தமிழகம்

கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு… : சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவு

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை சிபிஐ விசாரித்தபோதும் இதுவரை குற்றவாளியை கண்டறிய முடியாத நிலையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில், “சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையை கண்காணிப்பார். இவர்களின் கண்காணிப்பின் கீழ் தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், அரியலூர் டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐயை சேர்ந்த ரவி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு உத்தரவிடப்படுகிறது” என உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் வருடம் மார்ச் 29 ல் நடைபயிற்சி சென்ற, தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி – கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி ராமஜெயம் மனைவி லதா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். கொலையாளிகள் பிடிபடாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்றம், விசாரணை அறிக்கையை 3 மாதங்களிதில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. சிபிஐ விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிசந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதுசம்பந்தமாக டிஜிபிக்கு அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி வி. பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதி, விசாரணை அதிகாரி சரியான கோணத்தில் விசாரித்து வருவதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் என் ஆர். இளங்கோ, சிபிஐ விசாரணை அதிகாரியோடு சேர்த்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்ற நீதிபதி, சிபிஐக்கு உதவ தமிழக காவல்துறை அதிகாரிகள் பட்டியல் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, தமிழக காவல்துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும், விசாரணைக்கு உதவ காவல்துறை அதிகாரிகள் பட்டியலை வழங்குகிறோம் என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button