தண்ணி காட்டிய ராஜேந்திரபாலாஜி… : தட்டி தூக்கிய போலீசார்..!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த பத்தாண்டுகளாக ஜெயலலிதா அமைச்சரவையிலும், பழனிச்சாமி அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தவர். தற்போது வரை விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவின் மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். அவர் மீது வேலை வாங்கித் தருவதாக மோசடிப் புகார்கள் குவிந்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனால் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் தலைமறைவாகி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இராஜேந்திரபாலாஜி பத்தாண்டுகளாக அமைச்சராக இருந்தவர் ஒரு சாதாரண மோசடி வழக்குக்குப் பயந்து தலைமறைவாகலாமா? இவருக்கு யார் யார் பின்புலமாக இருக்கிறார்கள். தமிழக காவல்துறை இவரை கைது செய்ய விடாமல் தடுக்கும் சக்தி எது என்கிற கோணத்தில் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. பொதுவாகவே ராஜேந்திர பாலாஜி மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பேசக்கூடிய நபராகத்தான் தமிழக மக்களால் அறியப்பட்டார். தனது மனம்போன போக்கில் வாய்க்கு வந்ததை பேசும் வல்லமை படைத்தவராக தான் பேசி வந்தார். ஒருமுறை கமல்ஹாசன் பற்றி பேசும்போது அவரது நாக்கை அறுப்பேன் என்றார். விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூரை பன்னியை சுடும் ரப்பர் புல்லட்டால் சுடுவேன் என்று பேசினார்.
இஸ்லாமியர்கள் அதிமுகவுக்கு ஓட்டுப்போட வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் பாகிஸ்தான் செல்லலாம், கொரோனா மக்களுக்கு ஆண்டவன் கொடுத்த தண்டனை, இந்து தீவிரவாதம் தவிர்க்க முடியாதது என்று பேசினார். இதெல்லாம் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது அவர் பேசிய பேச்சுக்கள். இவரையெல்லாம் அமைச்சரவையில் பழனிச்சாமி வைத்திருந்தார் என்றால் அந்த அரசாங்கம் எப்படிப்பட்ட அரசாங்கமாக இருந்திருக்கும் என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே.
இதேவேளையில் ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் பொதுஅமைதிக்கு எதிராக மதவெறியை தூண்டும் விதத்தில் பேசிய ராஜேந்திரபாலாஜியை அமைச்சர் பதவியையும், கட்சிப் பதவியையும் பறித்து கைது செய்து சிறையில் அடைத்திருப்பார். இதற்கும் மேல் ஜெயலலிதா இறந்தபோது மம்மி இறந்துவிட்டார். இனி மோடி தான் எங்களுக்கு டாடி என்று பேசினார். இந்த பேச்சு அப்போது சர்ச்சையானது.
கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக தமிழக காவல் துறையின் கண்களில் மண்ணைத் தூவி தலைமறைவு வாழ்க்கை வாழும் ராஜேந்திர பாலாஜி ஒன்று சாதனை மனிதர் அல்ல. பத்தாண்டுகள் மந்திரியாக இருந்தவர். மோடி எங்கள் டாடி என்றும் இந்து தீவிரவாதம் தவிர்க்க முடியாது என்றும் பேசிய ராஜேந்திர பாலாஜியை எட்டு தனிப்படைகள் அமைத்தும் பிடிக்க முடியவில்லை என்றால் அவரை காப்பாற்றுவது பாஜகவின் ஆளுமை தானே என்று மக்கள் சந்தேகிக்கிறார்கள். ஏனென்றால் அதிமுகவில் இருந்து கொண்டு இந்துத்துவா போர்வையில் வலம் வந்தவர் தான் இந்த ராஜேந்திர பாலாஜி. அதனால் தான் மோடியின் ஆதரவு அரசியல் அமைப்புகள் அரவணைப்பு இல்லாமல் ராஜேந்திர பாலாஜி தப்பித்திருக்க முடியாது என்கிறார்கள்.
தமிழகம் அடிப்படையில் மதச்சார்பற்ற மாநிலம். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே மதச்சார்பற்ற கட்சிகள். கடந்த இரண்டு பாராளுமன்ற தேர்தல்களிலும் மோடியின் அலையை தடுத்து நிறுத்திய மாநிலம் தமிழகம் மட்டுமே. 2014ல் மோடியா லேடியாக என்று பேசி ஜெயலலிதா மதவாத சக்தியை தடுத்தார். 2019ல் மதச்சார்பின்மை அணிகளைத் திரட்டி ஸ்டாலின் தடுத்தார்.
திமுக, அதிமுக தொண்டர்கள் யாரும் இந்துத் தீவிரவாதம் பற்றி பேசமாட்டார்கள். இந்நிலையில் இந்து தீவிரவாதம் தவிர்க்க முடியாது என்று பேசிய ராஜேந்திர பாலாஜியை காப்பாற்ற நினைக்கிறது பாஜக என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள். ராஜேந்திர பாலாஜி விஷயத்தைப் பொறுத்தவரை அதிமுகவுக்குத் தான் தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார். அவருக்கு அடைக்கலம் கொடுத்த பாஜக பிரமுகர் உட்பட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமலும் ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் 8 தனிப்படை அமைத்து போலீசார் ராஜேந்திர பாலாஜியை தேடி வந்தனர்.
கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டு தேடும் பணியில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் கைது செய்யப்பட்டார்.
ராஜேந்திர பாலாஜியுடன் சேர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதில், ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் ராமகிருஷ்ணனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜேந்திர பாலாஜி கிருஷ்ணகிரியில் தலைமறைவாக இருந்ததாகவும் அவரை கர்நாடக மாநிலத்தின் ஹசன் பகுதிக்கு அழைத்து சென்றது ராமகிருஷ்ணன் தான் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு ராமகிருஷ்ணன் அடைக்கலம் வழங்கியுள்ளார். அவருடன் சேர்ந்து ராமகிருஷ்ணனின் உறவினர் நாகேஷ், விருதுநகர் மாவட்ட அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு இரவில் ஒரு இடத்தில்தான் ராஜேந்திர பாலாஜி தங்கியுள்ளார். தினமும் அவர் பயணத்திலேயே இருந்துள்ளார். மேலும் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு இரண்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உதவியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேற்கொண்டு விசாரணையின்போது இவருக்கு யார் யார் உதவினார்கள்? மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்து தெரியவரும்.