இஸ்லாமியராக பிறப்பதே தவறா? : மனுநீதிக்குள் இழுக்கிறதா ? பா.ஜ.க!
இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, வெற்றிகரமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் இந்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுக்க கொந்தளிப்புகள் தொடர்கின்றன. அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய போராட்டக்காரர்களை அடக்கும் பொருட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாகியிருப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது.
இந்நிலையில், மக்களவையில் இம்மசோதாவுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை முன்வைத்துப் பேசிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இம்மசோதாவை மத்திய பா.ஜ.க கொண்டுவந்திருக்கும் பின்னணி குறித்து நம்மிடம் பேசும்போது, “இந்திய அரசியலமைப்பின் படி, மதத்தின் பெயரிலோ அல்லது இனத்தின் பெயரிலோ வேற்றுமை பார்க்கக்கூடாது. குறிப்பாக, அரசியல் சட்டத்தின் 14-வது விதியின்படி, ‘ஒருவரையோ அல்லது பலரையோ மதத்தின் பெயரால், யாரையும் பிரித்துப்பார்க்க முடியாது. அனைவருமே சமம்!’. ஆனால், இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்தம், இஸ்லாமியர்களை மட்டும் குறிப்பிட்டு ஒதுக்குவதென்பது இந்திய அரசியலமைப்புக்கே எதிரானது.
மதத்தின் பெயரால், பாகிஸ்தான் என்ற நாடு உருவானபோதே, ‘இந்தியாவில் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமையும் பாதுகாப்பும் வழங்கப்படும்’ என்று காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்கள், மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக நாடாக இந்தியாவை அறிவித்தனர். ஆனால், மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் இந்த சட்டத் திருத்தம் என்பது, இந்தியாவை ‘இந்து நாடு’ என்று அறிவிக்கும் சட்டமாகவே இருக்கிறது.
வரலாறு காணாத பொருளாதாரச் சரிவை நாடு சந்தித்துக்கொண்டிருக்கிறது, வேலைவாய்ப்புகள் இல்லை… இந்த அடிப்படைப் பிரச்னைகளைப் பற்றி பேசக்கூட ஆளும்கட்சி தயாராக இல்லை. ஆனால், இந்த 21-ம் நூற்றாண்டிலும்கூட ‘1947-ல் பாகிஸ்தானில் என்ன நடந்தது தெரியுமா…’ என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், பா.ஜ.க-வினர். பாகிஸ்தானில் மட்டுமா கலவரம் நடந்தது, இந்தியாவிலும்தான் அப்போது கலவரங்கள் நடந்தன. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்து&இஸ்லாமிய வெறுப்பில் மட்டுமே அரசியல் செய்துகொண்டிருப்பீர்கள்? இஸ்லாமியராகப் பிறப்பதே தவறா?’’ என்று கொந்தளித்தார் தயாநிதி மாறன்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி, சட்டத் திருத்த தேவைக்கான காரணங்களாக பா.ஜ.க சொல்லிவரும் அம்சங்களை மறுத்துப்பேசுகிறார். அவர் பேசும்போது, “பாகிஸ்தானை ஒப்பிட்டுச் சொல்லித்தான் இந்த சட்டத் திருத்தத்தையே கொண்டுவருகிறார்கள். பாகிஸ்தான் என்பது ஓர் இஸ்லாமியக் குடியரசு. அங்கே மக்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ராணுவ அதிகாரத்தின்கீழ்தான் அந்நாட்டின் அரசாங்கமே நடைபெற்று வருகிறது. அப்படியிருக்கும்போது, பாகிஸ்தானோடு இந்தியாவை ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது.
இந்து மதத்தில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய உயர் சாதி அல்லாத பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பட்டியலின மக்களிடம் நிலம், கல்வி, சிறுகுறு தொழில்கள் இருக்கின்றன. இந்த மூன்றையும் நம்பித்தான் நாடும் இருக்கிறது. எனவே, இந்த மூன்றையும் ஒவ்வொன்றாகப் பறித்து, மக்களை நடுத்தெருவில் நிறுத்துவதற்காக ஒவ்வொறு முயற்சியையும் செய்துவருகிறார்கள்.
விவசாயிகளிடமுள்ள விளை நிலங்களை அவர்களது ஒப்புதல் பெறாமல் அரசே எடுத்துக்கொள்ளும் ‘நில அபகரிப்பு சட்ட’த்தை அமல்படுத்துவதற்காக பலமுறை முயன்றார்கள். ஆனால், காங்கிரஸின் கடும் எதிர்ப்பினால், அந்த முயற்சியை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனாலும் வேளாண்மைத் துறைக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்காமல், விவசாயிகள் தானே விளைநிலங்களை விட்டுவிட்டுச் செல்லும் மறைமுகத் தாக்குதலை மத்திய பா.ஜ.க அரசே செய்துவருகிறது.
கல்வியைப் பொறுத்தவரை, நீட் தேர்வைக் கொண்டுவந்து சாமான்யர்களின் மருத்துவப் படிப்பை ஒழித்துக்கட்டி, பணக்காரர்களுக்கானது மட்டுமே என்று மாற்றியமைத்தார்கள். அதிலும்கூட பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டிவிட்டார்கள். அடுத்து, புதியக் கல்விக்கொள்கை என்ற பெயரில், ஒட்டுமொத்தமாக கல்வி கற்கும் வாய்ப்பையே தடுக்கின்றனர்.
நாட்டிலுள்ள முக்கியமான துறைமுகங்கள் எல்லாமே அதானி குழுமத்துக்கே போய்விட்டது. ஏன் இந்த நாட்டில் வேறு யாரும் டெண்டரே கோரவில்லையா? சுருக்கமாகச் சொன்னால், மறுபடியும் இந்தியாவை ‘மனு நீதி’க்குள் இழுத்துச்செல்வதுதான் இவர்களின் நோக்கம். அதற்கான வேலைகளை ‘இந்து’ என்ற முகமூடியை அணிந்துகொண்டு செய்துவருகிறார்கள் இந்த ஆட்சியாளர்கள்’’ என்கிறார் கோபமாக.