தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் சமீபகாலங்களாக அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் காஞ்சிபுரத்தில் பணத்தை வங்கியில் செலுத்த சென்று கொண்டிருந்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளரை கொலை செய்துவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். சில தினங்களுக்கு முன் திருப்பூர் அருகே முதலிப்பாளையம் சிட்கோ செல்லும் வழியில் இருக்கும் டாஸ்மாக் கடயில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விற்பனையான 10 லட்சம் பணத்தை அந்த கடையின் மேற்பார்வையாளர் வங்கியில் செலுத்துவதற்காக கடையிலிருந்து வெளியே வந்த போது அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்று விட்டனர்.
இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது தொடர்ந்து நடந்தவண்ணம்தான் இருக்கிறது. இது சம்பந்தமாக டாஸ்மாக் ஊழியர்கள் நமது நிருபரிடம் கூறுகையில், டாஸ்மாக் ஊழியர்களை பணியில் சேர்த்து 18 வருடங்கள் ஆகிறது. தமிழகம் முழுவதும் 28 ஆயிரம் டாஸ்மாக் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறோம். இதுநாள் வரை தற்காலிகப் பணியாளர்களாகத்தான் பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட தமிழக அரசு வழங்கவில்லை.
டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பல இடங்களில் உணவு வாங்குவதற்கும் உண்பதற்கும் வசதிகள் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். சில இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூட சிரமப்பட்டு வருகிறார்கள். கடைகளில் வியாபாரம் முடிந்த பிறகு கணக்கு வழக்குகளைப் பார்ப்பதற்கு இரண்டு மணிநேரம் ஆகிறது. இரவு நேரங்களில் பணத்தைப் பாதுகாப்பதற்கு பெட்டக வசதிகள் இல்லாததால் ஊழியர்கள் தூங்காமல் விடிய விடிய பணத்தை பாதுகாக்க வேண்டியுள்ளது. இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.
பணத்தை எடுத்துக் கொண்டு வங்கியில் செலுத்துவதற்காகச் செல்லும் போது திருடர்கள் பணத்தை பறித்துச் சென்று விடுகிறார்கள். டாஸ்மாக் கடைகளில் உடையும் மதுபாட்டில்களுக்கு நாங்கள் தான் பணம் செலுத்த வேண்டியுள்ளது. ஏற்கனவே தற்காலிக பணியாளர்களாகத் தான் வேலை பார்த்து வருகிறோம். நாங்கள் வாங்கும் குறைந்த ஊதியத்தில் குடும்பம் நடத்தவே சிரமப்பட்டு வருகிறோம்.
தமிழக அரசு அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனையாகும் பணத்தைப் பாதுகாப்பு பெட்டகம் அமைத்து தருவதுடன் உடையும் பாட்டில்களுக்கு இன்சூரன்ஸ் செய்து கொடுக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார்கள்.
டாஸ்மாக் ஊழியர்களில் பெரும்பாலானோர் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பல இடங்களில் புகார்கள் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு ஒரு சில அதிகாரிகளும் துணைபோகிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. தற்போது புதிதாக அமைந்திருக்கும் தமிழக அரசு நேர்மையான அதிகாரிகளை நியமித்து லஞ்சத்தை தவிர்த்து டாஸ்மாக் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே பெரும்பாலான ஊழியர்களின் மனநிலையாக தெரிகிறது.