மூலமாக மருத்துவமனை நிர்வாகம் மெயில் அனுப்புவது போல் மோசடி செய்து இ-சிம் ஆக்டிவேஷன் முறையில் சிம் கார்டை ஆக்டிவேட் செய்கின்றனர் என்பது சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்த மோசடியில் ஈடுபடுவதால், வங்கி விடுமுறை நாள் என்பதால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்துக்கு எந்தவித குறுஞ்செய்தியும் வராது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு இந்த மோசடியை கும்பல் அரங்கேற்றியுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். அவ்வாறாக மருத்துவமனை வங்கி கணக்கு தொடர்புடைய சிம் கார்டு ஆக்டிவேட் செய்து அதன்மூலம், மருத்துவமனை வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றி கொள்ளையடித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் தெரிவித்தது.
தமிழகத்தில் முதன்முறையாக இந்த நூதன முறையில் மோசடி நடந்திருப்பதை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நூதன மோசடி கும்பலை கைது செய்த சைபர் கிரைம் போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டி வெகுமதி வழங்கினார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 14 மொபைல் போன்கள், 105 சிம் கார்டுகள், 154 டெபிட் கார்டுகள், 22 போலி பான் கார்டுகள், 128 ஆதார் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த மோசடியை வெளிக் கொண்டு வந்ததன் மூலம் இந்தியாவில் இந்த நூதன முறையில் பாதிக்கப்பட்ட பலர் புகார் அளிக்க வரலாம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேற்கு வங்காளத்தில் இருந்து கைது செய்யப்பட்ட ரோகன், ராகேஷ்குமார் சிங், சயந்தன் முகர்ஜி, ராகுல் ராய் ஆகிய 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த நூதன முறையில் எத்தனை பேரை மோசடி செய்து உள்ளார்கள் என்பது குறித்து அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆதார் கார்டுகள் சிம் கார்டுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட விசாரணையை தீவிரப்படுத்த உள்ளது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ்.
– நமது நிருபர்