‘போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கருணாநிதி’ : சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் புகழாரம்
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார்.
விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட கருணாநிதி உருவச்சிலையை திறந்து வைத்தார்.
பின்னர் பூக்கள் தூவி மரியாதை செலுத்தி அவர் பேசியதாவது:-
தலைவர் கருணாநிதி நம்மை எல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திச் சென்ற பின்னர், அவரது சிலை அறிவாலயத்தில் அமைக்கப்பட்டது. அதில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் வந்து கலந்து கொண்டது உங்களுக்கு தெரியும். அடுத்து அவரது குருகுலமான ஈரோட்டிலும், 3-வது அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சீபுரத்திலும் சிலைகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து திருச்சியில் திறக்கப்பட்டது. பின்னர் கலைஞரின் மூத்த பிள்ளையாக விளங்கும் முரசொலி வளாகத்தில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு தலைவரின் சிலையை திறந்து வைத்தார்.
இங்கு சிலை அமைக்கும் முன்பு பல்வேறு போராட்டங்கள் இருந்தன. தலைவர் வாழ்வே போராட்ட களம்தானே. அவர் மாணவர் பருவத்தில் இருந்தபோது திருவாரூரில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்க சென்றார். ஆனால், அவரை சுயமரியாதைக்காரன், சீர்திருத்தவாதி என்று கூறி சேர்க்கை மறுக்கப்பட்டது. ஆனால், மனம் தளராத அவர் அருகில் உள்ள கமலாலயம் குளத்தில் சென்று நின்று கொண்டு படிக்க இடம் தரவில்லை என்றால் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று முதல் போராட்டத்தை தொடங்கினார். அவரது உறுதியையும் போராட்ட குணத்தையும் பார்த்து அவருக்கு படிக்க இடம் கொடுத்தார்கள்.
எனது தாயார் தயாளு அம்மாளை திருமணம் செய்து கொண்ட நாளில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. திருமணத்துக்கு முன்னர் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று மாலையும் கழுத்துமாக சென்று போராட்டத்தில் பங்கேற்று வந்த பிறகே திருமணம் செய்து கொண்டார். மொழிப்போராட்டத்தின் போது டால்மியா புரம் பெயரை மாற்ற ரெயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து, ரெயிலை மறித்து போராட்டம் நடத்தி, கல்லக்குடி என்ற பெயர் மாற்றம் செய்தார்.
1966-ம் ஆண்டு மொழிப்போராட்டத்தில் பங்கேற்றதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் தனிமைச்சிறையில் வாடினார். அவர் தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்டது. நெருக்கடி நிலையை தலைவர் கருணாநிதி எதிர்த்தார். அப்போது பிரதமர் அன்னை இந்திராகாந்தியின் தூதுவர்கள் 2 பேர் கோபாலபுரம் வந்து, நெருக்கடி நிலையை ஆதரிக்காவிட்டாலும் எதிர்க்க கூடாது என்றும், எதிர்த்தால் ஆட்சி கவிழ்க்கப்படும் என்றும் எச்சரித்தார்கள். எங்கள் மொழிக்காக உயிரையும் கொடுப்போம், ஆட்சி எங்களுக்கு முக்கியம் இல்லை என்று கூறியவர், கடற்கரையில் நடந்த கூட்டத்தில் நெருக்கடி நிலையை எதிர்ப்போம் என்று அறிவித்தார். ஆட்சி பறிபோனது.
இதுமட்டுமா? வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, அவர் மறைந்தபோது 6 அடி இடத்துக்காக போராடிதானே மெரினா கடற்கரையில் ஓய்வு எடுக்கிறார். தமிழக மக்களுக்காக ஓய்வில்லாமல் போராடிய தலைவருக்கு, 5 முறை முதல்-அமைச்சராக இருந்தவருக்கு 6 அடி நிலம் கொடுக்க தற்போது ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்கள் மறுத்தார்கள். தமிழை செம்மொழி பட்டியலில் அறிவித்தவருக்கு அ.தி.மு.க. அரசு இடம் இல்லை என்றது.
தற்போது மேலவை எம்.பி.யாக இருக்கும் வக்கீல் வில்சன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, வழக்கில் வெற்றி பெற்றுதான், நாம் இடம் பெற்றோம். ஆக, வாழ்ந்த காலத்திலும், வாழ்வுக்கு பின்னரும் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கருணாநிதி.
நாம் தலைவரை இழந்து ஒரு ஆண்டு கடந்து, 2-வது ஆண்டில் இருக்கிறோம். இந்த காலக்கட்டத்தில் தமிழக, இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, நீதிபதிகள், துணை வேந்தர்கள், சமூக நீதிக்காவலர்கள் என்று அனைத்து தரப்பினரையும் வைத்து புகழ் அஞ்சலி செலுத்தி இருக்கிறோம். ஆனால், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. முதல்-அமைச்சராக இருந்தபோதே இறந்தார். அவரது பெயரில், ஆட்சி நடத்துகிறவர்கள் ஒரு புகழ் அஞ்சலி கூட்டம் நடத்தி இருப்பார்களா?.
அரசியல் ரீதியாக நமக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால், அவருடைய படத்தை வைத்துக்கொண்டு கொள்ளையடித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு கூட்டம் நடத்தக்கூடவா முடியவில்லை. ஈரோட்டில் 2-வது சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் அரசின் அனுமதியுடன், முறைப்படி கருணாநிதி சிலைகள் வைக்கப்படும்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். முன்னதாக ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி வரவேற்று பேசினார்.
–செந்தில்குமார்