ஓட்டுக்களை பிரிக்கும் அமமுக அதிர்ச்சியில் அதிமுக..! வெளிவந்த கருத்துக்கணிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதியும் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், வெற்றி பெறும் முனைப்பில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அதேசமயம், தேர்தலில் மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை அறியும் பொருட்டு தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், ஜெகத் கஸ்பரின் டி-இண்டலிஜன்ஸ் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த கருத்துக்கணிப்பு கடந்த 7 முதல் 24ஆம் தேதிக்குட்பட்ட கால இடைவெளியில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திமுக கூட்டணி 167க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 51க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும், அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெறும், 14 தொகுதிகளில் கடுமையான போட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை, திமுக கூட்டணிக்கு 46 சதவீதம், அதிமுக கூட்டணிக்கு 34 சதவீதம், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 5 சதவீதம், நாம் தமிழர் கட்சிக்கு 7 சதவீதம், அமமுகவுக்கு 4 சதவீதம், இதர மற்றும் நோட்டாவுக்கு 4 சதவீதம் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் அதிமுக 10 சதவீத வாக்கு வங்கியை இழக்கும் என்றும், திமுகவின் வாக்கு சதவீதம் 7ஆக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக-&பாஜக கூட்டணிக்கு எதிராக இருந்த அதிருப்தி அலை தற்போது இல்லை. குறிப்பிடத்தக்க பிரசார வியூகங்களால் ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் நிலைப்பாட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி அரசு தப்பித்துள்ளது என்றும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது அதிமுகவுக்கு சற்று ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.
சசிகலா, டிடிவி தினகரனுடன் அதிமுக அரசு சமாதானமாக சென்று, பாஜகவின் சுமையை ஏற்காமல் இருந்திருந்தால் கோட்பாட்டு ரீதியாக அதிமுக அரசுக்கு வெற்றி கிடைத்திருக்க வாய்ப்பிருந்திருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுகவும் அதன்கூட்டணிக்கட்சி வேட்பாளர்களும் தோற்கும் இடங்களில் எல்லாம் தினகரனின் அமமுக வேட்பாளர்கள் வாங்கும் ஓட்டுகள் தான் காரணம். இந்தத் தேர்தலில் அதிமுக தோற்பதற்கு முக்கிய காரணமே தினகரனின் அமமுகதான் என்பது தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு தான் அதிமுக நிர்வாகிகளுக்குத் தெரியவரும்.
சசிகலா சிறையிலிருந்து வெளிவந்த போது அவருக்குக் கிடைத்த வரவேற்பை பார்த்தாவது அதிமுகவினர் சசிகலாவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என்று யோசித்திருக்க வேண்டும். பழனிச்சாமி தனது சுயநலத்தால் சசிகலாவை ஒதுக்கி தானே தலைமை என்ற கர்வத்தோடு செயல்பட்டதன் விளைவு தான் இன்று ஆட்சியை இழந்தோம் என்று தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் உணர்வார். பாஜகவின் ஆசி நமக்கு இருக்கிறது சசிகலாவின் செல்வாக்கு தேவை இல்லை என நினைத்ததன் விளைவுதான் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் கருத்துக் கணிப்பு முடிவுகள் பாரதிய ஜனதாவின் மிரட்டலுக்கு பயப்படாமல் சசிகலாவின் துணையோடு பழனிச்சாமி தேர்தலை சந்தித்து இருந்தால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்திருக்கும். ஆனால் பாஜகவின் ஆசியால் அதிமுக தோல்வியை சந்தித்திடும் என்பதாகவே கருத்து கணிப்பு முடிவுகள் உணர்த்துகின்றன.
– நமது நிருபர்