அமித்ஷா முன்னிலையில், பாஜக, அதிமுக கூட்டணியை உறுதி செய்த அண்ணாமலை !
சமீப காலங்களாக எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்களை குறிவைத்து, வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் பாஜகவும் அதிமுகவும் ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டதாக புதுய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை எல்லா வழிகளிலும் முயற்சி செய்தும் கூட டெல்லி தலைமை கண்டுகொள்ளவில்லை. தனக்கு தானே சவுக்கால் அடித்தும் செருப்பை இனி அணியப்போவதில்லை எனவும் சபதம் எடுத்தார். இந்தநிலையில் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரரின் காலில் விழுவதே மேல் என்கிற பழமொழிக்கேற்ப, எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனை சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தையில் அண்ணாமலை ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிச்சாமி உச்ச பதவிக்கு வந்துள்ளார். அவருடன் என்னை ஒப்பிட முடியாது. நமது சமுதாயத்தில் எடப்பாடி பழனிச்சாமி உயர்ந்த பதவியில் இருப்பதால், நமது சமுதாயத்திற்கே பெருமை ஏற்பட்டுள்ளது. இடையில் நடந்த கசப்பான அனுபவத்தை மறந்துவிட்டு மீண்டும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். வருமான வரித்துறை நடத்தும் சோதனைகளை எல்லாம் நிறுத்திவிடலாம் என அண்ணாமலை மிதுனிடம் பேசியதாக கட்சி வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இதனையடுத்து மிதுனை மூன்று முறை டெல்லிக்கு அழைத்துச் சென்று அமித்ஷாவிடம் அண்ணாமலை பேச வைத்துள்ளார். இதில் ரகசிய உடன்பாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. என்னால் தான் அதிமுக கூட்டணி உடைந்தது. இனிமேல் அதிமுக நம்முடன் சேராது என அனைவரும் கூறிவரும் நிலையில், அவரது மகனையே நான் அழைத்து வந்துவிட்டேன் என டெல்லி மேலிடத்தில் அண்ணாமலை கூறியதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் இனிமேல் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேச மாட்டேன் என டெல்லியிடமும் எடப்பாடி பழனிசாமியிடமும் அண்ணாமலை உறுதி அளித்ததாகவும் தெரிய வருகிறது. மூன்று மாதம் அவகாசம் கொடுக்குமாறும் தமிழகத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மிதுன், அமித்ஷாவிடம் கூறியதாக பேசப்படுகிறது. இதனை அமித்ஷா கேட்டுக்கொண்டு, சம்மதம் தெரிவித்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அண்ணாமலையே தொடர வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இதனை தெரிந்துகொண்ட வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் தலைவர் பதவி போட்டியில் இருந்து விலகி கொண்டனர். நயினார் நாகேந்திரனும் போட்டியில் இருந்து விலகிவிடுவார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுனும் சந்தித்து பேசியது உண்மை தான். இதில் கூட்டணி சேருவது என்பது 90 சதவீதம் உறுதியாகிவிட்டது. மிதுனுக்கு மிகவும் நெருங்கிய உறவினரின் ஈரோட்டில் உள்ள வீட்டில் நடந்த சோதனைக்கு பின்னரே இந்த சந்திப்பு நடந்துள்ளது. அவர் எடப்பாடி பழனிசாமிக்கும் முக்கிய நபராக இருந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது உள்ள நிலையில் விரைவில் பாஜகவும் அதிமுகவும் கூட்டு சேரும். அண்ணாமலையும் தொடர்ந்து தலைவர் பதவியில் இருப்பார் என்கிறார்கள்.
இந்நிலையில் எடப்பாடியை நம்பி கூட்டணியில் இருக்கும் எஸ்டிபிஐ கட்சியின் நிலைமை அதோ கதியா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.