களத்தில் என்கவுன்டர் வெள்ளத்துரை : பயத்தில் ரவுடிகள்…
தமிழ்நாட்டை இதுவரை மிரட்டிய ரவுடிகள் பெயர் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அதில் அயோத்திகுப்பம் வீரமணியின் பெயர் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். கொலைகளை பொழுதுபோக்காக செய்யக்கூடிய நபர்தான் வீரமணி. கொலை செய்வதும் சிறைசெல்வதையும் வாடிக்கையாக செய்து வந்தார். வீரமணி காவல்துறைக்கு மிகப்பெரும் தலைவலியாக இருந்து வந்தார். கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப் பொருள் கடத்தல் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். 2003ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் நடத்திய பேரணியில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர் வீரமணிதான் என்று சொல்லப்பட்டது. இவர் மீது முப்பதுக்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் இருந்தது.
இந்நிலையில் ஒரு வழக்கிற்காக வீரமணியை கைது செய்ய காவல்துறை தயாரான போது அவர் தலைமறைவாகிறார். காவல்துறை வலைவீசித் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் திணறியது. அப்போதுதான் தென் மாவட்டத்திலிருந்து சென்னை வந்த உதவி ஆய்வாளர் மாறுவேடத்தில் வீரமணி இருக்கும் இடத்தை கண்டறிந்து பிடிக்க முற்படுகிறார்.
அப்போது நடந்த சண்டையில் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து வீரமணியை சுடத் தொடங்குகிறார் அந்த உதவி ஆய்வாளர். ஐந்து குண்டுகள் உடம்பில் பாய அந்த இடத்திலேயே உயிரை விடுகிறார் அயோத்தி குப்பம் வீரமணி. யாராலும் நெருங்க முடியாத வீரமணியை சுட்டு வீழ்த்தியவர்தான உதவி ஆய்வாளர் வெள்ளத்துரை.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக காவல்துறையில் தனது பணியை துவங்கிய வெள்ளத்துரை பணிமாறுதல் காரணமாக திருச்சியில் தனது பணியை தொடர்கிறார். திருச்சி லால்குடி நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக சாட்சி சொல்லிக் கொண்டிருந்தவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்கிறான் ரவுடி ஜோகிராஜன். அந்த ரவுடியை திருச்சி முதலியார் சத்திரம் மேம்பாலத்தில் என்கவுண்டர் செய்கிறார் வெள்ளத்துரை.
இதுவரை உதவிஆய்வாளர் வெள்ளத்துரையாக இருந்தவர் இதன்பிறகு என்கவுன்டர் வெள்ளத்துரையாக மாறினார். 1998ல் நடந்த இந்த சம்பவத்திற்கு பின் 2003ல் அயோத்தி குப்பம் வீரமணியையும் என்கவுன்டர் முறையில் சுட்டு வீழ்த்தினார். அதன்பிறகு தமிழ்நாடு கர்நாடகா மாநிலங்கள் நீண்டகாலமாக தேடிக்கொண்டிருந்த சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடிக்க சிறப்பு அதிரடிப்படையில் வெள்ளத்துரை பெயர் சேர்க்கப்பட்டது.
காட்டுக்குள் மறைந்திருந்த வீரப்பனை சிங்களவர் போல் வேடமிட்டு வீரப்பனோடு பழகி வீரப்பனை ஆம்புலன்ஸில் ஏற்றி வரும் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் வீரப்பன் இறந்து போகிறான். தனக்கு கொடுத்த பொறுப்பை கச்சிதமாக செய்து முடித்த வெள்ளத்துரைக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இவருக்கு இரட்டை பதவி உயர்வு வழங்கினார்.
பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவின் போது 2012 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளர் ஆல்வின் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைவழக்கில் பாரதி, சதீஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களும் என்கவுன்டரில் உயிரை விடுகிறார்கள். இவரது துப்பாக்கிக்கு என்கவுன்டர் முறையில் இறையானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்கிறது. 12 பேரை என்கவுன்டர் செய்திருக்கும் வெள்ளத்துரை ஒரு இடத்திலிருந்து பணி மாறுதலாகி இன்னொரு இடத்திற்கு வருகிறார் என்றாலே தலைப்புச் செய்தியே வெள்ளத்துரை மாற்றம் ரவுடிகள் கலக்கம் என்றுதான் இருக்கும்.
நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது. ஆனால் வெள்ளத்துரையை பொறுத்தவரைக்கும் ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக் கூடாது. ஒரு குற்றவாளியும் தப்பிக்கக்கூடாது என்பது இவரது பாலிசியாக இருக்கிறது. குற்றம் நடைபெற பொருளாதாரமா, சமூகமா என்பதை ஆய்வு செய்து ஒரு நூலையும் எழுதியிருக்கிறார்.
இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து நடைபெறுவதை தடுப்பதற்காகவும், தொழில் நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுக்கும் நபர்களை கண்காணிக்கவும் தமிழ்நாடு காவல்துறை ஒரு தனிப்படையை அமைத்துள்ளது. அந்த தனிப்படைக்கு கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தான் தலைமை தாங்குகிறார் என்று காவல்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளிவந்ததும் சென்னையைச் சுற்றியுள்ள ரவுடிகள் அச்சமடைந்துள்ளனர். எது எப்படியோ யார் உயிரையும் பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. அனைவரும் சட்டத்தின் முன் சமம். இந்நிலையில் சென்னை புறநகருக்கு வந்திருக்கும் வெள்ளத்துரை துப்பாக்கியின் துணை இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவார் என்றே நம்புவோம்.
– சூரியன்